யாழிலிருந்து 15 லீற்றர் எரிபொருளில் கொழும்புக்கு வருவது எவ்வாறு?; இருவாரம் செல்லும் என்கிறார் அர்ச்சுனா எம்.பி.

எனக்கு வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் ஒதுக்கப்படுள்ளது. இதன்மூலம் நான் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதென்றால் இருவாரங்கள் பயணம் செய்ய நேரிடும் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் விசேட கோரிக்கையை விடுத்தே இவ்வாறு கூறிய அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
தற்போது எனக்கு வாரமொன்றுக்கு 15 லீற்றர் எரிபொருளே வழங்கப்படுகின்றது. இந்த அளவை வைத்துக்கொண்டு நான் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வருவதென்றால்இரு வாரங்கள் பயணம் செய்ய வேண்டி ஏற்படும். முதலில் கிடைத்த 15 லீற்றர் எரிபொருளில் அநுராதபுரம் வரை வந்து அங்கு தங்கி தூங்க வேண்டும்.
பின்னர் அடுத்த வாரத்திற்கான ‘கியூ.ஆர்’ ஒதுக்கீட்டில் 15 லீற்றர் எரிபொருள் கிடைக்கும் வரை காத்திருந்து, அதனைப் பெற்றுக்கொண்டே கொழும்பு வந்து பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியும் . பின்னர் மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தூங்கியிருந்தே செல்ல வேண்டி வரும். இது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இதுகுறித்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
![]()