உலகம்

போர் நிறுத்தப் பேச்சு வார்த்தைகளுக்கு இடமில்லை; அமெரிக்கா, இஸ்ரேல் மீது கடும் குற்றச்சாட்டு

ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் நடத்திய நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போதைய போர்ச் சூழல் மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

இராணுவ மோதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், போர்நிறுத்தம் அல்லது அது தொடர்பான மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகள் என்பன “பொருத்தமற்றவை” என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈரான் இந்த போரைத் தொடங்கவில்லை.

இருப்பினும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், எதிரிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பதிலடி கொடுக்கவும் ஈரான் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் துருக்கி, சைப்ரஸ் மற்றும் அஸர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு எதிராகத் தங்களது ஆயுதப்படைகள் எந்தவொரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என அவர் மறுத்துள்ளார்.

மாறாக, இத்தகைய குற்றச்சாட்டுகள் சில சக்திகளால் “திட்டமிட்டு நடத்தப்பட்டவை” ஆக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஈரானின் மீது சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே நடைபெற்று வந்த இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை, அமெரிக்கா வேண்டுமென்றே முறியடித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், அனைத்து சர்வதேச சட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

ஈரானைத் துண்டாடி, அதன் “எண்ணெய் வளங்களைக்” கைப்பற்றுவதே அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் ஈரான் உறுதியாக இருந்தாலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அண்டை நாடுகளின் நிலப்பரப்பு பயன்படுத்தப்பட்டால், அதற்குத் தக்க பதிலடி கொடுக்கும் “தற்காப்பு உரிமை” ஈரானுக்கு உண்டு என அவர் எச்சரித்துள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *