இரு வார போர் நிறுத்தத்துக்கு இணக்கம்!; போர் முடிவுக்கு வருகிறதா ? நாளை பேச்சுக்கள் ஆரம்பம்; சற்று நிம்மதிப் பெருமூச்சு விடும் உலகம்

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதுடன் நாளை 10 ஆம் திகதி இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.
இருதரப்புக்குமிடையே போரை நிறுத்தும் முயற்சியில் கடந்த இரு வாரமாக ஈடுபட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த போர் நிறுத்தம் தொடர்பாக தனது ட்விட்டரில் நேற்று அறிவிப்பை வெளியிட்டிருந்தார்..
அதில் ஈரான்- அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். லெபனான் உட்பட வளைகுடாவில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வருவதாகவும் ஷெரீப் கூறியிருந்தார். இதன் மூலம் பிராந்தியத்தில் பதற்றங்கள் தணியும் எனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். மேலும், வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 10ம் திகதி போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் இஸ்லாமாபாத்தில் இரு தரப்பு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு வளைகுடாவில் நிலவி வரும் நீண்டகால சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் , “இதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஈரான் மற்றும் அமெரிக்கா- அவற்றின் கூட்டணி நாடுகளுடன், லெபனான் உட்பட அனைத்து இடங்களிலும் உடனடி போர் நிறுத்தம் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விவேகமான நடவடிக்கையை அன்புடன் வரவேற்று, இரு நாடுகளின் தலைமைக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சர்ச்சைகளுக்கும் ஒரு உறுதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்த, ஏப்ரல் 10ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28-ம் திகதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. இதோடு ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவத் தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். இரண்டு வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹோர்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, தங்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டால் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை உடன் இணைந்து ஹோர்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏப்ரல் 10-ம் திகதி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது.
நிபந்தனைகள் என்னென்ன?
இரு வார கால போர் நிறுத்தம் சார்ந்த முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்மொழிந்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
> ஈராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.
> ஈரான் மீதான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
> பிராந்தியத்தில் அனைத்து விதமான மோதல்களையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
> ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நெறிமுறைகளை நிறுவ வேண்டும்.
> ஈரானை மீண்டும் கட்டமைப்பதற்கான செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும்.
> ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
> அமெரிக்கா முடக்கிய ஈரானின் சொத்துகள், நிதியை விடுவிக்க வேண்டும்.
முன்னதாக, அணு ஆயுதம் தொடர்பாக 10 நாட்களுக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும்;ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்காக 10 நாட்கள் காலக்கெடுவையும் அவர் விதித்திருந்தார். அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் இராணுவம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை குண்டுமழை பொழிந்தன. ஈரானின் மசகு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதியில் 90% கார்க் தீவு வழியாக நடைபெறுகிறது. அந்த தீவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இராணுவ தளங்கள் சக்திவாய்ந்த குண்டுகள் மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தரைமட்டமாக்கப்பட்டன.
மேலும், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட அந்த நாட்டின் ரயில் கட்டமைப்புகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தின. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக குவைத்தில் உள்ள அமெரிக்காவின் அலி அல் சலேம் விமானப் படைத் தளத்தின் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 15 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
மேலும் சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் இராணுவம் நேற்று ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் ஹைபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இஸ்ரேலின் பல்வேறு பகுதிகள் மீது ஈரான் ஏவுகணைகள் அலை, அலையாக தாக்குதல் நடத்தின.
ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “எங்களது எரிசக்தி நிலையங்கள், பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். சர்வதேச அளவில் பல ஆண்டுகளுக்கு மசகு எண்ணெய், எரிவாயு கிடைக்காத சூழலை ஏற்படுத்துவோம்” என கூறப்பட்டது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்ட பதிவில், “ஈரான் நாகரிகம் இன்றிரவு(செவ்வாய்) அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே இருதரப்புடனும் மிகத் தீவிரமாக பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய நிலையில் ட்ரம் விதித்த காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரத்துக்கு முன்,இரு வார போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.
![]()