முச்சந்தி

தாய்வானை சூளும் சீனாவின் படை வியூகம்…  ஈரானை காப்பாற்றும் தந்திரோபாய திட்டமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தொடரும் நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் வடகொரியாவும் இராணுவ நகர்வுகளை வெளிக்காட்டியுள்ளன. தாய்வானின் அரை நூற்றாண்டு பகையும் தனிநாடு கோரிக்கையும் இன்னமும் தொடரும் நிலையில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்கிறது)
மத்திய கிழக்கில் ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தொடரும் நிலையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவும் வடகொரியாவும் தமது இராணுவ நகர்வுகளைத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான தாய்வான், ஜப்பான் மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த நகர்வுகள், அமெரிக்காவிற்கு இரட்டை முனைகளில் (Two-front war) நெருக்குதலை ஏற்படுத்தும் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
சீனா, தாய்வானை தனது பிரிக்க முடியாத பகுதியாகக் கருதி, அதை மீண்டும் தன்னுடன் இணைக்க (Reunification) ராணுவ அழுத்தங்களை அதிகரித்துள்ளது. 1949 முதல் தன்னாட்சி பெற்ற நாடாக தாய்வான் செயல்பட்டாலும், சீனா அவ்வப்போது போர் ஒத்திகைகள் மூலம் அச்சுறுத்தி வருகிறது. தாய்வான் மீதான அச்சுறுத்தல் உலகளாவிய கணினி மென்பொருள் (Chip) விநியோகத்தைப் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. ஏனெனில் தாய்வானே கணினி மென்பொருட்களை பாரியளவில் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடாகும்.
இதேவேளை ஈரான் போருக்காகத் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு நகர்த்தியுள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தியே சீனாவும் வடகொரியாவும் ஆசியாவில் தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராகக் கப்பல்களை அனுப்புமாறு கூட்டாளி நாடுகளிடம் கோரும் நிலையில், தமது சொந்தப் பாதுகாப்பைக் கருதி ஜப்பானும் தென்கொரியாவும் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நெருக்கடியைச் சீனா தந்திரமாகக் குறைக்கும் திட்டமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
தனிநாடு பிரிவினை – அரை நூற்றாண்டு பகை:
சீனா-தாய்வான் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலான மோதல் போக்கு நீடிக்கிறது. பெரும்பாலான உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாத போதிலும், தாய்வான் தன்னை தன்னாட்சி பெற்ற தனிநாடு என்கிறது. ஆனால் சீனாவோ தாய்வானில் அமைந்திருக்கும் அரசு, சட்டவிரோதமானது, தாய்வான் சீனாவிலிருந்து பிரிந்த ஒரு மாகாணப்பகுதி என்கிறது.
அவசியம் ஏற்பட்டால் தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என தொடர்ந்து சீனா மிரட்டி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக சீனா-தாய்வான் இடையிலான இராணுவ பதற்றம் தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.
சீனாவில், 1911 இல் மன்னராட்சி ஒழிக்கப்பட்டதோடு சீன தேசியக் கட்சி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியது. 1927 இல் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சீன கம்யூனிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்க, 1930-களில் உள்நாட்டுப் போர் வெடித்தது. 1949 வரை நடந்த இப்போரில் தோல்வியுற்ற சீன தேசியக் கட்சியினர், தென் சீனக் கடலில் அமைந்திருக்கும் தீவான தாய்வானில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து சீனாவிலிருந்து பிரிந்து தனித்தீவு நாடாகச் செயல்படத் தொடங்கியது தாய்வான்.
1975 வரை சீன தேசியக் கட்சியின் தலைவரான சியாங்கின் ஆட்சியிலிருந்த தாய்வான், அதன் பிறகு மெல்ல மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. நீண்டகாலமாகவே தாய்வானைச் சொந்தம் கொண்டாடிய சீனா, 1981 இல் `ஒரு நாடு-இரண்டு அமைப்புகள்’ என்ற ஆட்சிமுறைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்படி, ‘எங்களுடன் தாய்வான் இணைந்து கொண்டால், ஹொங்கொங்கில் இருப்பது போன்று உங்களுக்கும் தன்னாட்சி அதிகாரம் வழங்குகிறோம்’ என்று சீனா ஆசைகாட்ட, அதை மறுத்துவிட்டது தாய்வான்.
தாய்வானில் சீன ஆக்கிரமிப்பு:
தற்போது தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தினுள் (ADIZ) தொடர்ச்சியான ஊடுருவல்களை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் மார்ச் 15-ஆம் திகதி மாத்திரம் முழுமையான ஆயுதங்கள் பொருத்தப்பட்ட 26 போர் விமானங்கள் மற்றும் 7 போர்க் கப்பல்களைத் தாய்வான் எல்லைக்குள் சீனா அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலடியாகத் தாய்வான் தனது F-16 போர் விமானங்களையும் ஏவுகணை அமைப்புகளையும் தயார் நிலையில் வைத்துள்ளது.
இந்த தந்திரோபாய வியூகம் ஈரானைக் காப்பாற்ற ஆசியாவில் போர் பதற்றத்தை உருவாக்குவதாக சீனாவை மறைமுகமாக அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. தாய்வானைச் சுற்றிவளைக்கும் சீன படைகள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மேலும் வடகொரியாவின் ஏவுகணை சோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடகொரிய ஏவுகணை சோதனை:
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் ‘வாரியர் ஷீல்ட்’ (Warrior Shield) இராணுவப் பயிற்சிக்குப் பதிலடி கொடுப்பதாகக் கூறி, மார்ச் 14-ஆம் திகதி வடகொரியா ஒரே நேரத்தில் 10 பலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளை ஜப்பான் கடற்பரப்பில் (Sea of Japan) வீசியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்கு (EEZ) மிக அருகில் வீழ்ந்துள்ளன என்று கூறப்படுகிறது.
மேலும் தென்கொரியாவைத் தாக்கக்கூடிய 600mm அதிதூர ராக்கெட் செலுத்திகளையும் வடகொரியா சோதித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையில் ஈரானுக்கு எதிராகக் கப்பல்களை அனுப்புமாறு கூட்டாளி நாடுகளிடம் கோரும் நிலையில், தமது சொந்தப் பாதுகாப்பைக் கருதி ஜப்பானும் தென்கொரியாவும் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஈரான் போருக்காகத் தென்கொரியாவில் நிறுத்தப்பட்டிருந்த ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை அமெரிக்கா மத்திய கிழக்குக்கு நகர்த்தியுள்ளமை பயன்படுத்தி சீனா சுயலாபம் அடைந்து வருகிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது ஈரானுக்கு விடுக்கப்பட்ட நெருக்கடியைச் சீனா தந்திரமாகக் குறைக்கும் திட்டத்திற்காக, சீனாவும் வடகொரியாவும் ஆசியாவில் பதற்றத்தை உருவாக்கியுள்ளன
என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூகோள அரசியல் பின்னணி :
1949 சீன உள்நாட்டுப் போரில் தோற்ற தேசியவாத அரசு (Kuomintang) தாய்வானுக்குத் தப்பிச் சென்றது, அன்றிலிருந்து சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தாய்வான் சீனாவின் ஒரு பகுதி, அதை வலுக்கட்டாயமாகவோ அல்லது அமைதியான முறையிலோ திரும்பப் பெறுவோம் என நீண்டகாலமாக சீனா உறுதிபடக் கூறுகிறது.
தற்போதைய பதற்றமாக சீனா தனது இராணுவப் படகுகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாய்வானைச் சுற்றி வளைத்து, போர் ஒத்திகைகளை நடத்தி, பதற்றத்தை அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய கணினி மென்பொருள் (சிப்ஷ்)உற்பத்தியாளர் என்பதால், இந்த மோதல் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா தாய்வானுக்கு நீண்டகாலமாக ஆயுதங்களை விற்று, சீனாவின் தாக்குதலுக்கு எதிராக உதவ உறுதியளித்துள்ளது. இருப்பினும், சீனா தற்போது உடனடியாகத் தாய்வானை ஆக்கிரமிக்கத் திட்டமிடவில்லை என்றாலும், எதிர்காலத்தில் “வலுக்கட்டாயமாக” கைப்பற்றத் தயாராகி வருகிறது, என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனிநாடாக பிரிந்த தாய்வான்:
சீனாவிலிருந்து தனிநாடாகப் பிரிந்து சென்ற தங்கள் நாட்டின் மீது படையெடுக்க, எல்லையில் படைகளை குவித்து போர் பயிற்சியில் ஈடுபட சீனா தயாராகி வருவதாக தாய்வான் இராணுவம் பல தடவைகள் குற்றம் சாட்டியுள்ளது. தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனா திட்டமிடுகிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி மற்றும் தாய்வான் எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பியும் சீனா பதற்றத்தை தூண்டியும் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாய்வானை அச்சுறுத்தும் வகையிலும், தாய்வானைச் சுற்றி பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையிலும் சீனா தனது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை பயன்படுத்தியுள்ளது. இப்பயிற்சிகளில் சீன கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சீனா படையெடுக்க சாத்தியமா?
கைத்தொழில்துறை, தொழில் நுட்பத்துறைகளில் அசுர வளர்ச்சி பெற்று தாய்வான் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது. இதைக் கண்டு அஞ்சிய சீனா, தாய்வானில் இருப்பது சட்டவிரோதமான ஆட்சி. அது தனிநாடு அல்ல, எங்களிடமிருந்து பிரிந்த மாகாணம் மட்டுமே என்று சொல்லி வருகிறது.
2005இல் தாய்வானைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பிரிவினைவாத தடுப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தது சீனா. அதன் பிறகு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சம் தொட்டது. 2013-ல் சீன அதிபரான ஜி ஜின்பிங், தாய்வானைச் சீனாவின் கட்டுக்குள் கொண்டுவருவதில் தீவிரம் காட்டினார். அதைத் தொடர்ந்து, 2016 இல் தாய்வான் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டுவந்து, பாதுகாப்புத் துறையையும் மேம்படுத்தியது. வெளிநாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தத் தொடங்கியது. குறிப்பாக அமெரிக்கவுடன் நீண்டகால நட்புறவை ஏற்படுத்திக்கொண்டதால், தாய்வானுக்குப் பல நவீன ஆயுதங்கள் கிடைத்தன. சர்வதேச ரீதியில் வத்திக்கானும், வேறு 13 நாடுகளும் தாய்வானை இறையாண்மைகொண்ட நாடாக அங்கீகரித்திருக்கின்றன.
சீனா, மீண்டும் தாய்வானை தன்னில் இணைத்துக்கொண்டு விட்டால், அது பசுபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தைச் சுதந்திரமாகக் காட்ட வழிவகுப்பதுடன், குவாம் மற்றும் ஹவாய் வரையிலான அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமையும்.ஆனால் தாய்வானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *