தேடிநாம் கண்டால் தெளிவும் பிறக்கும்!…. கவிதை…. ஜெயராமசர்மா

கடலலைகள் ஓய்வதில்லை காற்றுவீச மறுப்தில்லை
நதியோட மறுப்பதில்லை நம்பிக்கை குலைவதில்லை
மரமிலைகள் உதிர்த்தாலும் மறுபடியும் இலைநிறையும்
மனமதினில் தெளிவுவர வாழ்நாளே போதவில்லை
எதிர்கால மெப்போதும் விடிவாகு மென்று
எண்ணியே காலத்தைப் போக்குகிறோம் மண்ணில்
நம்பிக்கை வைத்திடவே நல்லவிடம் தேடாமல்
கண்மூடி நின்று காலத்தைப் போக்குகிறோம்
நல்லகுரு நல்லாசான் நாம்நாட வேண்டும்
ஞானமில்லாப் பலபேர்கள் வேடமிடு கின்றார்
வேடமிடும் மனிதரிடம் சிக்காமல் நாமும்
விழிப்புடனே இருந்தாலே விடிவுவந் தமையும்
மாய்மாலம் செய்வாரை நம்பிடுவார் பலபேர்
மயக்குமொழி வசப்பட்டு மாட்டிடுவார் சிலபேர்
நம்பிக்கை ஊட்டுவதாய் நடித்திடுவார் பக்கம்
நாடாமல் இருந்தாலே நற்பாதை தெரியும்
வேடங்கள் தரித்து விதம்விதமாய் பேசி
ஊரூராய் சென்று உபதேசம் செய்வார்
நம்பிக்கை தருவதாய் நடித்துமே நிற்பார்
நம்பிடுவார் அனைவரும் நடுத்தெரிவில் நிற்பார்
தேர்ந்திடு அறிவு தெளிந்தநல் ஞானம்
உடையோ ரெல்லாம் ஒதுங்கியே இருப்பார்
தேடிநாம் கண்டால் தெளிவும் பிறக்கும்
நம்பிக்கை வைக்க நாடுவோம் நல்லாரை !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()