இலங்கை

போரை உடன் நிறுத்துங்கள்; சீனா மீண்டும் வலியுறுத்து 

“சமீபத்திய பதற்றங்கள் வர்த்தகப் பாதைகளைப்(ஹோர்முஸ் நீரிணை)பாதித்துள்ளன. அதோடு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்குக் குந்தகம் விளைவித்துள்ளன. அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன் பதற்றத்தைத் தணிப்பதை ஊக்குவிப்பதில் தாங்கள்(சீனா) உறுதியாக இருக்கிறோம்.”எனவும் கூறியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, பதிலளிகையிலேயே சீன செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) திறக்க நேட்டோ (NATO) நாடுகள் உதவாவிட்டால், அந்த அமைப்பிற்கு “மிக மோசமான” எதிர்காலம் அமையும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இது தொடர்பில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பைத் தாம் ஒத்திவைக்கக்கூடும் என்றும் தெரிவித்திருந்தார்.

‘பிரித்தானியாவின் பினான்சியல் ரைம்ஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சீனாவும் இதற்கு(ஹோர்முஸ் நீரிணையை திறக்க)உதவ வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் சீனா தனது எரிபொருளில் 90 சதவீதத்தை இந்த நீரிணை வழியாகவே பெறுகிறது,” என்று டிரம்ப் தெரிவித்தார்.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குத் தாம் செல்வதற்கு முன்பாக, இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை அறிய விரும்புவதாகவும் அவர் கூறினார். மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த இந்தத் பயணம் குறித்துக் கேட்கப்பட்டபோது, “நாங்கள் அதை ஒத்திவைக்கலாம்,” என்று ஜனாதிபதி டிரம்ப் பதிலளித்தார்.

தற்போது, அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் மற்றும் சீனத் துணைப் பிரதமர் ஹீ லிஃபெங் ஆகியோர் பாரிஸில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களைக் களைந்து, டிரம்பின் பெய்ஜிங் பயணத்திற்கு வழிவகுப்பதே இந்தப் பேச்சுவார்த்தையின் நோக்கமாகும்.

ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்துப் பாதையினால் பயன்பெறும் நாடுகள், அதைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினார்.

சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, கண்ணிவெடிகளை அகற்றும் கப்பல்கள் (Mine sweepers) மற்றும் ட்ரோன்களை எதிர்கொள்ளும் இராணுவத் தளபாடங்கள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் (ஈரான்) இப்போது பலவீனமாக உள்ளனர்.ஹோர்முஸ் நீரிணையில் சிறு பிரச்சனைகளை உருவாக்குவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை. இந்தப் பாதையினால் பயன்பெறுபவர்கள் அதை முறைப்படுத்த எமக்கு உதவ வேண்டும்.” எனவும் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் இந்த நீரிணையைத் தற்காலிகமாக மூடியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது மேலும் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று வாஷிங்டன் எச்சரித்துள்ளது. “நாங்கள் அதை ஐந்து நிமிடங்களில் தாக்க முடியும், அவர்களால் அதைத் தடுக்க முடியாது,” என்று டிரம்ப் கூறினார்.

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் பேசிய பிறகு, அந்த நாட்டின் அணுகுமுறையை டிரம்ப் விமர்சித்தார். “பிரிட்டன் எங்களின் முதன்மையான கூட்டாளியாகக் கருதப்படுகிறது… ஆனால் நான் உதவி கேட்டபோது அவர்கள் வர விரும்பவில்லை,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார். அமெரிக்கா ஈரானின் இராணுவத் திறனை அழித்த பின்னரே, பிரிட்டன் கப்பல்களை அனுப்ப முன்வந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியின்கருத்துக்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:

“சீனா-அமெரிக்க உறவுகளில் இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையிலான இராஜதந்திரம், ஈடுசெய்ய முடியாத ஒரு மூலோபாய வழிகாட்டும் பாத்திரத்தை வகிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஜனாதிபதி டிரம்பின் சீன வருகை தொடர்பாக இரு தரப்பும் தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற டிரம்பின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் பதிலளிக்கையில்:

“சமீபத்திய பதற்றங்கள் வர்த்தகப் பாதைகளைப் பாதித்துள்ளன. அதோடு பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்குக் குந்தகம் விளைவித்துள்ளன. அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை சீனா மீண்டும் வலியுறுத்துகிறது. பதற்றத்தைத் தணிப்பதை ஊக்குவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button