முச்சந்தி

பின்தள்ளப்பட்ட உக்ரைன் அமைதி திட்டம்: ஈரான், வெனிசுலா, கிரீன்லாந் நெருக்கடி காரணமா ?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மாஸ்கோவை நோக்கி ஐரோப்பா போரை தொடுத்தால் ரஷ்யா தயார் என புட்டின் தெரிவித்துள்ளார். அதேவேளை உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து, டிரம்ப்பின் தூதர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். உக்ரைன் அமைதித் திட்டத்தை இறுதி செய்வதற்கான அமெரிக்கா தலைமையிலான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றனர் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது)

கடந்த நான்கு ஆண்டுகளாக உலகச் செய்திகளில், உக்ரைன் போர்ச் செய்திகளே முதன்மை பெற்றிருந்தன. ஆனால் கடந்த சில வாரங்களாக உலகின் பார்வை உக்ரைனில் இருந்து ஈரானில் ஆட்சி மாற்றம் பற்றியும், வெனிசுலாவில் பொம்மை அரசை நிறுவ அமெரிக்க முயல்வது குறித்தும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுமா என்ற சந்தேகம் பற்றிய தகவல்களே தற்போது அதிகம் வெளியாகியுள்ளன.

இதனாலேயே ஈரான், வெனிசுவேலா விவகாரங்களால் உக்ரைன் மீதான அவதானம் குறைந்துள்ளதை காணலாம். அதேவேளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ரஷ்யா மதிக்கப்பட்டு, சமமாக ஒருவருக்கொருவர், சரியான மரியாதையுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை மரியாதையுடன் நடத்தினால் வருங்காலங்களில் ரஷ்யா யுத்தம் நோக்கி நகராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா உண்மையிலேயே ஐரோப்பாவைத் தாக்கப் போகிறதா? இது முட்டாள்தனமான ஊகம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். மேற்குலக நாடுகள் ஒரு எதிரியின் பிம்பத்தை உருவாக்கி ரஷ்யாவை எதிரியாக்குகிறார்கள். ரஷ்ய அதிபரின் வருடாந்த செய்தியாளர் சந்திப்பில், பிபிசியின் மாஸ்கோ ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க்கிடம் விளாடிமிர் புட்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கும் அதன் மக்களுக்கும் நீங்கள் என்ன எதிர்காலத்தைத் திட்டமிடுகிறீர்கள்? புதிய சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் இருக்குமா ?என கேள்வி எழுப்பினார். அதற்கு புட்டின் ஒரு நீண்ட பதிலுடன், ரஷ்யாவின் வரலாற்று அரசியல் அமைப்பைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார்.

ரஷ்யத் தலைவர் மேலும் கூறுகையில், மேற்கத்திய தலைவர்களை மோசமான தந்திரங்கள் மிக்கவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் நேட்டோ உறுப்பு நாடுகள் ரஷ்யாவுடன் மோதலுக்குத் தயாராகி வருவதாக அறிக்கைகள் மூலம் இதைத் தொடர்கின்றன என்றும் புட்டின் தெரிவித்துள்ளார். அத்துடன் போலி செய்தி என்ற பிரச்சினையை சுட்டிக்காட்டி, பிபிசிக்கு எதிரான டொனால்ட் டிரம்பின் வழக்கைக் குறிப்பிட்டார்.

நேட்டோ கிழக்கு நோக்கிய விரிவாக்கம்:

நேட்டோவின் கிழக்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கத்தின் மூலம் ரஷ்யாவை முன்பு ஏமாற்றியது போல், தற்போது எங்களை ஏமாற்ற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவை மரியாதையுடன் நடத்தினால் உக்ரைனுக்குப் பிறகு இனி போர்கள் இருக்காது என்றும், ஐரோப்பிய நாடுகளைத் தாக்க மாஸ்கோ திட்டமிட்டுள்ளதாகக் கூறுவது முட்டாள்தனம் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் நீடித்த தொலைக்காட்சி நேரலை நிகழ்வில், பிபிசியின் ஸ்டீவ் ரோசன்பெர்க், புதிய சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் இருக்குமா என்று அவரிடம் கேட்டார்.

நீங்கள் எங்களை மரியாதையுடன் நடத்தினால் எந்த நடவடிக்கைகளும் இருக்காது, நாங்கள் எப்போதும் உங்கள் நலன்களை மதிக்க முயற்சித்ததைப் போலவே எங்கள் நலன்களையும் நீங்கள் மதித்து நடந்தால், பிரச்சனை இல்லை என்று தெரிவித்தார்.

ஐரோப்பா போருக்கு விரும்புகிறதா ?

ரஷ்யா ஒருபோதும் ஐரோப்பிய நாடுகளுடன் போருக்குச் செல்லத் திட்டமிடவில்லை. ஆனால் ஐரோப்பா விரும்பினால் இப்போதே ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் கூறினார். இந்த சமீபத்திய கருத்துடன் அவரது முன்னைய கருத்துக்கள் ஒத்துப்போகின்றன.

1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு முன்னர் அப்போதைய சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவுக்கு மேற்கத்திய நாடுகள் அளித்ததாகக் கூறப்படும் வாக்குறுதியை நேட்டோ மீறியுள்ளதாக புட்டின் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகிறார்.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தின் மூலம் ரஷ்யாவை ஏமாற்றியது. இந்த மாநாட்டில் ரஷ்யா முழுவதிலுமிருந்து பத்திரிகையாளர்களிடமிருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இந்த ஊடக மாநாட்டில் கிரிமியா உட்பட உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய ரஷ்யாவின் ஒரு பெரிய வரைபடத்தின் முன் புட்டின் அமர்ந்திருந்தார். இந்த மாநாட்டில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டதாக ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறியது.

ஐரோப்பா எங்களுடன் சண்டையிட விரும்பினால், நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம் என்று புட்டின் கூறினார். ஐரோப்பாவுடன் போருக்குச் செல்ல ரஷ்யா ஒருபோதும் இல்லை என்று புட்டின் தெரிவித்தார். நாங்கள் ஐரோப்பாவுடன் சண்டையிடப் போவதில்லை. இதை நான் நூறு முறை கூறியுள்ளேன். ஆனால் ஐரோப்பா ஒரு போரை விரும்பி அதைத் தொடங்கினால், நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் அமைதித் திட்டம்:

உக்ரைன் அமைதித் திட்டம் குறித்த ரஷ்யா-அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை. ஆனால் பிரதேச சமரசம் இன்னும் எட்டப்படவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவை. ஆனால் இன்னும் செய்ய வேண்டியவை அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ், உக்ரைனால் பிராந்திய சலுகைகள் தொடர்பாக எந்த சமரசமும் எட்டப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை ஐரோப்பாவின் சமாதான ஒப்பந்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என்று புட்டின் முன்னதாக கூறினார்.

இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமைதித் திட்டத்தில் சில விஷயங்கள் இன்னும் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் இப்போது எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

உக்ரைன் அமைதித் திட்டம்:

கடந்த ஆண்டு இறுதியில் டிரம்ப் அரசால் முன்மொழியப்பட்ட அமைதித் திட்டம் போரை நிறுத்துவதுடன், உக்ரைன் அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறும். மேலும் உக்ரைன் அல்லது அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக இனி ரஷ்யா எந்த ஆக்கிரமிப்பையும் எடுக்காது. மேலும் ஐரோப்பாவை நோக்கி ஆக்கிரமிப்பு இல்லாத கொள்கையை மாஸ்கோ அதன் அரசியல் சட்டத்தில் இணைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இரு தரப்பிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகள் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள். போரிடும் இரு தரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும். அத்துடன் கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல டினிப்ரோ நதியைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் முயற்சிகளை மாஸ்கோ நிறுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சர்ச்சைக்குரிய பிராந்தியங்களான ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா, லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகள், வளமான டான்பாஸை உருவாக்கும் கெர்சன் மற்றும் சபோரிஷியா உள்ளிட்ட கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்க இந்த அமைதி திட்டம் முன்மொழிந்தது.

இந்த திட்டம் மூலம் உக்ரைனை 600,000 க்கும் உற்பட்ட இராணுவ வீரர்களுக்கு மட்டுப்படுத்தியது. மேலும் கீவ் அரசு அதன் அரசியலமைப்பில் நேட்டோவில் சேராது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரியது.

இருப்பினும் ரஷ்யா கைப்பற்றிய பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. கனிம வளம் மிக்க டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் சபோரிஷியா மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

என்னவாயினும் புட்டின் போரின் மூலம் அதிகபட்ச இலக்குகளை நோக்கி அடைந்து வருகிறார். அத்துடன் 2022 முதல் தனது கோரிக்கைகளில் உறுதியாக உள்ளார். கைப்பற்றிய ஐந்து பிரதேசங்களையும் முழுமையாக உரிமை கோரியும் உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *