முச்சந்தி

ஈரான் போரில் சீனாவின் மௌனம் ஏன்?…. கச்சாய் எண்ணெய் பொருளாதார போரா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் சிதைக்கப்படும் போது, சீனா ஏன் இன்னும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. யுத்தத்தின் நேரடி தாக்கத்தை விடவும், சில நேரங்களில் அதிகார வர்க்கத்தின் மௌனம்தான் அதிக அச்சத்தை உண்டாக்குகிறது)
ஈரானின் நீண்ட கால நெருங்கிய கூட்டாளியான சீனாவின் மௌனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது தொடரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற அதிரடித் தாக்குதல் மற்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் படுகொலையின் பின்னரும், சீனாவின் மௌனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சீனாவின் மௌனம் ஏன் ?
ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் சிதைக்கப்படும் போது, சீனா ஏன் இன்னும் நேரடியாகக் களத்தில் இறங்கவில்லை என்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. யுத்தத்தின் நேரடி தாக்கத்தை விடவும், சில நேரங்களில் அதிகார வர்க்கத்தின் மௌனம்தான் அதிக அச்சத்தை உண்டாக்குகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரான் மண்ணை பிளந்து கொண்டிருக்கும் வேளையில், உலகமே பதற்றத்தில் உறைந்து போயுள்ளது. ஈரானின் 130 இடங்களில் மரண ஓலம் கேட்கிறது. 2000க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன. இத்தனை கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, ஆசியாவின் வல்லரசான சீனா மட்டும் ஏன் ஒரு மர்மமான மௌனத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.
சீனாவின் இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒரு மிக முக்கியமான பொருளாதாரக் காரணி ஒளிந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். சீனா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் சுமார் 44 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து தான் வருகிறது. குறிப்பாக, ஈரான் வசம் உள்ள ‘ஹார்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) வழியாகவே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் போர் மூண்டால், அது சீனாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக முடியும். எனவே, நேரடியாகப் போரில் இறங்குவதை விட, தூதரக ரீதியாகச் சூழலைச் சமாளிப்பதையே சீனா பாதுகாப்பானதாகக் கருதுகிறது.
மேலும் சீனா ஒரு நீண்ட கால ஆட்டத்தை ஆடி வருவதாக அரசியல் – பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் இந்த நேரடித் தாக்குதல்கள் ஈரானின் தற்போதைய அதிகார அமைப்பை வலுவிழக்கச் செய்யலாம். ஒரு பலவீனமான ஈரான் என்பது சீனாவின் கைகளில் எளிதில் சிக்கக்கூடிய ஒரு நாடாக மாறும். மேலும், அமெரிக்கா நீண்ட காலப் போரில் சிக்கிக் கொள்வது, பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரு பாரிய வாய்ப்பாக அமையும் என்பதும் சீனாவின் கணக்காக கூட இருக்கலாம்.
ஈரானில் சீன ஏவுகணைத் தொழில்நுட்பம்:
ஆனாலும் சீனா ஈரானைத் முழுமையாகக் கைவிட்டுவிடவில்லை என்பதற்கும் சில ஆதாரங்கள் உள்ளன. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்புத் துறையில் சீனா இரகசியமாக உதவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மேற்கத்திய மென்பொருட்களுக்குப் பதில் தனது சொந்த ‘BeiDou’ வழிசெலுத்தல் அமைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை ஈரானுக்குச் சீனா வழங்கி வருகிறது. இது அமெரிக்காவின் மின்னணுத் தாக்குதல்களிலிருந்து ஈரானின் எஞ்சியிருக்கும் ராணுவக் கட்டமைப்பைப் பாதுகாக்க உதவும் ஒரு ‘நிழல் போர்’ (Shadow War) உத்தியாகும்.
சீனாவின் இந்த ஒதுங்கியிருக்கும் போக்கு, சர்வதேச அரங்கில் அதன் நற்பெயருக்கு ஒரு சோதனையாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய சீனா, இப்போது தனது கூட்டாளியான ஈரான் தாக்கப்படும் போது மௌனமாக இருப்பது, மற்ற நாடுகள் சீனாவின் பாதுகாப்புக் கூட்டணியை (Security Umbrella) நம்பலாமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த மௌனம் தொடர்ந்தால், மத்திய கிழக்கில் சீனாவின் செல்வாக்கு குறையக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
ஏனெனில், சீன-அமெரிக்க மோதல் நேரடியாக வெடிக்காமல், இத்தகைய மறைமுகப் போர்களின் (Proxy Wars) மூலம் விரிவடைவது ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமையும். இறுதியில், சீனா தனது பொருளாதார நலன்களைக் காத்துக் கொள்ளப் போகிறதா அல்லது தனது ‘மூலோபாயக் கூட்டாளி’ ஈரானைப் பாதுகாக்கத் துணியப் போகிறதா என்பதைப் பொறுத்தே ஆசியாவின் அடுத்தகட்ட அரசியல் அமையும்.
கச்சாய் எண்ணெய் அரசியல்:
இந்த நிலையில் சீனாவின் மௌனம் தற்செயலானதா, அல்லது பெய்ஜிங்கின் வீதிகளில் இயங்கும் ஒரு ரகசிய வங்கி (Mystery Bank), இந்தப் போரின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறதா என்பது சீனாவின் மௌனம் ஏன் என்பதை விரைவில் தெரிந்து கொள்ள முடியும். பெய்ஜிங்கில் இயங்கும் அந்த ரகசிய வங்கி பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரின் கோர முகத்தால் இலட்சக்கணக்கான ஈரான் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். மறுபுறம், இந்த மர்ம வங்கியின் நிதி பரிமாற்றங்கள் அமெரிக்கா – ஈரான் மோதலில் ஒரு கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதா, பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகப் பின்னணியும், கச்சா எண்ணெய் அரசியலும் இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒளிந்துள்ளனவா என்பதும் தெளிவாகத் தெரியும்.
உலகமே அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் இந்த வேளையில், சீனாவின் மௌனம் ஒரு மிகப்பெரிய மர்மமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த மௌனத்திற்குப் பின்னால் பேங்க் ஆஃப் குன்லுன் (Bank of Kunlun) என்ற ஒரு சிறிய வங்கியும், பல லட்சம் கோடி மதிப்பிலான ரகசிய வர்த்தக சுழற்சியும் ஒளிந்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
சீனா ஈரானிடம் இருந்து வெறும் கச்சா எண்ணெய்யை மட்டும் வாங்கவில்லை. மாறாக அமெரிக்க டாலரைத் தவிர்த்துவிட்டு ஒரு ரகசிய பணப் பரிமாற்ற சங்கிலியை உருவாக்கியுள்ளது. இது குறித்து மேக்னம் ஃபின்வெஸ்ட் சர்வீசஸ் நிறுவனர் சௌரப் ஜெயின் கூறுகையில், அமெரிக்கா ஈரானைத் தாக்குவதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் நீங்கள் நினைப்பது அல்ல. அது பேங்க் ஆஃப் குன்லுன் என்ற யாருக்கும் தெரியாத ஒரு சீன வங்கியைப் பற்றியது” என்கிறார்.
ரகசிய பொருளாதாரப் போர்
சீனா ஒவ்வொரு மாதமும் ஈரானிடமிருந்து சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. ஆனால் சீன அரசின் அதிகாரபூர்வ தரவுகளில், இறக்குமதி பட்டியலில் ஈரான் பெயர் இருக்காது. ஈரானிய எண்ணெய் கப்பல்கள் கடலில் வைத்து மலேசிய எண்ணெய் போலச் சான்றிதழ் மாற்றப்பட்டு, மலேசியாவிலிருந்து வருவது போல சீனாவுக்கு அனுப்பப்படுகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணெய்க்கான பணத்தை சீனா டாலரில் கொடுப்பது கிடையாது. மாறாக சீனாவின் யுவான் மட்டுமே. தனது சொந்த நாணயமான யுவான் (Yuan) மூலம் குன்லுன் வங்கியில் உள்ள ஈரான் கணக்குகளில் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கிறார்கள். ஈரானால் அந்த யுவானை வெளியில் எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே, அந்த பணத்தைக் கொண்டு சீனாவிலேயே இயந்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு பொருட்களை ஈரான் வாங்குகிறது. இதன் மூலம் பணம் மீண்டும் சீனாவிற்கே திரும்புகிறது. டாலருக்கு இங்கே வேலையே இல்லை. ஈரானைப் பொறுத்தவரையில் தன்னுடைய எண்ணெய் விற்பனையும் ஆகிறது.
அத்துடன் தனது மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. அதுவும் அமெரிக்காவின் தடைக்கு மத்தியில் இப்படியான வாய்ப்பு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சீனாவுக்கோ காசு கொடுத்து வாங்கினாலும், அந்த பணம் தன் நாட்டிற்கே திரும்பவும் வருகிறது. அதன் மூலம் வர்த்தக வளர்ச்சியும் அதிகரிக்கிறது. தனது எண்ணெய் தேவையையும் குறைந்த விலையில் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. மற்ற நாடுகள் பணவீக்கத்தின் சிக்கித் தவித்து வரும் நிலையில், சீனா அதையெல்லாம் தட்டி தூக்கி விட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
ஈரானில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எண்ணெய் விலை ஒரு பீப்பாவுக்கு 100 டாலர்களுக்கு மேல் செல்லும் போது, டாலரை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இறக்குமதி செலவு தாறுமாறாக உயரும். ஆனால் சீனாவோ தள்ளுபடி விலையில் ரகசியமாக எண்ணெய் வாங்குவதால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படாது.
ஆசியாவில் சீனா ஆதிக்கம்:
இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல, ஒரு புறம் அதிகரித்து வரும் விலைவாசி, அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு எனில், மறுபுறம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு பெரும் கவலை அளிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் டாலரின் தேவை அதிகரிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது. இது இந்தியப் பங்குச் சந்தையிலும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கலாம். முதலீடுகள் வெளியேறலாம். ஆக சீனா – ஈரான் இடையிலான இந்த ரகசிய கூட்டணி, ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும். இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ஒரு வகையான மறைமுக மிரட்டலாகும்.
சீனாவின் இந்த செயல்பாடானது அமெரிக்காவுக்கும் பிரச்னைதான். ஏனெனில் உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் பணம் செலுத்தி வரும் நிலையில், சீனா மட்டும் யுவான் மூலம் எண்ணெய் வாங்கி வருகிறது. இது டாலரின் தேவையைக் குறைக்கலாம். இது அமெரிக்காவின் பலனை மெதுவாகக் குறைக்க வழிவகுக்கும். மேலும் அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தடை விதித்தால், அதை எப்படியேனும் உலக நாடுகளின் நிதிச் சந்தையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடும். ஆனால் சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவின் அந்த நிதி ஆயுதத்தை முறியடிக்கத் தொடங்கியுள்ளது.
சொல்லப்போனால் அமெரிக்காவின் எரிசக்தி அரசியலுக்கு, சீனா மறைமுகமாக ஒரு முட்டுக்கட்டையாக அமைகிறது. மேலும் குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதோடு, அதைத் தனது உற்பத்தி வளர்ச்சிக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறது. அதேசமயம் ஈரானும் நிதி ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்கவும் இது காரணமாக இருக்கிறது. இந்த சூழல்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு மறைமுக காரணியாகவும் பார்க்கப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். துப்பாக்கிகளால் நடத்தப்படும் போரை விட, இந்த ரகசிய பொருளாதாரப் போர் அமெரிக்காவுக்கு நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என நம்புகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *