மாகாண சபைத் தேர்தல்,13 பற்றி ஆர்வம் காட்டிய தூதுவர்கள்; தமிழரசுக் கட்சியின் மட்டு.முக்கியஸ்தர்களுடன் சந்திப்பு

கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் தமிழரசுக்கட்சிக்குமிடையிலான் சந்திப்பில் மாகாணசபைகளுக்கான தேர்தல் பற்றியும், 13ஆவது திருத்தத்தைப் பற்றியும்தான் கனடா பிரித்தானிய உயர்ஸ்தானிகர்கள் ஆர்வம் காட்டியதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.க்கள் தெரிவித்தனர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற போது இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா,இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் ஆகியோரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.க்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார்,முன்னாள் முதல்வர் தி.சரவணபவன்,தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை மற்றும் வடகிழக்கில் காணப்படும் அரசியல் சூழ்நிலை குறித்து கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் மாகாணசபை தேர்தல் தொடர்பிலும்,13ஆவது திருத்த சட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.ஞா.சிறிநேசன்,
“பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனடிய உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரையும் நாங்கள் சந்தித்துக் கதைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன , வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகள் என்ன என்கின்ற விடயங்களைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். அதில் அரசியல் சம்பந்தமான தீர்வு பற்றிய விடயங்களும் அமைந்திருந்தன.
அதேபோன்று இந்த பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், இந்தப் பிரதேசம் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றிய பல விடயங்களை நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.அவர்களும் ஆர்வமாக இந்த விடயங்களைக் கேட்டிருந்தார்கள், தங்களால் சொல்லக்கூடிய பதில்களை, தங்களால் முடிந்த பதில்களைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
பெரும்பாலும் கிழக்கு மாகாண தேர்தல் பற்றியும், 13ஆவது திருத்தத்தைப் பற்றியும்தான் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்கள்.
இருந்தாலும் நாங்கள் உரையாடியபோது அவர்கள் மிகவும் ஆர்வமாகவும் திருப்தியாகவும் இந்த பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளையும், செய்ய வேண்டிய அபிவிருத்தி பற்றிய விடயங்களையும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும், கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகள் பற்றியும் கூறியிருந்தார்கள். இவைதான் சுருக்கமாகச் சொல்லக்கூடிய விடயங்கள் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன்,உயர்ஸ்தானிகர்களுடன் இந்த பல விடயங்கள் பேசப்பட்டன . இதிலே மிக முக்கியமாக எடுத்துரைக்கக்கூடிய ஒரு விடயம் என்று பார்த்தால், எங்களுடைய இந்த சந்திப்பின் பொழுது கிழக்கு மாகாணத்துக்கும் இலங்கையிலே ஏனைய பகுதிகளுக்கும் இடையிலே இணைப்பினை ஏற்படுத்தும் வகையிலான அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினோம். அதாவது ஒரு துறைமுகம் இல்லை, விமான நிலையங்கள் இயங்கு நிலையில் இல்லை, ரயில் சேவை படுமோசமாக இருக்கின்றது.
எங்களுடைய அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்களோடு இணைத்து நாங்கள் எங்களுடைய பொருளாதாரம் விடயங்களிலும் அரசாங்கம் எதுவும் செய்வதாகவும் இல்லை, செய்யப்போவதாகவும் தெரியவில்லை.அந்த விடயங்களில் நாங்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம், சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கின்றது ஆனால் அந்த விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாத பட்சத்திலே, ஆகக்குறைந்த பட்சம் இந்த பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய சில விடயங்களையாவது முன் நகர்த்துமாறு நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம் என்றார்.
![]()