முச்சந்தி

அமெரிக்காவின் பொருளாதார ஆக்கிரமிப்பும்!… மாற்றமுறும் புதிய உலக ஒழுங்கும்!!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பனிப்போர் பின்னர் புதிய உலக ஒழுங்கு, முறையற்ற நோக்கில் பொருளாதார நலன் நோக்கிய ஆக்கிரமிப்பாக மாறி வருகிறது. அமெரிக்க மேலாதிக்க எண்ணமே சோவியத் யூனியனின் பொருளாதாரத்தைச் சிதைத்து அதை உடைத்ததுகும் காரணமாகும்)
 
பனிப் போர் காலத்தின் பின்னர், உலகம் ஒரு புதிய ஒழுங்கிற்கு தயாராகி வருகிறது. இவ்வருட தொடக்கத்தில் வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அடாவடியான தாக்குதலும்,
வெனிசுவேலா தலைநகரில் குண்டு மழை பொழிந்து, அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை, அவரின் துணைவியாருடன் கடத்திச் சென்றுள்ளது அமெரிக்கா.
அமெரிக்க போலி வார்த்தை:
வளங்கள் பல நிறைந்த கிரின்லாந்தை கைப்பற்ற முயல்வது என்பதும் பொருளாதார நலன் சார்ந்தது என்பதே உண்மையாகும். ஐரோப்பிய நாடுகளுடன் பகைத்து, கிரீன்லாந்து மீதான டிரம்பின் ஆதிக்கம் என்பது, வெறுமனே பாதுகாப்பு காரணங்களுக்கானது அல்ல. உலகத்தின் மொத்த இயற்கை வளங்களையும் அமெரிக்க தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இதனாலேயே மீண்டும், மீண்டும் ஜனநாயகத்திற்காக, மக்களின் சுதந்திரத்திற்காக என அமெரிக்க போலி வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறது.
அது மாத்திரமன்றி, ஈரான் மக்கள் மீது அக்கறை கொள்ளுவதாக கூறும் அமெரிக்கா, அருகில் உள்ள குர்திஷ் மக்களுக்காக வருத்தம் கொண்டது இல்லை. லிபியா விடுதலைக்காக அக்கறை காட்டியதாக கூறும் அமெரிக்கா, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒருபோதும் குரல் கொடுத்தது இல்லை.
1990களில் சீனா பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணித்தது. நீண்ட காலமாக சீனா உற்பத்தியில், தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கு சவால் விடுகிறது. சீனாவை சீண்டும் வண்ணம் அமெரிக்க தனது கடற்படையை தென்சீனக் கடலில் நிறுத்தி வைத்துள்ளது. இதன் விளைவே சீன தைவான் முரண்பாடுகளின் உச்சமாகும். ஆகையினால் சீனாவுக்கு தைவானை கைப்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்ற நிலைப்பாட்டை எப்படி மறுதலிப்பது?
உக்ரைன் ரஷ்யாவிற்கே என்று புட்டின் கூறினால் அதனை ஏற்க மறுப்பதன் அர்த்தம் என்ன? ஏனெனில் வெனிசுவேலா விவகாரத்தில் அமைதி காக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இரட்டை நிலைப்பாட்டை பேணுவது வெளிப்படையாக தெரிகிறது. அவர்களால் மற்றய நாடுகளின் இறையாண்மை பற்றி எப்படி பேச இயலும்?
சோவியத் பொருளாதார சிதைவு:
பனிப் போர் தீவிரமான காலத்தில், மத்திய கிழக்கில் சவூதி அரேபியாவின் மன்னரை அமெரிக்க தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உண்மையில் அடிமையாக்கி, கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வைத்தது. அதன் மூலம் சோவியத் யூனியனின் பொருளாதாரத்தைச் சிதைத்து அதை உடைத்ததும் அமெரிக்க மேலாதிக்க எண்ணமே காரணமாகும்.
ரஷ்யாவுக்குப் பெரும் அச்சுறுத்தலாக, ராணுவ அமைப்பான நேட்டோவில் ரஷ்யாவின் அயல் நாடான உக்ரைனை, முன்னைய ஒப்பந்தத்துக்கு எதிராக அமெரிக்கா இணைக்க முயல, வேறு வழியே இல்லாமல், உக்ரைன் மீது தாக்குதலைத் தொடுக்க வேண்டிய நிலை ரஷ்யாவிற்கு ஏற்பட்டது.
தற்போது சோவியத் கனவுகளை கடந்து புதிய ரஷ்ய பேரரசு கனவில் புட்டின் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் முன்னாள் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசேன் அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்க மறுத்ததால், டாலரில் எண்ணெய் விற்காமல் இருந்ததால், அவர் அதிபயங்கர மனித குலத்திற்கு எதிரான ஆயுதம் வைத்திருக்கிறார் என பொய்யை கூறி, அவரின் ஈராக் நாட்டைச் சிதைத்து, பேரழிவை ஏற்படுத்தி, இறுதியில் சதாம் ஹுசைனைத் தூக்கில் போட்டது அமெரிக்கா.
ஈராக் போர்க் காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் மத அடிப்படைவாத இயக்கத்தை வளர்த்து எகிப்து, சிரியா, ஈராக் எனப் பல நாடுகளைச் சர்வ நாசமாக்கியது அமெரிக்கா. உண்மையில் இஸ்ரேலுக்குச் சாதகமாக அப்பகுதிகளை மாற்றியது இதன் முக்கிய நோக்கம் ஆகும். லிபியாவை மிகப்பெரும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போன கடாபியைத் தன் பேச்சைக் கேட்கவில்லை என அழித்ததும் அமெரிக்கா தான்.
ஆசிய ஆக்கிரமிப்பு எண்ணம்:
தென் ஆசியாவில் ஆக்கிரமிக்கப்பட்ட வியட்நாமில் இலட்சக்கணக்கான பொது மக்களைக் கொன்ற நாடு அமெரிக்கா. வியட்நாம் மீது வார்த்தைகளில் விளக்க இயலாத கொடூரங்களை இழைத்தது அமெரிக்கா. அதற்கும் காரணம் ஆக்கிரமிப்பு எண்ணமே காரணம்.
1980களின் தொடக்கத்தில் ஆப்கான் போரில் ரஷ்யாவுக்கு எதிராகத் தாங்கள் தாலிபான் அமைப்பை தீவிரமாக வளர்த்ததும் அமெரிக்க அரசு தான். ஆனால் தங்களுக்கு எதிராகவே அவர்கள் திரும்பியதால் 2001இல் போர் தொடுத்து ஆப்கானிய பொருளாதாரத்தைச் சிதைத்தது அமெரிக்கா.
தென் ஆசியாவில் இந்திய அரசின் கட்டுப்பாட்டை சீர்குலைக்க, பங்களாதேஷில் கிளர்ச்சியைத் தூண்டி, தன்னுடைய பொம்மையான முஹம்மது யூனிஸை அங்கு நியமித்து, இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளை வளர்த்து வருகிறது அமெரிக்கா என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தற்போது பாரியளவில் இந்தியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வந்தது அமெரிக்கா.
அதனைப் போலவே பாகிஸ்தான் ராணுவத்தை ஆதரித்துக் கொண்டு, தன்னுடைய கட்டுப்பாட்டில் அணு ஆயுதங்களை இந்தியா, சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாக்கிஸ்தானில் வைத்துக் கொண்டுள்ளது அமெரிக்கா.
இப்படி இன்னும் பல அமெரிக்காவின் அராஜகத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். உண்மையில் அமெரிக்கா ஆளுமையுடன் இருக்கும் வரையில் உலகில் அமைதி என்பதே இல்லை. வரலாற்றில் முதல் முறையாக அணுகுண்டை வீசி அப்பாவி பொது மக்களைக் கொன்ற ஒரே நாடு அமெரிக்கா. 1945இல் அணுகுண்டை வீசி ஜப்பானை வீழ்த்திய போல, தற்போது பொருளாதார ரீதியாக பல நாடுகளை வீழ்த்த அமெரிக்க முயற்சி செய்து வருகிறது.
இருப்பினும் சர்வதேசம் தற்போது பன்முனையில் பிரிந்து நிற்கிறது. பல்முனை அதிகாரங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பனிப் போரின் பின்னர் உலகம் ஒரு புதிய ஒழுங்கிற்கு தயாராகி வருகிறது.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி சாத்தியமா?
இத்தகைய காரணங்களே உலக மக்கள் அமெரிக்காவை வெறுப்பதற்கான காரணமாகும். கடந்த பல தசாப்தங்களாக பல உலக நாடுகள் மீது காட்டிய அடாவடித்தனங்களும், அட்டூழியங்களுமே காரணமாகும். பல ஆண்டுகளாக உலகையே தனது ஒற்றை ஆதிக்கத்தால் ஆட்டிப்படைத்த அமெரிக்கப் பொருளாதாரம், பலரும் அறியாத வகையில் சரிந்து கொண்டிருக்கிறது. உலகில் தோன்றிய எந்தவொரு பெரிய சாம்ராஜ்யமும் அழியாமல் இருந்ததில்லை. இன்று நாம் காணும் உலக ஒழுங்கு (World order) மீண்டும் ஒரு பாரிய மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த 80 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த அமெரிக்கப் பொருளாதாரம் இன்று வீழ்ச்சியை நோக்கி நகர்வது வரலாற்று ரீதியாகத் தவிர்க்க முடியாத ஒன்றாகத் தெரிகிறது. அமெரிக்க டாலரின் பலமே எண்ணெய் வர்த்தகம் டாலரில் நடப்பது தான். தற்போது சவுதி அரேபியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் போன்ற நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்திருப்பது இந்த அடித்தளத்தைத் தகர்க்கிறது.
எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் டாலர் அல்லாத பிற நாணயங்களான யுவான், ரூபி அல்லது பிரிக்ஸ் புதிய நாணயத்தில் வர்த்தகம் செய்யப்படும்போது, டாலருக்கான தேவை சர்வதேச அளவில் சரிந்துவிடும்.
இன்று ஒரு நாடு அமெரிக்காவிற்குப் பிடிக்கவில்லை என்றால், அந்த நாட்டை SWIFT அமைப்பிலிருந்து நீக்கி டாலர் வர்த்தகத்தைத் தடுக்கிறது. ஆனால் BRICS நாடுகள் தங்களுக்கெனத் தனி பணப்பரிமாற்ற முறையை உருவாக்கும்போது, அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடை எனும் ஆயுதம் செயலிழந்துவிடும்.
பொருளாதாரப் பலம் குறைந்தால், உலகம் முழுவதும் உள்ள எழுநூறுக்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களைப் பராமரிக்க அமெரிக்காவால் முடியாது. இதுவே அமெரிக்காவின் சர்வதேச காவல்காரன் என்ற பிம்பத்தை விரைவில் கலைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *