அமெரிக்கா,இஸ்ரேலின் அகோர தாக்குதலால் ‘நெருப்பு ஆறாக’ மாறிய தெஹ்ரான்!; அந்தப் பிரதேசமெங்கும் எண்ணெய் ஆறாக ஓடுவதால் காணும் இடமெங்கும் ‘நெருப்புக் கோளங்கள்

ஈரானின் எண்ணெய் குதங்கள் மீது நேற்று முன்தினம் சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் தலைநகர் தெஹ்ரான் ‘நெருப்பு ஆறாக’ மாறியுள்ளது. வானத்திலிருந்து எண்ணெய் மழை பொழிவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்த நிலையில் அன்று இரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலாலேயே தலைநகர் தெஹ்ரான் ‘நெருப்பு ஆறாக’ மாறியுள்ளது.அந்தப் பிரதேசமெங்கும் எண்ணெய் ஆறாக ஓடுவதால் காணும் இடமெங்கும் ‘நெருப்பு ஆறாக’ மாறியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் எண்ணெய் குதங்களை இலக்கு வைத்து அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தீப்பிடித்ததில் ஈரானின் தலைநகர் தீக்கிரையாகியுள்ளது. தாக்குதல்களை இன்னும் தீவிரப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் அரசாங்கம் தனது விமானம் தாங்கி போர்க்கப்பலை இப்பகுதிக்கு அனுப்ப ஆலோசித்து வருகிறது. ஆனால், டொனால்ட் டிரம்ப் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மரை கிண்டல் செய்யும் விதமாக, “நாங்கள் ஏற்கனவே வென்ற போரில் வந்து சேருபவர்கள் எங்களுக்குத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
ஈரானுக்கு தரைப்படையை அனுப்புவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், தரைப்படையை அனுப்புவது “சிறப்பான விஷயமாக இருக்கும்” என்றார். இருப்பினும், “தற்போது நாங்கள் அவர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம். தரைப்படையை அனுப்ப மிக முக்கிய காரணம் இருக்க வேண்டும். ஒருவேளை நாங்கள் தரைப்படையை அனுப்பினால், அவர்கள் (ஈரான்) தரைமட்டத்தில் போரிட முடியாத அளவிற்கு ஏற்கனவே அழிக்கப்பட்டிருப்பார்கள்” என்று அவர் எச்சரித்தார்.
இதேவேளை ஜோர்தான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளத்தில், தாட் வான் பாதுகாப்பு கவசத்தை ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துவிட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.22,000 கோடி ஆகும். 8 நாள் போரில் அமெரிக்காவுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 6 அமெரிக்க வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க-இஸ்ரேல் – ஈரான் 9-வது நாள் போர்:
புதிய தலைமை: ஈரானின் அடுத்த உச்ச தலைவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தனது தாக்குதல் தொடரும் என அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் பாதிப்பு: ஈரானின் ஏவுகணைத் தாக்குதலால் பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் மூவர் காயம். குவைத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இரண்டு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு; குவைத் சிற்றி கோபுரம் தீப்பற்றி எரிந்தது.
பெய்ரூட் தாக்குதல்: லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஒரு கடற்கரை ஹோட்டல் (ஈரானிய புரட்சிகர காவல்படையினர் தங்கியிருந்த இடம்) மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்க வீரர்கள் பிடிபட்டதாக ஈரான் கூறிய புகாரை அமெரிக்கா மறுத்துள்ளது.
நெதன்யாகு எச்சரிக்கை: போரின் அடுத்த கட்டத்திற்காக ‘பல ஆச்சரியங்களை’ வைத்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
![]()