முச்சந்தி

ஜெர்மனியிலிருந்து அமெரிக்க படை விலகல்… நேட்டோ முறுகலின் உச்சகட்டம் ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஜெர்மனியிலிருந்து ஐந்து ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை விலத்திக் கொள்வதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விலகல் அறிவிப்பு நேட்டோ (NATO) முக்கிய உறுப்பினரான ஜெர்மனிக்கு அதிபர் டிரம்பின் நேரடிப் பதிலடியாக அமைந்துள்ளது.
நேட்டோ அதிர்ச்சி:
இந்த திடீர் முடிவு ஐரோப்பிய நேட்டோ கூட்டமைப்பு நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதற்ற நிலையை ஏற்படுத்தியதுடன், அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நீண்டகாலக் கூட்டணி உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தப் படை விலகல் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நேட்டோ அமைப்பு திட்டமிட்டுள்ளது. மேலும் ஈரான் போர் விவகாரத்தில், நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தராததுதான் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.  அத்துடன் டிரம்ப் நிர்வாகம், நேட்டோ நாடுகள் தங்களின் தற்காப்புச் செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க வீரர்கள் வாபஸ்:
ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ அமைப்புடன் வெடித்த சர்ச்சைக்குரிய கருத்து மோதலால் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போர் விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார்.
வளைகுடாவில் கடந்த இரண்டு மாதங்களாக நீடிக்கும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்காவை ஈரான் அரசாங்கம் அவமானப் படுத்துவதாக ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) விமர்சித்திருந்தார். இந்த வார்த்தைப் போருக்குப் பிறகே அதிபர் டிரம்ப் ஜெர்மனிக்கான படைகளைக் குறைக்கும் அச்சுறுத்தலை விடுத்து உள்ளார்.
அதேவேளை அமெரிக்கா படைகளை ஜெர்மனியிலிருந்து வெளியேற்றி ஈரான் நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரத்தில் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது.
ஈரான் போர் தொடர்பாக அதிபர் டொனல்ட் டிரம்புக்கும் ஜெர்மானிய அதிபர் பிரைட்ரிக் மெர்ஸுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. பாகிஸ்தானில் அமைதிப் பேச்சில் கலந்துகொண்ட ஈரானியப் பிரதிநிதிகளால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டது என்று திரு மெர்ஸ் கூறியிருந்தார். அதற்காக அவரைத் திரு. டிரம்ப் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து ஜேர்மனிய அரசும், அதிபர் மெர்ஸ் மோசமாகப் பணியாற்றுகிறார் என்று திரு டிரம்ப் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு இருந்தார். ஜேர்மன் நாட்டில்
குடியேறிகள் விவகாரம், எரிசக்தி உட்பட அவருக்குப் பல பிரச்சினைகள் உள்ளன என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
ஜெர்மனியில் அமெரிக்கத் துருப்பு
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி ஜெர்மனியின் பல்வேறு தளங்களில் அமெரிக்கத் துருப்பினர் 36,000க்கும் அதிகமானோர் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அடுத்த ஆறு மாதம் அல்லது ஓராண்டில் துருப்பினரை மீட்டுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவடையலாம் என்று அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜெர்மனியிலிருந்து மட்டுமல்ல
இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறப் போவதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் உள்ள ராணுவ நிலையைப் பற்றி ஆழமான மறுஆய்விற்குப் பிறகு அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் சான் பார்னெல் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் அமெரிக்கா படை குறைப்பு:
ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா படைகளை குறைக்கிறது என்பது நீண்ட கால விவாத்திற்கு உரியது.
இதற்கு பல காரணங்களை அமெரிக்க அரசு முன்வைக்கிறது. குறிப்பாக நேட்டே உறுப்பினர் நாடுகளின்
பாதுகாப்புச் செலவினம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜேர்மன் நாட்டின் நேட்டோ இலக்கான 2% (GDP) பாதுகாப்பு செலவை நீண்டகாலமாக எட்டவில்லை என்ற குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
அதேவேளை அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவது தந்திர நடவடிக்கை மாற்றம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா தற்போது சீனா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிக்கு கூடிய கவனம் செலுத்துகிறது என்ற கருத்தும் உள்ளது. எனினும் நேட்டோவில் உச்சக் கட்ட முறுகல் நிலை உள்ளது என்பதை டிரம்பின் தற்போதைய நடவடிக்கை காட்டுகிறது.
நேட்டோ முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் கூட்டணியாகும். ஆனால் தற்போதைய உலக சூழலில் கருத்து வேறுபாடுகள் இயல்பாக இருந்து வருகின்றன. உக்ரைன் போரின் பிறகு, நேட்டோ அமெரிக்க கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. டிரம்ப் புட்டின் உறவு தொடர்பாக நேட்டோ அமைப்பில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
அமெரிக்க படைகள் விலகினால் நேட்டோவுக்காக ஜெர்மனி பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்க நேரிடும்.
இது முழுமையான மாறும் தந்திர செயலாகும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். தொடரும் படை விலகலால் ஜெர்மனிக்கு தாக்கம் ஏற்படலாம். அமெரிக்க படைகள் குறைந்தால், ஐரோப்பா தனது பாதுகாப்பை தானே மேம்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்
(European Union) பாதுகாப்பு ஒருங்கிணைப்பை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
அத்தகைய சூழ்நிலையில் ஜெர்மனி தனது இராணுவத்தை (Bundeswehr) மேம்படுத்த முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஆனாலும் அமெரிக்க படைகள் முழுமையாக நேட்டோ அமைப்பில் இருந்து விலகாது. ஜெர்மனியை தொடர்ந்தும் முக்கிய தளமாக பயன்படுத்தும். எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. அமெரிக்க அரசின் துணையின்றி சொந்தக் காலில், சொந்த பாதுகாப்பில் தங்கியிருக்க நிலை ஏற்படும்.
நேட்டோ ஒரு காகிதப் புலி:
அதேவேளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) என விமர்சித்துள்ளதுடன், ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ போரில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதே ட்ரம்பின் முக்கிய ஆதங்கமாக இருக்கிறது.
நாங்கள் உதவி கேட்டபோது அவர்கள் நண்பர்களாக நடந்து கொள்ளவில்லை. எனவே நேட்டோவில் நீடிப்பது குறித்து நாங்கள் எடுக்கும் முடிவு வெறும் பரிசீலனை மட்டுமல்ல, அதற்கும் மேலானது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு ஒரு ஆபத்து என்றால் நாங்கள் ஓடிச் சென்று பாதுகாக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு தேவை வரும்போது தங்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அவர்கள் ‘இல்லை’ என்று சொல்கிறார்கள். இது ஒரு ஒருதலைப்பட்சமான உறவு என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ சாடியுள்ளார். அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மார்கோ ரூபியோவும் ட்ரம்பின் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் மீதான போர் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள நிலையில், தமக்கு உதவாத நேட்டோ (NATO) கூட்டமைப்பு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.
தற்போது அமெரிக்கவிற்கு உதவாத நேட்டோவிற்கு இருண்ட எதிர்காலம் எனவும் அவர் கூறியுள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவைக் கடுமையாகச் சாடிய டிரம்ப் இந்த இராஜதந்திர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் எவ்வித கட்டாயமுமின்றி நாம் அவர்களுக்கு உதவினோம். ஆனால், தற்போது ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவர்கள் உதவாவிட்டால், நேட்டோ பாரியதொரு இருண்ட எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும். நான் நீண்டகாலமாகக் கூறிவருவதைப் போல நேட்டோ என்பது ஒரு வழிப்பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு டிரம்ப் நேட்டோ மீதான கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கல் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button