அரச,தனியார் ஊழியர்களுக்கு 4 நாட்களுக்கே வேலை புதன் தோறும் விடுமுறை; நாளை முதல் அமுல்- அரசாங்கம் அறிவிப்பு

மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் அரச நிறுவனங்களுக்கு நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நடைமுறையை தனியார் துறையினருக்கு நடைமுறைப்படுத்தவதற்கும் அரசாங்கத்தினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்போது அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவிக்கையில். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் தொடர்பான பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன தலைவர்கள் உள்ளடங்கலாக அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளை அரச விடுமுறை தினமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரம், துறைமுகம், நீர் விநியோகம் மற்றும் சுங்கம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை நிறுவனங்களுக்கு இந்த விடுமுறை தினத்தை அமுல்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை, பல்கலைக்கழகம் மற்றும் நீதிமன்றங்களுக்கு இந்த விடுமுறையை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரச நிகழ்ச்சிகளை மறு அறிவித்தல் வரையில் நிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தனியார் துறைக்கும் இந்த தீர்மானத்தை பொறுத்தமானதாக்கவும் தீர்மானிக்கப்பட்டள்ளது. அத்துடன் விடுமுறை தினமற்ற ஏனைய நாட்களில் அரச நிறுவனங்களுக்கு அழைக்கப்படக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன தலைவர்களால் தீர்மானிக்க முடியும் என்றார்.
![]()