முச்சந்தி

வெனிசுலா நாட்டின் புதிய தலைமை… டிரம்பின் ஆதிக்க அழுத்தத்திற்கு மண்டியிடுகிறதா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மதுரோவின் விசுவாசியான தற்போதைய இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஒரு தந்திரமான சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தை ஜாலங்கள் மூலம் மதுரோவை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் தனது சோசலிச அடித்தளத்தை ஈர்க்க வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் கீழ் கொள்கைகளை மாற்ற வேண்டும்)
வெனிசுலா இப்போது அமெரிக்க அரசின் பாதுகாப்பும் கட்டுப்பாடும் கொண்ட நாடாக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பப்படி வெனிசுலா பணியாற்றுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இன்னமும் வெனிசுலா மற்றும் ரோட்ரிக்ஸ் மீது அமெரிக்காவின் அழுத்தமும், அச்சுறுத்தல் உள்ளது து என்பதை மறுக்க முடியாது.
ஆனாலும் சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ், மதுரோ திரும்ப வேண்டும் என்றும், அமெரிக்க தலையீட்டைக் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஆனாலும் மதுரோ திரும்ப வேண்டும் என்று கோரும் பொது நிகழ்ச்சிகள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறப்படுகிறது. அத்துடன் “யாங்கி வீட்டிற்குச் செல்லுங்கள்”, “மதுரோவை திரும்பக் கொண்டு வாருங்கள்” என்று எழுதப்பட்ட பதாகைகள் கராகஸ் எங்கும் காணப்படுகின்றன. ஆனால் நாட்டின் தலைமை அமெரிக்காவிடம் மண்டியிட்டு கிடக்கும் நிலையே உண்மையில் ஏற்பட்டுள்ளது.
டிரம்பின் அழுத்தத்தின் கீழ்:
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோதும் (2017-2021) அதற்குப் பிந்தைய காலத்திலும் வெனிசுலாவின் நிகோலஸ் மதுரோ அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமான பொருளாதார, அரசியல் மற்றும் ராணுவ அழுத்தங்களை பிரயோகித்தார்.
டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மதுரோவும் அவரது மனைவியையும் நாட்டை விட்டு கடத்திச் செல்லப்பட்டனர். அமெரிக்கா மேற்கொண்ட மின்னல் நடவடிக்கைக்குப் பிறகு, வெனிசுலா தன்னை இக்கட்டான நிலையில் இருந்து மீள மீண்டும் முயற்சி செய்து வருகிறது.
வெனிசுலாவின் முன்னாள் துணைத் தலைவரும் தற்போது தற்காலிக வெனிசுலா தலைவருமான டெல்சி ரோட்ரிக்ஸ், மதுரோ மற்றும் அவரது மனைவி புளோரஸைத் திரும்பப் பெறுமாறு அழைப்பு விடுத்த போதிலும், அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரோ தற்போது நியூயார்க்கில் உள்ள புரூக்ளினின் தடுப்பு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக விசாரணைக்காக காத்திருக்கிறார். ஆனால் அவர் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார். இதன் காரணமாகவே தற்போது டிரம்பின் அழுத்தத்தின் கீழ், வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி தனது ஆட்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தந்திரமான சமநிலையை பேணல்:
இருப்பினும், மதுரோவின் விசுவாசியான ரோட்ரிக்ஸ் ஒரு தந்திரமான சமநிலையைப் பேண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு வார்த்தை ஜாலங்கள் மூலம் மதுரோவை தொடர்ந்து ஆதரிப்பதன் மூலம் தனது சோசலிச அடித்தளத்தை ஈர்க்க வேண்டும். அதே நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் கீழ் கொள்கைகளை மாற்ற வேண்டும். அதற்கு இணங்கவில்லை என்றால் மதுரோவைப் போன்ற நிலை அவருக்கும் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலுடன் அவர் இருக்கிறார்.
வெனிசுலா இப்போது ஒரு அமெரிக்க பாதுகாப்பு நாடாக இருப்பதாக டிரம்ப் மறைமுகமாகக் கூறியுள்ளார். எனவே அவர் அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பப்படி பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது.
புதிய தலைவர் ரோட்ரிக்ஸ் இப்போது ஒரு இராஜதந்திர இறுக்கமான கயிற்றின் மேல் நடந்து வருகிறார். அமெரிக்காவின் எரிசக்தி ஆதிக்கப் போட்டியின் காரணமாக இதுபோன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி மதுரோ ஏற்கனவே எச்சரித்திருந்தார் என்று ரோட்ரிக்ஸ் ஓர் அறிக்கையில் கூறினார். சிறிது காலத்திலேயே, கராகஸ் அரசு 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெயை வழங்க ஒப்புக் கொண்டதாகவும் – பணத்தை அவர் நிர்வகிப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
CIA இயக்குனருடன் ரோட்ரிக்ஸ்:
மதுரோ கடத்தப்பட்ட பின்னர், ஜனவரி 16 அன்று தேசிய சட்டமன்றத்தில் தனது முதல் உரையில், ரோட்ரிக்ஸ் அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்கத்தை கடுமையாக விமர்சித்தார். அதே நாளில், ரோட்ரிக்ஸ் கராகஸில் CIA இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப்பை சந்தித்தார். இதன் மூலம் அவரது இரட்டை நிலையை இந்த தொடர்பு மூலம் உறுதிப்படுத்தினார்.
ரோட்ரிக்ஸ் தொடர்ந்தும் தலைமையை பேண சட்டபூர்வமான தன்மையை நிரூபிக்க வேண்டும் என்றால் அமெரிக்காவின் இராணுவ வலிமையிலேயே தங்கி உள்ளது. இதற்கு டிரம்ப் விரும்பினால் அதற்கு சாத்தியமாகும்.
வெனிசுலா இடதுசாரிகளையும் அமெரிக்க நிர்வாகத்தையும் பக்கவாட்டில் வைத்திருக்கும் இந்த இரட்டைச் செயலை ரோட்ரிக்ஸ் அரசு எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்று தெரியவில்லை. மேலும் அவர் அமெரிக்க உதவியை தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது ஒரு கடினமான தேர்வாக இருக்குமா அல்லது அவரது தரப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள விடுவார்களா என்று தெரியவில்லை.
அதிகரிக்கும் அழுத்தம்:
ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் டிரம்பிற்கு எதிராக எரிச்சலூட்டும் கருத்துக்களை வெளியிடுவதை ரோட்ரிக்ஸ் தவிர்த்து வருகிறார். அதேவேளை அமெரிக்க விரிவாக்கத்திற்கு எதிரான லத்தீன் அமெரிக்க கம்யூனிச எதிர்ப்பில் ஆழமாக வேரூன்றிய மொழியையும் பயன்படுத்தியுள்ளார். அமெரிக்காவை கொடிய அணுசக்தி படையெடுப்பாளர் என்றும் ஏகாதிபத்தியவாதி என்று குறிப்பிட்டு வருகிறார்.
அமெரிக்காவின் விருப்பமான வெனிசுலா பிரதேசத்தில் மேலும் தலையீடு, அதிக பொருளாதாரத் தடைகள் மற்றும் மேலும் எண்ணெய் முற்றுகைகள் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோட்ரிக்ஸ் இடதுசாரி அடிமட்ட மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றாலும், அவர்கள் சமூகத்தில் 15-20% மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். மேலும் மதுரோவை ஒருபோதும் ஆதரிக்காத பல வெனிசுலா மக்கள் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
மதுரோ ஆட்சியில் இருந்த 13 ஆண்டுகளில், மதுரோவின் புகழ் குறைந்து வந்தது. அத்துடன் தேர்தலில் வாக்கு மோசடி செய்யப்பட்டதாக சர்வதேச அளவில் பரவலான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அவரது 2024 தேர்தல் வெற்றி கேள்விக் குறியானது. மேலும் மதுரோவின் பதவிக் காலத்தில் 2014 முதல் 8 மில்லியனுக்கும் அதிகமான வெனிசுலா மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அத்துடன் UNHCR ஆல் 6.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அகதிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக போராடி வரும் வெனிசுலா பொருளாதாரமும், நாட்டின் பணவீக்கம் உலகிலேயே மிக அதிகமாக உள்ளது. மேலும் வெனிசுலா நிதி ஆய்வகத்தின்படி 2024 இல் 86% வெனிசுலா மக்கள் வறுமையில் இருந்தனர் என்று கூறுகிறது.
வெனிசுலாவில் அத்தியாவசிய உணவு மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. 2025 இல் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், 60 அன்றாடப் பொருட்களைக் கொண்ட ஒரு அடிப்படை உணவுக் கூடையின் விலை $526.83 என்று கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளாக மிகுந்த பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்கள், அமெரிக்க முதலீடு நெருக்கடியைக் குறைக்கும் என்று தற்போது நம்புகிறார்கள்.
ஆனால் அமெரிக்கா இதுவரை எண்ணெய் துறையில் மட்டுமே உறுதியாக கவனம் செலுத்தி வருவதால், மற்றய முதலீடுகளுக்கு சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.
கடுமையான பொருளாதார தடை:
வெனிசுலாவில் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக (Economic Sanctions)எண்ணெய் உற்பத்தி செய்யும் துறைமுகங்கள் முடக்கம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவின் பொருளாதாரத்திற்கு ஆதாரமான அதன் அரசு எண்ணெய் நிறுவனமான (PDVSA) மீது டிரம்ப் நிர்வாகம் கடுமையான தடைகளை விதித்தது. இது வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை வெகுவாகக் குறைத்தது.
வெனிசுலா அரசு அமெரிக்க நிதிச் சந்தைகளை அணுகுவதற்கும், கடன்களைப் பெறுவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டன. சொத்துக்கள் பலவும் முடக்கப்பட்டன. அமெரிக்காவில் உள்ள வெனிசுலா அரசாங்கத்தின் அனைத்து சொத்துக்களும் முடக்கப்பட்டன. ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் அழுத்தம் (Regime Change & Political Pressure) என்பது ஒரு முக்கியமான விஷயம் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஜுவான் குவைடோவிற்கு ஆதரவு:
2019 இல் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுவான் குவைடோவை அந்நாட்டின் சட்டப்பூர்வ இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது. அதேவேளை மதுரோவை சர்வாதிகாரி என அமெரிக்க அரசு நிராகரித்தது.
வெனிசுலாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்த டிரம்ப் நிர்வாகம் பல நாடுகளுடன் இணைந்து இவ்வாறு செயல்பட்டது.
மேலும் ராஜதந்திர தனிமைப்படுத்தல் என்ற போர்வையிலும், இராணுவ மற்றும் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை என்று வெனிசுலா அரசை கடுமையாக தண்டிக்கும் வகையில் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. வெனிசுலா கடலோரப் பகுதியில் அமெரிக்கப் போர்க்கப்பல்களைக் குவித்து, எண்ணெய் ஏற்றிச் சென்ற பல கப்பல்களைக் கைப்பற்றியது. கொடிய போதைப் பொருள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்ற வழக்குகளை அமெரிக்கா பதிவு செய்தது. முன்னாள் அதிபர் மதுரோ மீது குற்ற வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
வெனிசுலா தற்போதைய நிலை:
பாரிய பொருளாதார சரிவு காரணமாக பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கத் தடைகளால் வெனிசுலாவின் பொருளாதாரம், எண்ணெய் உற்பத்தி கடுமையாக சரிந்தது. உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனால் அமெரிக்க எதிர்ப்பு காரணமாக மதுரோ அரசாங்கம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை “ஏகாதிபத்திய தலையீடு” என்றும், தங்களை கவிழ்க்கும் முயற்சி என்றும் கூறி கடுமையாக எதிர்த்தது, தங்களை “வெல்ல முடியாதவர்கள்” எனவும் முன்னர் அறிவித்தது.
டிரம்ப் மீண்டும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கிய நிலையில் 2025-2026 காலப்பகுதியில் வெனிசுலாவின் எண்ணெய் கப்பல்களைக் கைப்பற்றுவது, மதுரோவை சிறைபிடிக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் எண்ணெய் வளத்தை அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகள் மூலம் அழுத்தம் அதிகரித்தது.
டிரம்பின் “அதிகபட்ச அழுத்தம்” (Maximum Pressure) கொள்கை வெனிசுலாவின் பொருளாதாரத்தை முடக்கி, மதுரோ அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் ஆட்சி மாற்றத்தை உடனடியாகக் கொண்டுவர உடனடியாக முடியவில்லை. இதன் விளைவாக மதுரோ கடத்தப்பட்டு அமெரிக்க நாட்டின் சிறையில் அடைப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *