இலங்கை

திருமலை மக்கெய்சர் மைதானத்தில் பௌத்த மதகுருவின் இறுதிக் கிரியை; தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு 

பௌத்த மதகுரு ஒருவரின் இறுதிக் கிரியையை திருகோணமலை மக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் 31ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

திருகோணமலை கோகண்ண ரஜமஹா விகாரையின் தலைமை பிக்குவாக பணியாற்றிய வண. பூஜ்யபாத புத்தே தம்மாலங்கார நாயக்க தேரர் தனது 91ஆவது வயதில் வியாழக்கிழமை அதிகாலை காலமாகியிருந்தார். அவரின் இறுதிக்கிரியைகளை சனிக்கிழமை திருகோணமலை மக்கெய்சர் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான இடத்தினை வியாழக்கிழமை பௌத்த பிக்குகள், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, அரசாங்க அதிபர் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும், திணைக்களங்களும் பார்வையிட்டிருந்ததோடு இந்த தேரரின் உடலை மட்டும்தான் இங்கு இறுதியாக எரிப்போம்,இதற்கு பின்னர் இங்கு எரிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இளைஞர் ,யுவதிகள் விளையாடுகின்ற இந்த மைதானத்தில் இறந்த உடல்களை எரித்து மைதானத்தை மயானமாக்க வேண்டாமென பலர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்த மைதானப் பகுதியில் சில ஆண்டு கால இடைவெளியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ச்சியாக பௌத்த பிக்குகளின் உடல்கள் எரிக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் 2021ஆம் ஆண்டு ஸ்ரீ ஜயசுமனாராம விகாரையின் விகாராதிபதியும், 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி அதிபூஜ்ய தெய்யன்னேவெல பஞ்சசீல தேரர் ஆகியோரின் உடல்கள் தமிழ் மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் மைதானத்தில் வைத்து எரியூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *