வேரூன்றி விருட்சமாய்ப் பயன்தர அக்கினிக்குஞ்சுக்கு வாழ்த்துரை

ஆண்டுகள் 16 என்பது வெறும் கணக்கு. ஆனால், அதன் அர்ப்பணிப்பு என்பது இமயம் தொடத்தக்கது. தூக்கம் தொலைத்து, ஓயாது உழைக்க இந்தப் பிரபஞ்சம் சிலருக்கு மட்டுமே சில கடமைகளை ஒப்படைக்கும். அதற்கு வரம் கிடைத்தவர்களே தொடராகப் பணி செய்ய முடியும். மற்றையவர் இடையிலே பணி தொலைத்து ஓய்ந்து விடுவர். யாழ் எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு இணையத்தளத்தைப் பராமரிப்பது பாரிய கடமையாகும். உயரிய நற்கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகள், காணொளிகள், கவிதைகள், சிறுகதைகள், கழுகுப் பார்வையில் தேடிய எழுத்தாளர்களின் விபரங்கள் ஆகியவற்றை அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் பதிவுசெய்து வருவது பாரிய பணி.
இவ்வாறு தான் வாழுகின்ற வாழ்க்கையிலே தாம் விரும்பி ஏற்ற தமிழ்ப் பணியை தலைமேல் கொண்டு உழைப்பார் உலகின் உச்சத்தில் வைத்துப் போற்றப்படக் கூடியவர்கள். அவ்வாறான ச. பாஸ்கரதாஸ் அவர்கள் “மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்” என்னும் கண்ணதாசன் வரிகளுக்கு ஒப்ப உலகத்தவரால் போற்றப்படக் கூடியவர்.
“மாபெரும் சபைதனில் நீ நடந்தால்
மண்டியிட்டுப் பணியாதே!
தாளாத குற்றங்கள் கண்டால்
தட்டிக் கேட்க அஞ்சாதே!”
என்று பாரதிதாசன் கூற்றுக்கு இணங்க அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தை 16 வருடங்களாக நடத்திக் கொண்டிருக்கும் யாழ் எஸ்.பாஸ்கர் அவர்கள் தமிழுக்காக ஆற்றுகின்ற பணி பாராட்டத்தக்கது. தமிழைத் தம்மிரு கண்களாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருப்பார்க்கு வாழும் போதே வாழ்த்துகின்ற உயரிய பணியை மேற்கோண்டிருப்பது மெச்சத்தக்கது. அத்துடன் இசைக்கு இசையாதார் யாருண்டு?
“காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்”
என்று பாரதி பாடியது போல இசையின் மேன்மையில் பற்றுக் கொண்டு அவுஸ்திரேலியாவில் வாழுகின்ற இளம் பாடகர்களைத் தெரிவு செய்து ஒவ்வொரு வருடமும் அக்கினிக்குஞ்சு விழா எடுத்துத் துறை தேர்ந்த இசைமேதைகளை அழைத்து திறமையைத் தெரிவு செய்து விருது வழங்கி வருவதுடன், சிறந்த பாடகர்களை இலங்கை இந்திய போன்ற நாடுகளில் இருந்து அழைத்து வந்து மேடையேற்றிப் பெருவிழா எடுக்கின்றார். இது இசைக்கும் இசைக் கலைஞர்களுக்கும் இவர் கொடுக்கும் ஆத்மார்த்தமான பற்றும், மதிப்பும் என்றே சொல்ல வேண்டும்.
“மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.
இவ்வாறு தனக்காக வாழாமல் பிறருக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிக்கின்ற உத்தமப் பெருந்தகையாகிய யாழ் எஸ்.பாஸ்கர் அவர்கள் பிறரை வாழ்த்தும் போது தான் பெருமை கொள்வதுடன் உள்ளூர மகிழ்ச்சி அடைகின்றார். இவ்வாறு மனம் வாய்க்கப்பெறல் அரிதிலும் அரிது. நான் இவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி கொள்கின்றேன்.
“எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம் பரிதிமுன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்!”
என்னும் பாரதி வரிகளை முன் வைத்து யாழ் எஸ்.பாஸ்கர் அவர்கள் நடத்துகின்ற இணையத்தள வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும், 16 ஆவது ஆண்டு விழா சிறப்புக்கும், பரிசில்கள் பெரும் இளையவர்களுக்கும், விருது பெரும் அறிஞர்களுக்கும் மனதார வாழ்த்துகின்றேன்.
வாழ்க பல்லாண்டு
வளர்க நற்சிந்தனை
உயர்க தமிழ்ப்பணி
என்று வாழ்த்தி மகிழும் இவள்
சந்திரகௌரி சிவபாலன் (கௌசி)
தமிழ் வான் அவை நிறுவுனர்
ஜெர்மனி


![]()