கவிதைகள்

கொண்டாடி மகிழ்வோம் நன்றியை நவில்வோம்!.. கவிதை… ஜெயராமசர்மா

உண்ணும் உணவும் உடுக்கும் உடையும்
ஓய்வாய் உறங்க உதவும் கட்டிலும்
ஒவ்வொரு நாளும் உதவும் பொருட்களும்
உழைப்பவர் உழைப்பின் உன்னத மாகும்

எண்ணெய் நிலக்கரி எல்லாம் உழைப்பே
எல்லோர் விரும்பும் தங்கம் உழைப்பே
மண்ணுள் கிடக்கும் மாயங்கள் அனைத்தையும்
பயனுடை ஆக்கிடும் பக்குவம் உழைப்பே

பாலை நிலத்தைப் பசுமை ஆக்கி
பாறையைப் பிளந்து பற்பல செய்து
ஆழக் கடலினுள் முத்தை எடுத்து
அளவிலா அனைத்தும் செய்வது உழைப்பே

ஆழத் தோண்டி உள்ளே புகுந்து
ஆபத்தை உணரா அதனுள் இருந்து
நாளும் பொழுதும் உழைப்பவர் தம்மை
வாழும் நாளில் வாழ்த்திடல் வேண்டும்

உழைத்துக் கொடுப்பார் உழைத்தே நிற்கிறார்
உழைப்பை உறுஞ்சுவார் உயர்ந்தே செல்கிறார்
உழைப்பார் யாவரும் உயர்ந்திட வேண்டும்
உழைப்பவர் வாழ்வு ஓங்கிட வேண்டும்

முதலாளி வர்க்கம் பெருகியே வருகுது
தொழிலாளி வர்க்கம் சுருண்டே போகுது
முதலாளி தொழிலாளி இணைந்திடும் நாளே
தொழிலாளர் வாழ்வில் விடிவெள்ளி யாகும்

உறக்கமும் பசியும் உடற்பிணி யாவும்
முதலாளி தொழிலாளி வேற்றுமை காட்டா
எல்லாம் சமமாய் இருக்கும் போது
வேற்றுமை காட்டல் விநோதமாய் இருக்கு

தொழிலாளி இல்லையேல் முதலாளி இல்லை
முதலாளி முதலால் எதுவுமே நடக்கா
முதலாளி முதலைத் தொழிலாளி தொட்டால்
உறபத்தி பெருகும் உழைப்பும் தெரியும்

தொழிலாளர் என்பவர் முதுகெலும் பாவார்
முதுகெலும் பில்லையேல் முழுமையே இருக்கா
முழுமையாய் இருக்கும் தொழிலாளர் உயர்வை
கொண்டாடி மகிழ்வோம் நன்றியை நவில்வோம் !

Screenshot

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *