இஸ்ரேல் அதிபர் சிட்னி வருகை… மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) ஐந்து நாள் பயணமாக அவுஸ்திரேலியா விஜயம் செய்துள்ளார். இஸ்ரேல் அதிபரின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு நாடாளவிய ரீதியில் கிளம்பியுள்ளது.
கடந்த டிசம்பரில் Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அவுஸ்திரேலியா அரச வட்டாரங்கள் தெரிவித்தன.
இஸ்ரேல் அதிபரின் அவுஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு நாடாளவிய ரீதியில் கிளம்பியுள்ளதுடன், இந்த வருகைக்கு எதிராக சிட்னியில் எதிர்ப்பு பேரணி காரணமாக காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை எச்சரித்துள்ளது. சிட்னி டவுன் ஹாலில் இருந்து பாராளுமன்ற கட்டிடம் வரை பேரணியில் போராட்டக்காரர்கள் சென்றனர். ஆனால் அந்தப் பாதை சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட பகுதி என்று போலீசார் கூறியதால் போராட்டக்காரர்கள் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது. அங்கீகரிக்கப்படாத சாலைகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டால், அந்தக் குழு கைது செய்யப்படும் என்று உதவி போலீஸ் கமிஷனர் பால் டன்ஸ்டன் ஊடகங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தார்.
காசா பகுதியில் வெளிப்படும் மனிதாபிமான துயரத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலிய அதிபருக்கான அழைப்பை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் முதலில் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு உடனடியாக நிராகரித்து விட்டது.
ஆனால் இஸ்ரேலிய ஜனாதிபதி அவுஸ்திரேலியாவில் கெளரவ விருந்தினராக வரவேற்கப்படுவார் என்று தற்காலிக பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார். இருப்பினும், இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிட்னியில் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொண்டி கடற்கரை படுகொலை:
சிட்னி, பொண்டி கடற்கரையில் கடந்த வருடம் டிசம்பர் 14 ஆம் திகதி யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உறவை மேம்படுத்த இஸ்ரேலிய அதிபரை சிட்னி வருகை தர அரசு வரவேற்றது.
பொண்டி கடற்கரை படுகொலையை அடுத்து, அவுஸ்திரேலியாவில் வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த புதிய சட்டம் (hate speech legislation) கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவின் பொண்டி (Bondi) கடற்கரை பகுதியில் யூதர்களின் ஹனுக்கா விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறையைத் தூண்டும் செயல்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ் அறிவித்துள்ளார்.
பொண்டி தாக்குதல், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பால் தூண்டப்பட்டதாக சிட்னி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த 50 வயது சாஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சாஜித் பொலிஸாரால் உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டார், நவீத் பல குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுப்பு பேச்சு புதிய சட்டத்தில் (hate speech legislation) முக்கிய பல விடயங்கள் குறித்து தொடர்ந்து நாடளாவிய ரீதியாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறையை ஊக்குவிப்பவர்களை எளிதில் குற்றம் சாட்டும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் வெறுப்பு பேச்சில் ஈடுபடும் அமைப்புகளை குறிவைக்கும் தனி நடைமுறை அமுல்படுத்தப்படும். இந்த சட்டத்தால் பல்லின கலாச்சார நாட்டின் அடிப்படை மனித உரிமைகள் பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் யூத அமைப்புக்கள், அவுஸ்திரேலிய அரசு பல ஆண்டுகளாக யூத விரோத தாக்குதல்களை புறக்கணித்துள்ளது என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக குற்றம் சாட்டியுள்ளனர். பொண்டி கடற்கரை தாக்குதலில் பத்து வயது மடில்டா உள்ளிட்ட பலர் உயிரிழந்ததால், நாடு முழுவதும் துயரமும் கோபமும் ஏற்பட்டது. அதேவேளை சிட்னி மற்றும் மெல்போர்னில் நடந்த யூதர்களை குறிவைத்த தீக்கிரை சம்பவங்கள் காரணமாக, அவுஸ்திரேலியா கடந்த ஆகஸ்டில் ஈரான் நாட்டின் தூதுவரை வெளியேற்றியதும் குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு
தற்போது யூத சமூகத்தின் பாதுகாப்பு அவுஸ்திரேலிய நாட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையிலேயே அவுஸ்திரேலிய நாட்டுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் அதிபருக்கு அவுஸ்திரேலியா அரசு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று ஜனவரி 8 ஆம் திகதி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹர்சக் அவுஸ்திரேலியா வந்துள்ளார்.
யார் இந்த ஐசக் ஹெர்சாக் ?
இஸ்ரேலின் அதிபரான மூத்த அரசியல்வாதியும் பாரம்பரிய இஸ்ரேலிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஐசக் ஹெர்சாக் 2021இல் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த காலங்களில் 65வயதான ஐசக் ஹெர்சாக் இஸ்ரேலின் தொழிற்கட்சியின் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2013 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தத் தேர்தலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.
ஐசக் ஹெர்சாக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் இஸ்ரேல் நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவரது தந்தை சைம் ஹெர்சாக்கும் இஸ்ரேல் அதிபராக இருந்தவர். அதற்கு முன் ஐநா சபையின் இஸ்ரேல் தூதராகவும் சில காலம் இருந்துள்ளார். அவரது மாமா, அபா எபன், இஸ்ரேலின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், ஐநா சபை மற்றும் அமெரிக்காவின் தூதராக இருந்துள்ளார்.
இஸ்ரேலில் கடந்த 2019-2021 ஆண்டுகளில் 4 முறை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த 4 முறையும் தற்போது பிரதமராக உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெரும்பான்மை தேவையான 61 இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை. இந்நிலையில், அங்கு எதிர்க்கட்சிகள் கொண்ட கூட்டணி ஆட்சியை அமைத்தமை அறிந்ததே.
போர்க் குற்றவாளியா ?
2023இன் இறுதியில் இஸ்ரேல் தொடரும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே இதனை சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றம் பற்றி விசாரிக்க முடியும் என திட்டவட்டமாக அறிவித்தது.
பாலஸ்தீனம் உடனான போரில் அதிகமான சட்டவிதி மீறல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இவ்வாறானதொரு போருக்கே அவசியம் இல்லை என்றும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 74 000 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அதில், பெண்களும், குழந்தைகளுமே அதிகமாக உயிரிழந்தனர்.
போரை நிறுத்ததை கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் (United Nations Security Council, UNSC) பாலஸ்தீன ஆதரவு நாடுகளின் தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ரத்து செய்து வந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச நீதிமன்றத்தினால் (International Court of Justice) பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்ததுடன், இதனை தொடர்ந்து இஸ்ரேல் அதிபரும் போர்க் குற்றவாளி என பல நாடுகளால் அறிவிக்கப்பட்டார்.
அத்துடன் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்குக் கைதாணை பிறப்பிக்க அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் முடிவு செய்தது. இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் பகிரங்கமாக அதற்கு கண்டனம் தெரிவித்தன. மறுபுறம், துருக்கியும் பல அரபு நாடுகளும், மனித உரிமைக் குழுக்களும் இதனை வரவேற்றன.
மேலும் இஸ்ரேலின் முன்னாள் தற்காப்பு அமைச்சர் யோயேவ் காலண்ட், ஹமாஸ் ராணுவத்
தலைவர் முகம்மது டெய்ஃப் இருவருக்கும் நீதிமன்றம் கைதாணை பிறப்பித்தது. மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் தொடர்பில் இந்தக் கைதாணை பிறப்பிக்கப்பட்டது. இஸ்ரேலியத் தலைவர்களுக்குக் கைதாணை பிறப்பிக்கப்பட்டதை அமெரிக்க அரசு கடுமையாக எதிர்த்தது.
இஸ்ரேலிய அரசின் அதிபரின் வருகைக்கு பலஸ்தீன ஆதரவு அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. போராட்டங்களை பாரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 12 ஆம் திகதிவரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ள இஸ்ரேல் அதிபர், யூத சமூகத்தினருடன் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹர்சக்கின் அவுஸ்திரேலிய வருகைக்கு எதிராக சிட்னியில் போராட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போராட்டங்கள் மீதான தடையை நியூ சவுத் வேல்ஸ் மாநில நீதிமன்றம் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()