கோதாபய பதவி விலகியே போனார்; அநுர தப்பியோடும் நிலைமையே வரும்!; நாட்டின் இப்போதைய நிலைமை உலக யுத்தத்தால் ஏற்பட்டது அல்ல

கோதாபய ராஜபக்ஷ பதவி விலகியே போனார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி தேடினாலும் கிடைக்காத வகையில் தப்பியோடிவிடுவார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைதொடர்பில் ஜனாதிபதி ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்களை கூறியிருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வர முன்னர் கூறிய கதைகளுக்கும், மார்ச் 3ஆம் திகதி கூறிய கதைகளுக்கும், 10ஆம் திகதி கூறிய கதைகளுக்கும், 15, 16ஆம் திகதிகளில் கூறிய கதைகளுக்கும் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய கதைகளுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உள்ளன. முன்னர் தம்புத்தேகம வீரர் தொடர்பில் கதைக்கப்பட்ட நிலையில் அந்த வீரர்தான் இப்போது இருக்கின்றரா? என்று தெரியவில்லை. யுத்தத்தினால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுவதை இப்போது கேட்கின்றோம்.
நாங்கள் டிசம்பர் மாதத்திலேயே ஏற்படக்கூடிய நிலைமை தொடர்பில் கூறியிருந்தோம். இவர்கள் செய்யும் எதுவாக இருந்தாலும் அதில் சிக்கிக்கொள்கின்றனர்.
எரிபொருள் விடயத்தில்,எரிபொருள் கப்பல்கள் வருகின்றது என்று கூறியவர்கள் இப்போது கப்பல்கள் வருவதில் ஏற்பட்டுள்ளதாமதங்கள் தொடர்பில் கூறுகின்றனர். இப்போது எல்லா இடங்களிலும் வரிசைகள் உருவாகியுள்ளன. இப்போது தன்னை நம்புங்கள் என்கின்றனர். நம்பியதால்தான் இந்த நிலைமை. இன்னும் நம்புவதற்கு எதுவும் மிஞ்சவில்லை. கோதாபய ராஜபக்ஷ பதவி விலகியே சென்றார். ஆனால் இவர் தேடினாலும் கிடைக்காதவாறு தப்பியோடியே போவார் என்றே நினைக்கின்றோம்.
நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை உலக யுத்தத்தால் ஏற்பட்டது அல்ல. முடியாதவர்களின் வேலையே இது. மக்கள் கேட்டு பெற்றுக்கொண்ட பிரச்சினையே ஆகும். இதனை மக்கள் புரிந்துகொள்வர் என்றார்.
![]()