1977 சம்பவம் “மீண்டும் நிகழ்கிறது! ” எம்.ஜி.ஆரை மிஞ்சிய விஜய்.. திமுக-வுக்கு மீண்டும் அதே அடி!

சென்னை: 1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அரசியல் எப்படி ஒரு புயலால் சூழப்பட்டதோ அதேபோல் 2026லும் புயல் வந்துள்ளது. அப்போது பிரபல நடிகராகவும், மக்கள் மனதில் தெய்வமாகவும் விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்ஜிஆர்) தன் அரசியல் பயணத்தைத் தான் புதிதாக தொடங்கிய கட்சியை வைத்து தொடங்கி ஆட்சியை பிடித்தது போல் இன்று விஜய்யும் 2026ல் புதிதாக கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்க உள்ளார்.
அண்ணாதுரை மறைந்து 3 ஆண்டுகளுக்கு பின் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற புதிய கட்சி, கொடி, சின்னத்துடன் மக்கள் மத்தியில் இறங்கினார் எம்ஜிஆர். முதல் தேர்தலை 1977ல் எதிர்கொண்டு வெற்றிக்கண்டு சரித்திரம் படைத்தார். எதிர்க்கட்சியாக இருந்த திமுக கூட்டணி எதிராக பெறும் வெற்றியை பதிவு செய்தார் எம்ஜிஆர்.
அந்தத் தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக தனியாக 30.4% வாக்கு சதவீதத்தைப் பெற்று சுமார் 130 தொகுதிகளில் வெற்றி பெற்று, கூட்டணியுடன் சேர்த்து 144 இடங்களை கைப்பற்றியது. எதிர்த்து நின்ற திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 24.9% வாக்குகளுடன் வெறும் 48 இடங்களில் மட்டுமே வென்று தேர்தலில் தோல்வி அடைந்தது.
எம்ஜிஆரின் முதல் தேர்தலே அவரை முதலமைச்சராக்கியது. அது ஒரு மாபெரும் புரட்சியாக பார்க்கப்பட்டது.
காலம் வேகமாக ஓடி 49 ஆண்டுகள் கழித்து, 2026 தேர்தல். தமிழ்நாட்டின் அரசியல் அரங்கம் மீண்டும் புதிய புயலால் சூழப்பட்டிருந்தது. இம்முறை மற்றொரு முதல்தர நடிகர் விஜய். அவர் தன் ரசிகர்களின் அன்பை மூலதனமாக்கி, தமிழக வெற்றிக் கழகம் (த.மா.க வெற்றி கழகம் – TVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி (பெப்ரவரி 2, 2024) வெறும் 2 வருடத்தில் ஆட்சியை பிடிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
எம்ஜிஆர், திராவிட இயக்கத்தில் இளம் வயதில் இருந்தது மட்டும் அல்லாமல் அரசியலிலும் இருந்து அனுபவம் பெற்றவர். 1969ல் இருந்து பல்வேறு அரசு மற்றும் கட்சி பொறுப்புகளில் இருந்து வந்தார். ஆயினும் 1977 தேர்தலில் கூட்டணியில் சேர்ந்து தான் தேர்தல களம் கண்டார்.
ஆனால் விஜய் எந்தக் கூட்டணியும் இல்லாமல், தனித்து நின்று தேர்தல களம் கண்டார். விஜய்-யின் வருகையை பலர் கடுமையாக விமர்சனம் செய்தாலும் தனது ரசிகர்கள், இளைஞர்கள், புதிய தலைமுறை மாற்றத்தை எதிர்நோக்கும் மக்களை குறிவைத்து விஜய் செய்த பிரச்சாரம் வாக்கு மழையை தவெக காட்சியின் மீதும் அதன் வேட்பாளர்கள் மீதும் குவிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 107 இடங்களில் முன்னிலையில், அதிமுக 58 இடங்களிலும், திமுக 49 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எம்ஜிஆர் தன் முதல் தேர்தலில் 30.4% வாக்கு பெற்றதை விட, விஜயின் முதல் தேர்தலில் TVK 35%க்கு மேல் வாக்கு சதவீதத்தைத் தாண்டியுள்ளது. 1977ல் எம்ஜிஆர் செய்த அதே அதிசயம், இன்று விஜய் செய்கிறாரா? சினிமா உலகிலிருந்து வந்த மற்றொரு தலைவராக விஜய் உருவாகியிருக்கிறார்.தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயம். எம்ஜிஆர் தொடங்கிய பாதையில், விஜய் தற்போது நடக்கிறார்.
![]()