முச்சந்தி

முழுமையான முற்றுகைக்குள் கியூபா…  கம்யூனிச நாடு வீழுமா? மீண்டெழுமா?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

கியூபாவிற்குள் நுழையும் அனைத்து எண்ணெய் இறக்குமதிகளையும் நிறுத்துவதற்காக, டிரம்ப் நிர்வாகம் ஒரு கடற்படை முற்றுகையை தொடங்கியுள்ளது. அத்துடன் கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.
கியூபாவில் எண்ணெய் இறக்குமதியை முடக்கினால் ஆட்சியை வீழ்த்த முடியும் என டிரம்ப் நிர்வாகத்தின் முதன்மை அதிகாரி குறிப்பிட்டிருந்ததார். ஆனாலும் கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் அமெரிக்காவிலிருந்து ஏற்படக்கூடிய சாத்தியமான ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் நாடுகளின் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை செயல்படுத்துகிறது மற்றும் கியூப அரசாங்கத்தை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு “அசாதாரண அச்சுறுத்தல்” என்று அழைக்கிறது.
கியூபாவின் வெளியுறவு அமைச்சர் டிரம்பின் நிர்வாக உத்தரவைக் கண்டித்து, அதை “மிருகத்தனமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று அழைத்தார். இந்த நடவடிக்கை கியூபா நாட்டில் ஏற்கனவே ஆழமாக உள்ள எரிசக்தி நெருக்கடியை மேலும் அதிகரிக்கக்கூடும்.
கரீபியன் தீவில் உள்ள இந்த நாடு சமீபத்திய ஆண்டுகளில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்துள்ளது. இது அதன் மின் உற்பத்தியை பாதித்து பரவலான மின்தடையை ஏற்படுத்தியது. அத்துடன் டிரம்ப் தலைமையிலான அரசு கியூபாவிற்கான வெனிசுலா நாட்டின் எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதுடன், கடல் வழி முற்றைகையை தொடங்கி உள்ளார்.
கியூபா 1962 முதல் பெரும்பாலும் அமெரிக்கத் தடையின் கீழ் உள்ளது.
65 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முழு நாட்டின் மீதும் விதிக்கப்பட்ட மிக நீண்ட மற்றும் கொடூரமான பொருளாதார முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இப்போது கடினமான வாழ்க்கை நிலைமைகளுக்கு உட்படுத்தப்படுவது உறுதிசெய்யப்பட்ட கியூபாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிரான இந்த மிருகத்தனமான அமெரிக்க ஆக்கிரமிப்புச் செயலை நாங்கள் கண்டிக்கிறோம் என்று கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
கியூபா அரசு வெனிசுலா, மெக்சிகோ, ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் ஏற்றுமதிகளையே பெரிதும் நம்பியுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் அமெரிக்கா இராணுவத் தாக்குதலைத் தொடங்கி ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்தியதிலிருந்து வெனிசுலாவிலிருந்து எரிபொருள் விநியோகம் கியூபாவிற்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி கியூபாவிற்கு இனி வெனிசுலா எண்ணெய் செல்லாது என்று டிரம்ப் கூறியதுடன், கடல் வழியாக முற்றுகையை பலப்படுத்தி உள்ளார். மேலும் கியூபா அரசாங்கம் வீழ்ச்சியுற தயாராக உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ மீதும் டிரம்ப் அழுத்தம் :
சமீபத்திய நடவடிக்கைகள் மெக்சிகோ மீதும் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. இது கியூபாவிற்கு எரிசக்தி வழங்கும் சில நாடுகளில் ஒன்றாகும். மெக்சிகோவின் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான பெமெக்ஸ், அதன் சமீபத்திய அறிக்கையில், ஜனவரி முதல் செப்டம்பர் 30, 2025 வரை கியூபாவிற்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20,000 பீப்பாய்கள் எண்ணெயை அனுப்பியதாகக் கூறியது.
ஆனால் மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கண்காணிக்கும் நிபுணர்கள் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 7,000 பீப்பாய்களாகக் குறைந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.
அமெரிக்க தடை காரணமாக மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் இந்த பிரச்சினையில் தனது நாடு எங்கு நிற்கிறது என்பது குறித்து தெளிவற்றவராக உள்ளார். அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில், ஹவானாவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியதாக வந்த செய்திகளை அவர் மறுத்தார்.
மேலும் டிரம்புடன் வலுவான உறவை உருவாக்க முயன்று வரும் ஷீன்பாம், மெக்சிகோ கியூபாவுடன் தொடர்ந்து ஒற்றுமையைக் காட்டும் என்று கூறியுள்ளார், ஆனால் மெக்சிகோ எந்த வகையான ஆதரவை வழங்கும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
கியூபா மீதான பொருளாதாரத் தடை:
பனிப்போர் காலத்தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிக்குப் பிறகு அமெரிக்காவுடனான உறவு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் பராக் ஒபாமா காலத்தில் உறவைச் சீராக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கியூபா மீது மீண்டும் கடுமையான தடைகளை மீண்டும் விதித்தார்.
2020 முதல் கியூபா கடும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. வரலாற்று ரீதியாகவே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே சுமுகமான உறவு ஒருபோதும் இருந்ததில்லை. இன்று கியூபா தனது பொருளாதார எண்ணெய் தேவைக்காக வெனிசுலாவைச் சார்ந்துள்ளது. மேலும் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இன்றைய நிலையில் வெனிசுலாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபா ரஷ்யாவுடம் மீண்டும் உதவியை நாடியுள்ளது.
இரண்டாவது பதவிக்காலத்திலும் டிரம்ப் கியூபா மீது கடும் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து வருகிறார். மேலும் குறிப்பாக கியூபாவின் பொருளாதாரத் தூணான சுற்றுலாத் துறையை அவர் குறிவைத்துள்ளார்.
வெனிசுலாவில் மதுரோவின் கைதால் கியூபா பொருளாதாரம் மேலும் சிதையும் என்றும், அது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவை தொடர்ந்து கியூபா ?
ஜனவரி ஆரம்பத்தில் வெனிசுலாவில் தாக்குதலை நடத்திய அமெரிக்கா அந்நாட்டின் அதிபரை நாடு கடத்தியமை, உலக அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இத்தோடு அமெரிக்கா தனது நடவடிக்கைகளை நிறுத்தாது என்றே தெரிகிறது. டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் அமெரிக்காவின் அடுத்த இலக்கு குறித்துக் கூறியுள்ள கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
வெனிசுலாவில் அமெரிக்கா ஒபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் என்ற ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு, நியூயார்க்கில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இந்நிலையில் கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்தது கொலம்பியாவா? கியூபாவா?
கொலம்பியா அதிபர் கோகோயின் தயாரித்து அமெரிக்காவிற்கு அனுப்புகிறார். அதனால் அவர் கவனமாக இருக்க வேண்டும் என்று நேரடியாக எச்சரித்தார். இதற்குப் பதிலளித்த பெட்ரோ, தனது நெருங்கிய நண்பரான மதுரோவை நேரடியாகக் குறிப்பிடாமல், அமெரிக்காவின் நடவடிக்கைகளை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான தாக்குதல் என விமர்சித்தார். இவை மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொலம்பியாவில் பல்வேறு போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகங்கள் இயங்கி வருவதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் டிரம்ப், தேவை என்றால் அந்த ஆய்வகங்கள் மீதும் கூட தாக்குதல் நடத்த உத்தரவிடுவேன் என டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதை மிகக் கடுமையாகச் சாடிய அதிபர் பெட்ரோஸ இதனை ஒரு படையெடுப்பு அச்சுறுத்தல் எனக் கடுமையாகக் கண்டித்திருந்தார்.
அமெரிக்காவின் அண்டை நாடுகளுடன் அமைதி நிலைத்தன்மையுடன், நல்ல நிலையில் இருக்க விரும்புகிறோம். வெனிசுலாவை பொறுத்தவரை அங்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. அதனைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். அங்குத் துணை அதிபராக இருக்கும் டெல்சி ரோட்ரிகஸ் வெனிசுலாவை மீண்டும் மகத்தானதாக மாற்றுவார் என நம்புகிறோம். அங்கு எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மரியா கொரினா மச்சாடோவுக்கு போதிய ஆதரவு இருப்பது போலத் தெரியவில்லை. அவர் வெனிசுலா தலைவராக வருவது மிகவும் கடினமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலா சென்று, பில்லியன் டாலர்களை செலவழித்து, சேதமடைந்த எண்ணெய் உள்கட்டமைப்பைச் சரிசெய்யும். இதன் மூலம் அமெரிக்காவுக்கான வருவாய் கிடைக்கும். அமெரிக்கக் கோரிக்கைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும் வரை, அனைத்து உதவிகளையும் செய்ய முடியும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கியூபா மீது அமெரிக்க அச்சுறுத்தல்:
வெனிசுலாவுக்கு பிறகு அடுத்து டிரம்ப் நிர்வாகம் கியூபா பக்கம் தனது கவனத்தைத் திருப்பும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “நான் கியூபா அதிபராக இருந்திருந்தால் நிச்சயம் அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பார்த்துப் பயந்து போய் இருப்பேன்” என்று மறைமுகமாக அமெரிக்காவின் அடுத்த இலக்காக கியூபா இருக்கலாம் என்பதைத் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் இணைந்து ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள், அல்லது வெனிசுலாவைப் போன்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என டிரம்ப் கியூபாவிடம் மிரட்டல் விடுத்துள்ளார். கியூபாவின் வீழ்ச்சி உறுதி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து, கரீபிய நாடுகளில் பதட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
தற்போது டிரம்ப் அமெரிக்காவின் எண்பது ஆண்டுகால பகையினை தீர்க்க முயற்சிக்கிறார். கியூபாவில் அமெரிக்க ஆதரவு ஆட்சி எனும் பெரும் கனவுடன் களமிறங்குகின்றார். கென்னடியால், ரீகனால் சாதிக்க முடியாததை நான் சாதித்து அமெரிக்காவின் களங்கம் துடைப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கவுக்கு அருகில் இருக்கும் கியூபா, நீண்ட காலமாக அமெரிக்காவின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது. கியூபா கம்யூனிஸ்ட் அரசு எண்பது ஆண்டு காலத்துக்கு மேல் அமெரிக்காவுடன் மோதி வருகிறது. பல காரணங்களுக்காக அதனை அமெரிக்காவினால் தொட முடியவில்லை. ஆனால் அமெரிக்காவால் பல தசாப்தங்களாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக, கியூபாவின் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *