யாழ்.விமான நிலையத்தைச் சூழ பட்டங்கள் பறக்க விடத் தடை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.
வானத்தில் பட்டங்களைப் பறக்க விடுவதனால் விமானங்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவுறுத்தல் சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறை, மாவிட்டபுரம், வறுத்தலைவிளான், பலாலி, மயிலிட்டி, தையிட்டி உள்ளிட்ட ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வாரம் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை பட்டத்தினால் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அதனால், பாரிய விபத்து ஏற்படவிருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
![]()