அரசின் வீழ்ச்சி வருட இறுதியில் ஆரம்பிக்கும்; அப்போது மீண்டும் ரணில் வருவார்- ஹரின் தெரிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சி-ஐக்கிய மக்கள் சக்தி இணைவது 99.9 வீதம் தீர்மானமாகியுள்ளதால் விரைவில் இணைவோம்.இரு கட்சிகளின் செயற்குழுவும் விரைவில் சிறிகொத்தவில் ஒன்றுகூடவுள்ளன .செயற்பாட்டு அரசியலில் தான் இல்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். அதனால் அவர் கட்சியின் ஆலாேசகராக இருந்து கட்சியை சரியான வழிக்கு கொண்டுவருவார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பிலேயே இவ்வாறு தெரிவித்த.அவர் மேலும் கூறுகையில்,
இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் முதற்கட்டமாக இரண்டு கட்சிகளின் செயற்குழுக்கள் ஒன்றாக இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கூடுவதற்கு எதிர்பார்க்கிறோம். அதற்காக தாய் வீட்டுக்கு அவர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுவதே எமது நோக்கம். இவ்வாறு இணைந்து செயற்படும் நடவடிக்கை நூற்றுக்கு 99.9வீதம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மிகவிரைவில் இது இடம்பெறும் .
இணைந்து செயற்படுவதற்காக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மிகவும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.அதனால் கட்சிக்கு சிறந்த எதிர்காலம் ஏற்படும்.அதேநேரம் தலைமைத்துவம் தொடர்பில் தலைவர்கள் இரண்டு பேரும் கலந்துரையாடுவார்கள்.தான் செயற்பாட்டு அரசியலில் இல்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கிறார். அவர் கட்சியின் ஆலாேசகராக இருந்து கட்சியை சரியான வழிக்கு கொண்டுவர செயற்படுவார்.
இதன்போது தலைமைத்துவத்தை ஒருவர் பெற்றுக்கொள்வார். எதிர்க்கட்சித் தலைவர் பாரிய செயற்பாடொன்றை மேற்கொள்வார். அதேபோன்று தலைமைத்து சபை ஒன்று அமையும் என நினைக்கிறேன். இந்த விடயங்கள் அனைத்தும் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். தற்போது முக்கியமாக இருப்பது இணைந்து செயற்பட வேண்டும் என்பதாகும். நிபந்தனையின்றி இரண்டு கட்சிகளும் இணைவது நிச்சயம்.
நாங்கள் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தால் அரசாங்கம் எங்களுக்கு சவாலாகப்போவதில்லை. என்றாலும் நாங்கள் இணைந்து செயற்படுவதுதான் சவாலான விடயம். நாட்டின் தற்போதைய நிலைமையில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு .
அரசாங்கத்தின் இயலாமை இந்த வருட இறுதியாகும்போது மக்களுக்கு வெளிப்படும். அதனுடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும். அதனால் நாங்கள் அதற்காக தற்போது தயாராகி வருகிறோம். நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. டொலரின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் மாதமாகும்போதும் இன்னும் நெருக்கடி நிலை ஏற்படும். அவ்வாறான நிலை ஏற்படும்போது மீண்டும் ரணில் விக்ரமசிங்க வரவேண்டிய நிலை ஏற்படலாம் என்கிறார்.
![]()