கவிதைகள்
வீழும் நாளில் வீடெதற்கு குதம்பாய்!…. கவிதை… சங்கர சுப்பிரமணியன்

எதுவுமே நிலையற்ற இம்மண்ணிலே
எது நிலையென சொல்லடிகுதம்பாய்
மண்ணில் நிலையிலை என்கிறபோது
விண்ணில் வீடு நிலையோ குதம்பாய்
பாலூற்றுவதை ஒருநொடி எண்ணினால்
பாலாபிசேகம் காண நாட்டமும் வருமோ
தேரேறி பயணிக்கும் நாளை நினைத்தால்
தேரோட்டம் காணவும் மனம்விரும்பிடுமா
பிறப்பவரெலாம் ஒருநாள் இறந்துபோவர்
இறவாது போனால் மண்ணில் இடமிராது
வீடுபேறென்று விண் போய்ச்சேரந்தாலும்
காடு அடைவோர்க்கு ஒருநாள் இடமிராது
வாழும் நாளில் நாம் காணாத இன்பமதை
வாழ்வு முடியவும் தேடுவதெங்கே குதம்பாய்
இன்பமெங்கே இன்பமெங்கே என்று தேடு
என்று பாடியதும் இருக்கும்போது சுகிக்க
இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்காதே
என்றோ ஒருவர் கூறியதை உணர்ந்தால்
வாழும் வாழ்வே மண்ணில் வீடுபேறன்றோ
வீழும் நாளில் வீடுபேறுண்டோ குதம்பாய்!
![]()