முச்சந்தி

அகண்ட நேபாள கனவு: புதிய பிரதமர் பாலேந்திர ஷாவின் ‘நேபாளமே முதல்’ கொள்கை?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில பகுதிகளை உள்ளடக்கிய ‘அகண்ட நேபாளம்’ (Greater Nepal) வரைபடத்தைத் தனது அலுவலகத்தில் பாலேந்திர ஷா வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான போக்காகப் பார்க்கப்படுகிறது)
நேபாள அரசியலில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, பாலேந்திர ஷாவின் தலைமையிலான தேசிய சுதந்திரக் கட்சி அபார வெற்றியை கடந்த மார்ச்சில் பெற்றுள்ளது. பொறியாளராகவும், ராப் பாடகராகவும் இருந்து அரசியல் தலைவராக மாறியுள்ள பாலேந்திர ஷா, நேபாள இளைஞர்களின் எழுச்சிக் குறியீடாகப் பார்க்கப்படுகிறார்.
ஆனாலும் பாலேந்திர ஷாவின் சில முந்தைய நடவடிக்கைகள் இந்தியாவுடனான ராஜதந்திர உறவுகளில் விரிசலை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. இந்தியாவுடன் முக்கிய முரண்பாடாக ‘அகண்ட நேபாளம்’ விவகாரம் எழுத்துள்ளது.
 
அகண்ட நேபாள பின்னணி:
‘அகண்ட நேபாளம்’ (Greater Nepal) என்பது 1816-ஆம் ஆண்டு சுகௌலி ஒப்பந்தத்திற்கு முன் நேபாளத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, தற்போது இந்தியாவின் பகுதிகளாக உள்ள நிலப்பரப்புகளை உள்ளடக்கிய ஒரு பெரும் நேபாளத்தை உருவாக்கும் கோரிக்கையாகும். இது மேற்கே சட்லெஜ் நதி முதல் கிழக்கே தீஸ்தா நதி வரையிலும், தெற்கே வாரணாசி வரையிலும் நேபாளத்தின் எல்லையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது,
1814-1816 ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், சுகௌலி ஒப்பந்தத்தின் கீழ் நேபாளம் தனது நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை இழக்க நேரிட்டது. கிரேட்டர் நேபாள நேஷனலிஸ்ட் ஃபிரண்ட் (GNNF) போன்ற அமைப்புகள், இந்த ஒப்பந்தத்தை நிராகரித்து, இழந்த டார்ஜிலிங், குமாவோன், கர்வால் போன்ற பகுதிகளைத் திரும்பக் கோருகின்றன.
இது ஒரு தேசபக்தி அல்லது தேசியவாத இயக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்தியத் தரப்பில் இது சட்டவிரோதக் கோரிக்கையாகவே கருதப்படுகிறது. இது பெரும்பாலும் இந்தியா-நேபாள எல்லைப் பிரச்சினைகள் மற்றும் பழைய உடன்படிக்கைகளைச் சுற்றியே பேசப்படுகிறது.
அகண்ட நேபாள வரைபடம்:
இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில பகுதிகளை உள்ளடக்கிய ‘அகண்ட நேபாளம்’ (Greater Nepal) வரைபடத்தைத் தனது அலுவலகத்தில் பாலேந்திர ஷா வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான போக்காகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை பாலிவுட் படங்களுக்கும் தடை விதித்துள்ளார். ‘ஆதிபுருஷ்’ போன்ற பாலிவுட் படங்களில் நேபாளத்தின் கலாச்சாரம் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகக் கூறி, காட்மாண்டுவில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தடை விதித்தவர் இவரே என்று கூறப்படுகிறது.
நேபாளத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கிய இந்த ‘அகண்ட நேபாள’ வரைபடத்தைப் பயன்படுத்தி அரசியல் முக்கியத்துவம் பெற முயல்கின்றனர், இது இரு நாடுகளுக்கும் இடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளே முதல் கொள்கை:
நேபாளே முதல் (Nepal First) கொள்கையானது அமெரிக்காவின் ‘America First’ பாணியில், நேபாளத்தின் நலனே முக்கியம் (Nepal First) என்ற தீவிரத் தேசியவாதக் கொள்கையை இவர் முன்னெடுத்து வருகிறார்.
இந்தியாவுடன் கலாச்சார மற்றும் பொருளாதார ரீதியாக நேபாளம் நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தாலும், பாலேந்திர ஷா சீனாவுடன் நெருக்கமான உறவை வளர்க்க முயலலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
எல்லைப் பிரச்சனை உள்ள கலாபானி மற்றும் லிம்பியாதுரா போன்ற விவகாரங்களை இவர் மீண்டும் தீவிரமாக எழுப்ப வாய்ப்புள்ளது. இந்தியாவின் எரிபொருள் மற்றும் போக்குவரத்துச் சார்ந்து இருக்கும் நேபாளத்தின் நிலையை மாற்றி, சீனாவுடனான போக்குவரத்துத் திட்டங்களை அவர் துரிதப்படுத்தலாம்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வருகிறது. இளம் தலைவரான பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேச்சுவார்த்தை மூலம் சுமுக உறவை ஏற்படுத்த இந்தியா முயலுகிறது. இருப்பினும், அவரது ‘நேபாள் ஃபர்ஸ்ட்’ கொள்கை இந்திய நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் ராஜதந்திர நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா
நேபாள இளம் அரசியல்வாதியும் கட்டுமானப் பொறியாளரான முன்னாள் ராப் கலைஞரான பாலேந்திர ஷா 2022ம் ஆண்டு காத்மாண்டு மேயர் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய அளவில் பிரபலமானார். தற்போது நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராக பதவியில் உள்ளார்.
அவரது துணிச்சலான பேச்சும், வலுவான சமூக ஊடக பிரச்சாரமும் அவரை நேபாளத்தின் முக்கிய இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக்கியது. சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்ற அவர், தற்போது ராஷ்ட்ரிய ஸ்வதந்திர கட்சியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
காத்மாண்டுவின் ஒரு மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த பாலன் ஷா அங்கேயே வளர்ந்தார். அவரது தந்தை ராம் நாராயண் ஷா, அரசு ஆயுர்வேத மருத்துவர். சிறுவயதிலிருந்தே கவிதைகள் மற்றும் படைப்பு வெளிப்பாட்டில் ஆர்வம் காட்டிய அவர், அதுவே அவரது இசைப் பயணத்திற்கு அடிப்படையாக அமைந்தது. காத்மாண்டுவில் சிவில் இன்ஜினியரிங் படித்த பாலன் ஷா, பின்னர் இந்தியாவில் கட்டுமானப் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, பாலன் ஷா நேபாள ஹிப்-ஹாப் உலகில் மிகவும் பிரபலமானவராக இருந்தார். அவர் ‘ரா பார்ஸ்’ ராப் போர் மேடையில் பங்கேற்று மிகுந்த புகழ்பெற்றார். அவரது பாடல்களில் ஊழல், அரசியல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இவை இளைஞர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் வெளிநாட்டில் வாழும் நேபாளியர்கள் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
2022 காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டது பாலன் ஷாவின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பெரிய கட்சிகளின் வேட்பாளர்களைத் தோற்கடித்து, 61,767 வாக்குகளுடன் அவர் மேயரானார். சட்டவிரோதக் கட்டுமானங்களை அகற்றுவது, கழிவு மேலாண்மை, மற்றும் நகர்ப்புற நிர்வாகச் சிக்கல்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது போன்ற துணிச்சலான முடிவுகளால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பாலன் ஷாவின் இந்த வளர்ச்சி, அரசியல் மாற்றத்தை விரும்பும் இளம் வாக்காளர்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிக்கிறது. சமூக ஊடகங்களில் பல மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அவர், தனது ஆதரவாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதுடன், பாரம்பரிய ஊடகங்களை புறந்தள்ளி தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். இது புதிய தலைமுறை அரசியலின் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
அவரது ஆதரவாளர்கள் அவரை புதிய தலைமுறை அரசியலின் சின்னமாகப் பார்க்கின்றனர். ஆனாலும், அவரது மோதல் போக்கையும், வழமைக்கு மாறான பிரச்சார முறைகளையும் விமர்சகர்கள் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர். ராப் கலைஞர், பொறியாளர், மேயர் என பாலன் ஷாவின் இந்த பயணம், நேபாள அரசியலில் தலைமைத்துவம் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு குறித்த ஒரு புதிய விவாதத்தை ஏற்கனவே தொடங்கி வைத்துள்ளது.
அதேவேளை நேபாளத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள், இந்தியாவின் பகுதிகளை உள்ளடக்கிய இந்த ‘அகண்ட நேபாள’ வரைபடத்தைப் பயன்படுத்தி அரசியல் முக்கியத்துவம் பெற முயல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே பாரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *