முச்சந்தி
வளைகுடா எண்ணெய் அரசியல்…. ஈரான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்கா!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மத்திய கிழக்கின் கருப்புத் தங்கம் என வர்ணிக்கப்படும் எண்ணெய் வளம், வளைகுடா நாடுகளுக்கு வரமாக அமைவதற்குப் பதிலாக தீராத காயங்களையும், வலிகளையும் பரிசாகத் கொடுத்திருக்கிறது)மத்திய கிழக்கின் கருப்புத் தங்கம் என வர்ணிக்கப்படும் எண்ணெய் வளம், வளைகுடா நாடுகளுக்கு வரமாக அமைவதற்குப் பதிலாக தீராத காயங்களையும், வலிகளையும் பரிசாகத் கொடுத்திருக்கிறது. மேற்குலகால் மறைக்கப்பட்ட, மழுங்கடிக்கப்பட்ட கசப்பான சதி அரங்கேற்ற நிகழ்வு வரலாற்றுப் பக்கங்களில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளன.
1953ம் ஆண்டு ஈரானில் அமெரிக்க சீஐஏ, பிரித்தானிய எம்ஐ6 உளவு நிறுவனங்களால் அரங்கேற்றப்பட்ட ‘ஒபரேஷன் அஜாக்ஸ்’ (Operation Ajax) என்ற ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தில், ஈரானிய மண்ணில் ஒரு ரகசிய சதித்திட்டத்தை அரங்கேற்றின. ஈரான் ஒரு மகத்தான மாற்றத்தை நோக்கி 1950களின் தொடக்கத்தில் நகர்ந்தது. மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முஹம்மது மொசத்திக் (Mohammad Mossadegh), ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து, ஈரானின் எரிசக்தி வளங்கள் அனைத்தும் அந்நாட்டு மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு வெளிநாட்டு சக்திகள் உரிமைக் கொண்டாட முடியாது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.

இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் ஈரானின் எண்ணெய் கிணறுகள் அனைத்தும் பிரிட்டிஷ் நிறுவனமான ‘எங்லோ-பெர்ஷியன் ஒயில் கம்பெனி’ – APOC (இன்றைய British Petroleum BP நிறுவனம்) வசம் இருந்தன. பிரதமர் மொசத்திக் எடுத்த ஒரு துணிச்சலான முடிவு சுரண்டல் சாம்ராஜ்யங்களை உலுக்கியது. அவர் ஈரானின் அனைத்து வளங்களையும் தேசிய மயமாக்கினார்.
மேற்குலக நிறுவனங்கள் தங்களது சுரண்டல் இலாபம் பறிபோவதைக் கண்டு சீற்றமடைந்து பிரிட்டன், அமெரிக்காவின் உதவியை நாடியது. இதன் விளைவாக, அமெரிக்காவின் CIA மற்றும் பிரிட்டனின் MI6 ஆகிய உளவு அமைப்புகள் இணைந்து ஈரானிய மண்ணில் ஒரு ரகசிய சதித்திட்டத்தை அரங்கேற்றின.
மேற்குலக சக்திகளின் போர்முறையின் முக்கிய அங்கமான பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. மொசத்திக்கிற்கு எதிராகக் செயற்கையான கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, 1953 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மொசத்திக் அதிகாரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டார். ஒரு தேசத்தின் மக்களாட்சி ஜனநாயகம் நசுக்கப்பட்டு, மேற்கத்திய நாடுகளின் தாளத்திற்கு ஆடும் ‘ஷா பஹ்லவி’ (King Shah) என்ற அமெரிக்க அடியாளான மன்னர் ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ஈரானில் ஏகாதிபத்திய கொடுங்கோலர்களுக்கு தலையாட்டும் பொம்மை முடியாட்சி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.
இந்தச் சதிக்குப் பிறகு, ஈரானின் எண்ணெய் கிணறுகள் மீண்டும் அந்நிய நாடுகளின் வசமானது. ஈரான் நாட்டின் இறையாண்மை திருட்டு எண்ணெய் வியாபாரிகளின் கைகளில் மீண்டும் அடகு வைக்கப்பட்டது.
அப்போதய ஆட்சி கவிழ்ப்புக்குப் பிறகு, மொசத்திக் கைது செய்யப்பட்டு ராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். சொந்த நாட்டு மக்களின் நலனுக்காகப் போராடிய அவர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆரம்பத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் அவருக்கு இருந்த செல்வாக்கையும் அவரது முதுமையையும் கருத்தில் கொண்டு, 1953 டிசம்பர் 21 அன்று அவருக்கு மூன்று ஆண்டுகள் தனிமைச் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பின்னர் மூன்று ஆண்டுகாலச் சிறைவாசத்திற்குப் பிறகு 1956இல் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அந்த விடுதலை முழுமையானதாக இருக்கவில்லை. அவர் தனது சொந்த ஊரான அஹ்மதாபாத்தில் உள்ள இல்லத்திலேயே வாழ்நாள் முழுவதும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் திகதி, தனது 84-வது வயதில் மொசத்திக் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று அஞ்சிய ஷா மன்னர், அவரை ஒரு பொது மயானத்தில் அடக்கம் செய்யக்கூட அனுமதி மறுத்தார். இறுதியில், மொசத்திக்கின் உடல் அவரது இல்லத்தின் ஒரு அறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் இந்த அநீதியே பிற்காலத்தில் 1979இல் வெடித்த ஈரானியப் புரட்சிக்கு வித்திட்டது என்று சொல்லலாம். அந்தப் புரட்சி, மத்திய கிழக்கில் அமெரிக்க அரசியல் நலன் காக்கும் அரபு நாடுகளின் தலைவர்களிடையே நடுக்கத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியது.
எண்ணெய் அரசியல் :
மத்திய கிழக்கில் “எண்ணெய் அரசியலுக்காக” அரங்கேற்றப்பட்ட ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளும், பற்ற வைக்கப்பட்ட நெருப்பும் இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. மனித உயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் அரசு அமெரிக்கா- மேற்குலக நாடுகளுடன் மல்லுக்கட்டி முரண்பட்டு வருகிறது. இதனால் ஈரானை வீழ்த்த அமெரிக்க- மேற்குலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
ஈரான் இஸ்லாமியக் குடியரசு வீழ்ந்துவிடும் என்ற கனவை மேற்கத்திய ஊடகங்களும்
ஏகாதிபத்திய சக்திகளும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கூறி வருகின்றன. தற்போது வெளியாகும் செய்திகள் அனைத்தும், ஈரானின் வலிமையையும் நிலைத்தன்மையையும் குறைத்து மதிப்பிடும் இன்னொரு தோல்வியடைந்த பிரச்சார முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன.
ஏகாதிபத்திய சக்திகளும் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கூறி வருகின்றன. தற்போது வெளியாகும் செய்திகள் அனைத்தும், ஈரானின் வலிமையையும் நிலைத்தன்மையையும் குறைத்து மதிப்பிடும் இன்னொரு தோல்வியடைந்த பிரச்சார முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன.அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஈரானின் மீது விதித்துள்ள சட்டவிரோத பொருளாதாரத் தடைகள் குறித்து, ஈரான் அரசு அதைத் தெளிவாகவே ‘பொருளாதார பயங்கரவாதம்’ என்று வர்ணிக்கின்றது. ஈரான் மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சிரமங்களுக்கு அரசாங்கம் காரணமல்ல; மாறாக, மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் மனிதாபிமானமற்ற அரசியல் அழுத்தங்களே இதற்கான பிரதான காரணம் என்பதையே அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முனையும் வெளிநாட்டு உளவு அமைப்புகள், அப்பாவி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், ஆனால் அந்த முயற்சிகளை ஈரானின் பாதுகாப்புப் படைகளும் புரட்சிகரக் காவல்படையும் (IRGC) இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகவும் ஈரான் ஆளும் அரசு கூறுகிறது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளாகவே அவர்கள் கருதுகின்றனர். இதேவேளை 86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வழிகாட்டுதலின் கீழ், ஈரான் தனது இறையாண்மையைக் காப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காத உறுதியுடன் செயல்பட்டு வருகிறதாக கூறுகிறது. கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு கிளர்ச்சிகள், அழுத்தங்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை வெற்றிகரமாக கடந்து வந்ததுபோல, தற்போதைய அந்நிய சக்திகளின் ஊடுருவல்களையும் ஈரான் மீண்டும் தாண்டிச் செல்லும் என்பதில் ஈரானிய அரசு உறுதியாக நம்புகின்றது.
மேற்கத்திய ஊடகங்கள் ஈரானின் ‘வெல்ல முடியாத பிம்பம்’ உடைந்துவிட்டதாக கூறுவது வெறும் அரசியல் மாயை மட்டுமே என்றும், உண்மையில் ஈரானின் ஏவுகணை வலிமையும், அதன் ‘எதிர்ப்பு அச்சு’ (Axis of Resistance) முன்பைவிட மேலும் வலுவடைந்துள்ளதாகவும் ஈரானிய ஆளும் அரசு வாதிடுகின்றது.

1979 இஸ்லாமியப் புரட்சியின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் ஈரானில் இருக்கும் வரை, தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மேற்கத்திய நாடுகளின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்பதே அவர்களின் உறுதியான நிலைப்பாடாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தற்காலிகமானவை என்றும், சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் ஈரான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்கும் என்றும், எதிரிகளின் அனைத்து அழுத்தங்களையும் தாண்டி நாடு தனது பாதையில் முன்னேறும் என்றும் அந்த அரச ஆதரவுத் தரப்பு உறுதியாக நம்புகிறது.
![]()