நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் மர்ம மரணம்; அதிக இரத்தம் வெளியேறி மரணித்தமை ஏன் கொலையாக இருக்கக் கூடாது ?; கேள்வி எழுப்புகிறார் கம்மன்பில

நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க நிஷாந்தவே திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போன சம்பவம் தொடர்பாக முதலாவதாக சீஐடியில் முறைப்பாடு செய்தவர் என்றும், இவரின் மர்மான மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிதி அமைச்சின் உதவி பணிப்பாளர் ரங்க நிஷாந்தவின் மரணம் தொடர்பான உடற்பகுப்பாய்வு பரிசோதனையை நீதிமன்ற விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவினாலேயே செய்யப்பட்டது. குறித்த மரணமானது வெட்டுக் காயங்கள் சிலவற்றில் அதிகளவில் இரத்தம் வெளியேறிய காரணத்தினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இது தற்கொலையாக இருக்கலாம் என்றும் அந்த குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் தானாகவே மரணித்தாரா அல்லது கொல்லப்பட்டரா என்பதனை உறுதிப்படுத்த முன்னர் இவ்வாறான முடிவுக்கு வர முடியுமா என்று பரிசோதனை குழுவிடம் கேட்கின்றேன்.
இதேவேளை இந்த மரணம் தொடர்பான சந்தேகம் அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கும் முன்னர் இது தற்கொலை என்று பொலிஸார் அறிவிப்பதற்கு முன்னர் இது தொடர்பான முழுமையான பரிசோதனையை செய்திருக்க வேண்டும்.
ரங்க நிஷாந்தவே குறித்த கணினி ஊழலை கண்டுபிடித்தார். அவரே குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டார். முதல் முறைப்பாடே பொலிஸ் ஆவணங்களில் முக்கியமானது. இதனால் முதலாவது முறைப்பாட்டாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை இது தொடர்பான விசாரணைகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறாகும். இதனால் இந்த மரணம் தொடர்பில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதனால் அவரின் மரணம் தற்கொலையா? வேறு ஏதேனும் வழியில் கொலையா? என்பதனை கண்டறிய வேண்டும். அவ்வாறு அன்றி இது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவுக்கு வர முடியாது.
ஒரு கையில் நரம்பை வெட்டிக்கொண்டவர் அந்த வேதனையில்,உடலில் மேலும் நரம்புகளை வெட்டிக்கொள்ள வாய்ப்பில்லை. அத்துடன் அவரின் மனைவி இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸில் முறையிட்டுள்ளார். இவ்வாறான நிலைமையில் முழுமையான உடற்கூராய்வு பரிசோதனையை நடத்த முன்னர் தற்கொலை என்ற முடிவுக்கு வரக் கூடாது என்றார்.
![]()