இலங்கை

ஒருநாள் விவாதம் கேட்டதால் சபையில் வெடித்தது சர்ச்சை;  ஒன்றரை மணி நேரமே வழங்கப்பட்டது 

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் விவகாரம் தொடர்பில் சபையில் ஒருநாள் விவாதத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சியின் சகல எம்.பிக்களும் எழுந்து நின்று கோரிக்கை விடுத்ததால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதை தொடர்ந்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணங்கள் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் தினப் பணிகள் ஆரம்பமான போதே இவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் தினப் பணிகள் ஆரம்பமான போது விசேட கூற்றை முன்வைத்து எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திறைசேரி விவகாரம் தொடர்பில் நாங்கள் இந்த பாராளுமன்ற வாரத்தில் ஒருநாள் விவாதத்தை கோரியிருந்தோம். அதனை அரசாங்கம் நிரகாரித்திருந்தது. ஆனால் நாங்கள் 20 பேர் இப்போது இந்த சபையில் எழுந்துநின்று அதற்கான கோரிக்கையை விடுக்கின்றோம். அதன்படி விவாதத்திற்கு அனுமதி வழங்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியில் இருந்த சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று அதற்கான கோரிக்கையை விடுத்தனர்.

இவ்வேளையில் சபாநாயகர், நிலையியல் கட்டளைகளை சுட்டிக்காட்டி இவ்வேளையில் விவாதத்தை வழங்குவதில் இருக்கும் சிக்கல்கள் தொடர்பில் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியும். ஆனால் இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதன்படி 3.30 மணி முதல் 5 மணி வரையில் இதற்கான அனுமதியை வழங்க முடியுமென்று கூறினார். இதேவேளை சபாநாயகர் 3.30 மணி முதல் 5.30 வரையில் அதனை நடத்த முடியும் என்று கூறினார். பின்னர் 5 மணி வரையில் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் முரண்பட்டதுடன், முன்னர் ஒரு நேரத்தையும் பின்னர் ஒரு நேரத்தையும் வழங்குவதாக கூறினர். இதன்போது நாங்கள் இடமளித்த நிலையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் ஏன் கூச்சலிடுகின்றனர் என்று ஆளும் கட்சி பிரதம கொரடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்தும் எதிர்க்கட்சியினர் எழுந்து நின்று ஒன்றரை மணித்தியாலம் இதற்கு போதுமானது இல்லையென்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. மீண்டும் சபை முதல்வர் இந்த தீர்மானத்தில் மாற்றம் செய்ய முடியாது. நீங்கள் சபாநாயகருக்கு எதிராக வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் குழப்பிக்கொண்டிருந்தால் விவாதத்திற்கு வழங்கிய அனுமதியை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தார்.

இதேவேளை எதிர்க்கட்சியினர் வழங்கப்பட்ட நேரம் போதாது என்று தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அரசாங்கம் தமது நேர விடயத்தில் உறுதியாக இருந்ததால் எதிர்க்கட்சியினர் அதனை ஏற்றுக்கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button