இலங்கை

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை பகிஷ்கரியுங்கள்; நிசாம் காரியப்பர் எம்.பி. அழைப்பு 

அமெரிக்காவும் மொசாட்டும் இணைந்து சட்டவிரோதமாக ஈரான் தலைவர்களை கொன்ற சம்பவத்தில் இலங்கை ஜனாதிபதியினால் எவ்வித கருத்தும் கூறப்படவில்லை என்றும், இதற்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை பகிஷ்கரிப்பதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும், எதிர்க்கட்சியில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்குமான ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளை தீர்மானித்தல் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கடந்த 3ஆம் திகதி உலக யுத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசும் போது அமெரிக்காவும் மொசாட்டும் ஈரானுக்கு தாக்குதல் நடத்தியது தொடர்பில் எவ்வித கருத்தையும் கூறவில்லை. ஹன்சாட்டை எடுத்துப் பாருங்கள் அதனை தெரிந்துகொள்ள முடியும்.

ஜனாதிபதியும் வெளிவிவகார அமைச்சரும் அமெரிக்காவும் மொசாட்டும் சேர்ந்து சட்டவிரோதமாக ஈரானின் தலைவர்களை கொலை செய்த விடயத்தில் எவ்வித கருத்துக்களையும் கூறவில்லை. இவ்வாறான நிலைமையில் ஜனாதிபதியினால் நாளை (இன்று) இப்தார் நிகழ்வுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் எங்களின் எதிர்ப்பை வெளியிடுவதற்காக இந்த நிகழ்வை பகிஷ்கரிக்க வேண்டும் என்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *