பலதும் பத்தும்

யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்; ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்

யாழ்ப்பாண வணிக மற்றும் கைத்தொழில் மன்றம் மற்றும் லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வடக்கு மாகாணத்தின் வர்த்தகப் பெருவிழாவான 16 ஆவது யாழ்ப்பாணச் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி- 2026 யாழில் ஆரம்பமாகியது.

இதன் தொடக்க விழா வெள்ளிக்கிழமை (23) காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவைத் தொடர்ந்து விருந்தினர்கள் மங்கள வாத்தியங்களுடன் யாழ்.முற்றவெளி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நாடா வெட்டி கண்காட்சிக் கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் விருந்தினர்கள் கண்காட்சிக் கூடங்களைப் பார்வையிட்டனர்.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் ஏ.எப்.எம். பாரூக், யாழ்ப்பாண வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கே.விக்னேஷ், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் இமால்கா முல்லேகம, வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அனுசரணை நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை ஆரம்பமான யாழ்ப்பாணச் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு காலை 10 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

இம் முறை கண்காட்சியில் 400 இற்கு மேற்பட்ட கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button