உலகம்

அமெரிக்காவின் போர்நிறுத்த முன்மொழிவு: ஈரான் பரிசீலனை?

வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் இன்னும் பரிசீலித்து வருவதாகவும், ஆரம்பகட்ட பதில் எதிர்மறையாக இருந்தபோதிலும் அதனை முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் ஈரானிய சிரேஷ்ட அதிகாரி ஒருவர்  ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

பகிரங்கமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை ஈரானிய அதிகாரிகள் ஏளனம் செய்து நிராகரித்து வருகின்றனர்.

இருப்பினும், வொஷிங்டன் சார்பில் பாகிஸ்தான் கையளித்த 15 அம்ச முன்மொழிவுக்கான உத்தியோகபூர்வ பதிலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம், தெஹ்ரானில் உள்ள சில முக்கிய நபர்கள் இதனைப் பரிசீலித்து வருவதைக் காட்டுவதாகத் தெரிகிறது.

ஆரம்ப பதில் “நேர்மறையானதாக இல்லை” என்றாலும், இந்த முன்மொழிவு இன்னும் பரிசீலனையில் இருப்பதாக அந்த அதிகாரி கூறிய கருத்துக்கள், ஈரான் அதனை நிராகரித்துவிட்டதாக அடையாளம் தெரியாத அதிகாரியை மேற்கோள் காட்டி ‘பிரஸ் டிவி’ (Press TV) வெளியிட்ட செய்திக்கு முரணாக அமைந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் இது தொடர்பாகத் தொடர்புகொண்டுள்ளதாகவும், இன்னும் உத்தியோகபூர்வ பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு தரப்பு கூறுகையில், “ஈரானியர்கள் இன்று இரவு பதில் தருவதாக எங்களிடம் கூறியுள்ளனர். அவர்கள் ‘இல்லை’ என்று கூறிவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் ஈரானிடமிருந்து எங்களுக்கு இன்னும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் காத்திருக்கிறோம். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருப்பதால் தொடர்பாடல் ஒரு பெரும் சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

ஈரான் ஒரு முன்மொழிவைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்திய மற்றொரு சிரேஷ்ட அதிகாரி, பேச்சுவார்த்தைகள் ஒருவேளை முன்னெடுக்கப்பட்டால் அவை பாகிஸ்தான் அல்லது துருக்கியில் நடைபெறலாம் என்றும் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *