செம்மணிப் புதைகுழியில் அதிர்ச்சி; குழந்தைகளின் எலும்புக் கூடுகள் வரத் தொடங்கியது; நேற்றும் 5 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் மேலுமொரு என்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் எட்டாம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் நடைபெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அகழ்வின்போது ஐந்து என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உள்ளிட்ட இரண்டு என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 255 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 249 மனித என்பு கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண்ணிற்குள் இருந்து எரிந்த நிலையில் சில என்புகளும், சில நாணய குற்றிகளும், தங்க ஆபரணம் என கருதப்படும் பொருளும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டு நீதிமன்ற கட்டடுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் என்பு கூட்டு தொகுதி நேரடியாக மண்ணில் இருந்து அகழ்ந்து எடுக்க முடியாத நிலைமை காணப்பட்டமையால், அதனை பண்டேஜ் துணிகளால் சுற்றி பக்குவப்படுத்தி மண்ணுடன் அகழ்ந்து எடுக்கப்படது.
அதேவேளை சவப்பெட்டி இருந்ததாக சந்தேகிக்கப்படும் உடலமும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது – என்றார்.
![]()