பலதும் பத்தும்

பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி

தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை விஜய் இன்று (மார்ச் 29) அறிவித்தார்.

இந்த அறிவிப்பில் முதல் இரண்டு தொகுதிகளாக பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த இரண்டு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

டி.நகரில் புஸ்ஸி ஆனந்த், செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வடசென்னை மக்களவை தொகுதியில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அமைந்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் 1.05 லட்சம் வாக்குகளை பெற்று, ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு திமுக வாய்ப்பு வழங்கி உள்ளது.

2019 இடைத்தேர்தலிலும் திமுக சார்பில் போட்டியிட்டு ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருந்தார். இந்த தொகுதியில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் பல்வேறு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாக திருச்சி கிழக்கு தொகுதி அமைந்துள்ளது.

2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ், 94,302 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். சிட்டிங் எம்.எல்.ஏவான அவருக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது திமுக. 2016 மற்றும் 2011 தேர்தல்களில் அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *