முச்சந்தி

“புலிகளின் வழித்தோன்றல்கள்” என்று சொல்லிக்கொண்டு திரியும் சில “புத்திசாலிகள்”

ஈரான் போரில் தங்கள் தான் உண்மையான விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் ஈரான் அழிக்கப்படவேண்டும் என்ற ரீதியில் சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒருவர் இட்ட ஒரு பதிவுக்கு Mohamed Mujahid என்ற வலைப்பதிவர் பின்னூட்டம் ஒன்றை இட்டிருந்தார் .அது நியமானது என்பதால் அதை கீழே தருகிறேன் …..

இன்று சமூக வலைதளங்களில் தங்களை “புலிகளின் வழித்தோன்றல்கள்” என்று சொல்லிக்கொண்டு திரியும் சில “புத்திசாலிகள்”, ஈரானுக்கு எதிராகக் கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“ஈரான் அழிய வேண்டும், அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை வெளுக்க வேண்டும்” என்று இவர்கள் போடும் கூச்சலுக்குப் பின்னால் இருப்பது ஈழத்தின் மீதான பற்றல்ல; மாறாக, இவர்களது மதவெறியைத் தீர்க்க புலிகளின் பெயரை ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

“ஏன் ஈரான் மீது இவ்வளவு கோபம்?” என்று கேட்டால், “ஈரான் இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து புலிகளை அழிக்க உதவியது” என்று ஒரு பதிலைச் சொல்வார்கள். சரி, ஈரான் என்ன ஆயுதம் கொடுத்தது? எப்போது கொடுத்தது? என்று கேட்டால், அதற்குப் பதில் இருக்காது.
ஈரான் இலங்கை அரசுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கவில்லை , ஆனால் நிதி, எண்ணை, சிறியளவு கண்காணிப்பு விமானங்கள் வழங்கியது உண்மைதான், அதை யாரும் மறுக்கவில்லை.

ஆனால், ஈழப் போராட்டத்தை வேரோடு அழித்ததில் முக்கிய பங்காற்றிய நாடுகள் எவை என்று பார்த்தால், இந்தப் பட்டியலைப் பார்த்தபின் உங்கள் “அமெரிக்க-இஸ்ரேல்” விசுவாசம் காணாமல் போய்விடும்.

1. அமெரிக்கா (The Architect of the Ban)
புலிகள் இயக்கம் 50% அழிவதற்குக் காரணமே அமெரிக்கா அதை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்ததுதான்.
1997-ல் அமெரிக்கா புலிகளைத் தடை செய்தவுடன், புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்த நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.
2006-2009 காலப்பகுதியில், அமெரிக்கா தனது செயற்கைக்கோள் மற்றும் கடற்படை உளவுத் தகவல்களை (Satellite Intelligence) இலங்கை அரசுடன் பகிர்ந்து கொண்டது.
புலிகளின் பெரும் தளபதிகளை கொன்றொழித்த ஆழ ஊருடுவும் படையை (Long Range Reconnaissance Patrol) உருவாக்கி கொடுத்தது அமெரிக்கா.
இந்தியப் பெருங்கடலில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எங்கே வருகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டிக் கொடுத்து, அவற்றை இலங்கை கடற்படை அழிக்க அமெரிக்கா உதவியது.

2. இஸ்ரேல் (The Silent Killer)
ஈரானை அழிக்க வேண்டும் என நீங்கள் துடிக்கும் இஸ்ரேல்தான், இலங்கை ராணுவத்தின் முதுகெலும்பாக இருந்தது.
ஈழத் தமிழர்களின் தலைமுறைத் துயரத்திற்கு காரணமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது இஸ்ரேலின் கிபீர் விமானங்கள்தான்.

கடற்புலிகளின் வேகமான தாக்குதல்களை முறியடிக்க இலங்கை கடற்படைக்கு அதிவேக Dvora படகுகளை வழங்கியது இஸ்ரேல்.
இன்று தமிழர்களை ஒடுக்கும் விசேட அதிரடிப்படை (STF), இஸ்ரேலியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் நேரடிப் பயிற்சியில் உருவானது.

3. இந்தியா (The Big Brother)
ராஜிவ் காந்தி கொலைக்குப் பிறகு, இந்தியாவின் நிலைப்பாடு முழுமையாக மாறியது.

புலிகளின் ஆயுத விநியோகப் பாதையை முற்றிலுமாக முடக்கியது இந்தியக் கடற்படை.
புலிகளின் நடமாட்டம், தலைவர்களின் இருப்பிடம் குறித்த தகவல்களை இலங்கை அரசுக்கு உடனுக்குடன் பகிர்ந்து கொண்டது இந்திய உளவுத்துறை.

4. சீனா மற்றும் பாகிஸ்தான் (The Muscle Power)
மேற்கத்திய நாடுகள் சில சமயங்களில் மனித உரிமை பேசிக்கொண்டு ஆயுதம் தரத் தயங்கியபோது, கேட்டவுடன் வாரி வழங்கியது சீனாவும் பாகிஸ்தானும்.

இலங்கை ராணுவத்திற்குத் தேவையான எறிகணைகள் (Artillery Shells) மற்றும் பல்குழல் ஏவுகணைகளை (MBRL) அவசர காலத் தேவையாக வழங்கியது.
ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைத் தடுத்து, இலங்கைக்கு ராஜதந்திர கவசமாக நின்றது சீனா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *