இந்தியா

இந்தி சர்ச்சை – சிபிஎஸ்இ பாடசாலை நடத்தும் உங்கள் மகளிடம் கேளுங்கள் என ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்

சிபிஎஸ்இ பாடசாலை நடத்தும் தனது மகளிடம், அவர் தனது பாடசாலையில் தொடக்க நிலை மாணவர்களுக்குத் தமிழைப் பயிற்று மொழியாகக் கற்பிக்கத் தொடங்கியுள்ளாரா
என்பதை முதல்வர் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிகள் கட்டாயமாக்கும் சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பாடசாலைகளை நடத்தும் தனது அமைச்சர்கள் மற்றும் முக்கிய திமுக நிர்வாகிகளிடமும் ஸ்டாலின் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2026-27 கல்வியாண்டிற்காக வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ-யின் பாடத்திட்டத்தின் படி, 6 ஆம் வகுப்பு முதல் மும்மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவின் தாய்மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள மொழிகளைத் தெளிவுபடுத்தும் வகையில், இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், பிற இந்தியப் பிராந்திய மொழிகளுடன் சேர்த்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் இந்தி திணிக்கப்படுவது பற்றிய கேள்வி எங்கே எழுகிறது?

கடந்த ஆண்டு, பள்ளிக்கல்வியின் அடித்தள மற்றும் ஆயத்த நிலைகளின் போது தாய்மொழி
அல்லது வீட்டு மொழியைப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவதற்கு சிபிஎஸ்இ முக்கியத்துவம் அளித்தது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *