உலகம்

30 ஆண்டுகளில் இல்லாத அதிரடி; எரிபொருள் விலையை கட்டுப்படுத்த தென்கொரியா முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தனது நாட்டு மக்களைப் பாதுகாக்கத் தென்கொரியா வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டு எரிபொருள் விலைக்கு உச்சவரம்பு விதிக்க அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் உத்தரவிட்டுள்ளார்.

திங்கட்கிழமை நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, “அதிகப்படியான விலையேற்றத்தைக் கண்டுள்ள பெட்ரோலியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை முறையை அரசாங்கம் விரைவாகவும் துணிச்சலாகவும் நடைமுறைப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

உலகளாவிய வர்த்தகம் மற்றும் மத்திய கிழக்கு எரிசக்தி இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் தென்கொரியாவிற்கு, தற்போதைய நெருக்கடி பெரும் சுமையாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை ஊடான விநியோகத் தடைகளைச் சமாளிக்க, மாற்று வழிகள் மூலம் எரிசக்தியைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட இந்த விலைக்கட்டுப்பாட்டு முறையானது இந்த வாரத்திற்குள்ளேயே நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இந்த ‘அதிகபட்ச விலை’ மாற்றியமைக்கப்படும். தென்கொரியாவிடம் தற்போது 208 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் கையிருப்பு உள்ளது.

மேலும், அரசு நிறுவனமான ‘கொரியா நேஷனல் ஒயில் கோப்’ மூலம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயையும் உள்நாட்டுத் தேவைக்குத் திருப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

போர் பதற்றம் காரணமாகத் தென்கொரியாவின் நிதிச் சந்தையும் இன்று கடும் சரிவைச் சந்தித்தது. பெஞ்ச்மார்க் KOSPI குறியீடு 6 வீதம் வீழ்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் சரிவு 9 வீதத்தை எட்டியதால், இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

கொரிய நாணயமான ‘வோன்’, அமெரிக்க டொலருக்கு எதிராக 1 வீதம் வீழ்ச்சியடைந்து 1,500 என்ற அபாயக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

சந்தையை நிலைப்படுத்த தேவைப்பட்டால் 100 டிரில்லியன் வோன் (சுமார் 67 பில்லியன் டொலர்) மதிப்பிலான திட்டத்தை விரிவுபடுத்தவும், மேலதிக நிதி ஆதாரங்களை உருவாக்கவும் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *