கவிதைகள்

நல்வினை தீவினை வரமாய் ஆக்கினார்!…. கவிதை… ஜெயராமசர்மா

செய்த வினையும் செய்கின்ற வினையும்
எய்த அம்பாய் எமைநோக்கி வந்துவிடும்
நல்ல வினைகளை நாமாற்றி நின்றால்
எந்த அம்பும் எமையணுகா நின்றுடுமே

நல்வினையும் பிறவிதரும் தீவினையும் பிறவிதரும்
பிறவிதரும் பெரும்பேறு அனைவர்க்கும் வரமாகும்
வரமாகும் பெரும்பேற்றை சாபமாய் ஆக்குவதும்
வரமாக ஆக்குவதும் மண்பிறந்தார் வாழ்வாகும்

மனிதராய் பிறந்தார்கள் புனிதராய் மலர்ந்தார்கள்
புத்தராய் யேசுவாய் நபிகளாய் எழுந்தார்கள்
நால்வராய் எழுந்தார்கள் நல்லவழி தேர்ந்தார்கள்
பக்குவமாய் வாழ்ந்தார்கள் பற்றற்று இருந்தார்கள்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கினார்
வாடும் மனத்தை எண்ணியே வருந்தினார்
நாடும் அனைத்திலும் நல்லதை தேடினார்
வீடும் வேண்டா விறலின் மேவினார்

அறப்பணி ஆற்றிட பிறவியை வேண்டினார்
ஆன்மீகம் வளர்த்திட பிறவியை நாடினார்
அன்பாய் அணைத்திட அவாவினார் பிறவியை
நல்வினை தீவினை வரமாய் ஆக்கினார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *