மனத்தில் வெளிச்சம் தோன்றிவிடும்!…. கவிதை… ஜெயராமசர்மா

கண்ணால் காண்பது மெய்யல்ல
காதால் கேட்பது மெய்யல்ல
மண்ணில் உள்ள பலபேரும்
உண்மை உணரா உலவுகிறார்
விதண்டா வாதம் மேலோங்கி
மேதினி எங்கும் இருக்கிறது
உதவும் வகையில் நடிக்கின்றார்
உண்மை ஊமை ஆகிறது
கேடு என்று தெரிந்தாலும்
தேடும் அனைத்தும் தேடுகிறார்
ஆடை உடுத்தித் திருகின்றார்
அவரும் மனிதராய் உலவுகிறார்

மானம் மனதில் அவர்க்கில்லை
ஈனம் என்பதை ஏற்காதார்
ஊனம் அவர்க்கொரு தடையல்ல
உள்ளம் தொலைத்து உலவுகிறார்
ஈவு இரக்கம் பாராமல்
இரத்தம் கண்ணீர் எண்ணாமல்
பாவம் என்பதை உணராமல்
பாரில் திரிகிறார் பலபேர்கள்
நீதி நேர்மை தெரியாது
நெஞ்சில் பசுமை நிறையாது
ஊசி போல குத்துவதே
உவப்பாய் எண்ணி உலவுகிறார்
ஆணவம் தலையில் ஏறியதால்
ஆராயும் நிலையில் அவரில்லை
ஆற்றும் அனைத்தும் சரியெனவே
ஆற்றி அவரும் திரிகின்றார்
விடிவு நிச்சயம் வந்துவிடும்
தெளிவு அப்போ பிறந்துவிடும்
மாறா மனங்கள் மாறிவிடும்
மனத்தில் வெளிச்சம் தோன்றிவிடும்
எல்லாந் தெரியும் என்பதுமே
இல்லா நிலையாய் ஆகிவிடும்
எல்லா மாகி இருப்பதுவே
இறையே என்பதை உணர்ந்திடுவோம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
