இலக்கியச்சோலை

பொங்கலும் உயிரியல் துறையும்…. இலக்கிய உரை….  அண்டனூர் சுரா

அனைவருக்கும் வணக்கம்,

அனைவருக்கும் வணக்கம் என்று சொல்வதைக் காட்டிலும் அனைத்து மாணவ ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து வைக்கும் சமத்துவப் பொங்கல் நாளில் எல்லாருக்கும் வணக்கம் என்று சொல்வதே சரியாகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

முன்னதாக எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள், பொங்கல் நல்வாழ்த்துகள், உழவர் பெருநாள் வாழ்த்துகள், அய்யன் திருவள்ளுவர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன தலைப்பில் பேசுவதென்று தெரியவில்லை. இளங்கலை கல்வியியல் பயிலும் மாணவத் தம்பி மனோஜ்கிரன் அவர்கள் எங்கள் கலலூரியில் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாவுக்கு வருகைதந்து சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

என்னை எந்த வகையில் அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். இந்தியத் தமிழ் எழுத்தாளராக அழைக்கிறோம் என்றார். இப்படியான இந்த அழைப்பு என்னை பெரிதும் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

என்னைப் சில அமைப்புகள் கல்லூரிகள் புதுக்கோட்டை எழுத்தாளராக, அறிமுக எழுத்தாளராக, புனைவு எழுத்தாளராக அழைத்திருக்கிறார்கள். இந்தியத் தமிழ் எழுத்தாளராக அழைப்பது இதுவே முதன்முறை. அதற்காக நன்றி பாராட்டுகிறேன்.

Happy Pongal! பொங்கலோ பொங்கல்! – Sage of Kanchiஅழைப்பு விடுத்த தம்பியிடம் என்ன தலைப்பில் பேச வேண்டுமென கேட்டேன். தலைப்பு இல்லை என்றார். நான் நினைத்துக்கொண்டேன். தலைப் பூ என்பது பெண்களுக்கானது. அதற்கு கூந்தல் வேண்டும். குறைந்தப்பட்சம் முடிகளாவது வேண்டும். எனக்கு இரண்டுமே இல்லை என்பதால் தலைப்பு இல்லையோ என்று.

தலைப்பு இல்லாத உரை என்பதே ஒரு தலைப்புதான்.

தமிழ்ச் சொற்களில் மதிப்பிற்குரிய சொல் வணக்கம். சொல்லுக்கு நிறை உண்டு. எடை உண்டு. ஆகவே சொல் என்பது ஒரு வகையான பொருளாக விளங்குகிறது. சொல்லுக்குள் பொருள் பொதிந்தும் இருக்கிறது. ஆகவேதான் நன்னூலில் பவனந்தி முனிவர் “ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார்.

ஒவ்வொரு சொல்லும் இன்னொரு சொல்லுக்கு நிகர் இல்லை. நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலும் நீங்கள் கேட்கிற கேள்விக்கு நான் சொல்லும் பதிலும் சமமில்லை.
ஆனால் ஒரே ஒரு சொல் மட்டும் உங்களுக்கு நான் சொல்கிற பொழுதும் எனக்கு நீங்கள் சொல்கிற பொழுதும் சமமாகிறது. அந்தச் சொல் “வணக்கம்.”

சிலருக்கு வணக்கம் வைத்தால் ‘ம்’ என்பார்கள். இந்த ‘ம்’ நாம் உதிர்க்கும் சொற்களில் கஞ்சத்தனமானது. அது சொல் அல்ல, சப்தம். இந்த சொல் வணக்கத்திற்குப் பதிலாக பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். இந்த ‘ம்’ ஆல் நான் அவமானப்பட்டிருக்கிறேன். இதை மையமாக வைத்து ‘ம்’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளேன். முதல் பரிசு பெற்றது. எனக்கு ‘ம்’ சொன்னவரிடம் கொடுத்து வாசிக்க சொன்னேன். அவர் வணக்கம் என்றார். இந்த வணக்கம் என்கிற சொல் பொங்கலோடு தொடர்பு கொண்டது.

தமிழ்ச் சொற்களில் ஆழமான சொல்லொன்று இருக்கிறது. அது நன்றி. இச்சொல் மிகவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லும் பொங்கலுடன் தொடர்பு கொண்டது.

வணக்கம், நன்றி இவ்விரு சொற்கள் உயரத்திலிருந்தும் ஆழத்திலிருந்தும் எடுத்தாளப்படுகிறது. மிக உயரத்திலிருந்து எடுத்தாளப்படுவது வணக்கம்.

மிக ஆழத்திலிருந்து எடுத்தாளப்படுவது நன்றி.

வணக்கம் , நன்றி இவ்விரு சொற்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது பொங்கல் பண்டிகையின் போது மட்டும்தான்.

உயரமான சொல், ஆழமான சொல் போன்று தமிழில் மிகப் பெரிய சொல் இருக்கிறது. அது எல். எல்லா, எல்லாம், எல்லாருக்கும், எல்லோருக்கும் சொற்களின் வேர்ச்சொல் ‘எல்’

எல் என்றால் சூரியன். ‘எல்லினைக் கண்டு பாயும் இடபம் போல’ என்று பாரதி ஓரிடத்தில் பாடுகிறார். சூரியனைக் கண்டதும் உழைப்பதற்கு காளை எழுந்துவிடுகிறது என்பது இதன் பொருள்.

எல் என்கிற சொல் தமிழில் மட்டுமல்ல கிரேக்கத்திலும் இருக்கிறது. எல்ஸ் எனும் கிரேக்க கடவுளான சூரியனைக் குறிக்கிறது. இந்தச் சொல் ஆங்கிலத்திலும் இருக்கிறது. ஆல் என்கிற சொல் எல் என்பதிலிருந்து வந்ததே.

எல் என்கிற சூரியனிலிருந்தே இந்த உலகம் தோன்றிருக்கிறது. தொல்காப்பியம், நன்னூல்பொங்கல் பண்டிகை 2025: பொங்கல் பானையை எப்படி அலங்கரித்து பூஜை செய்ய  வேண்டும்? | Times Now Tamil பாடும் ஓரறிவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவு என்று எல்லா பரிணாம உயிர்களும் எல் என்கிற சூரியனின் பிக் பேங் எனும் பெருவெடிப்பிலிருந்து தோன்றியவை.

பொங்கல் எல் எனும் சூரியனுக்கு வைக்கப்படுகிறது. எல்லாருக்கும் வணக்கம் என்பது மனிதன் மனிதனுக்குச் சொல்லும் வணக்கமல்ல. மனிதன் சார்ந்து வாழும் அனைத்து உயிர்களுக்குமான
வணக்கம்.

நாம் இன்று கொண்டாடுகின்ற பொங்கல் விழா, இன்று நாம் வைத்திருக்கின்ற பொங்கல் எல்லா உயிரினங்களும் நலமுற்றிருக்க வேண்டியே வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வாரம் ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘ நானவனவள் ‘எனும் சிறுகதை வந்திருக்கிறது. இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், ஆனந்த விகடனின் தலை வாசகம் “எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே” எனும் தாயுமானவரின் உயரிய வரியைக் கொண்டு வெளிவருகிறது.

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் தமிழர் திருநாள் எனும் பொங்கல் விழா தமிழர் பெருநாள் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இந்த விழாவுக்கு என்னை அழைத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் முதலில் பொங்கல் வைத்துக்கொள்கிறேன்.

பொங்கல் வைத்தல் என்பது நன்றியின் வெளிப்பாடு. நமது கிராமத்தில் அம்மா, பாட்டிமார்கள் கோவிலில் பொங்கல் வைப்பதாக வேண்டிக்கொள்வார்கள். “மாரியாத்தா, எனது பிள்ளைக்கு நோவு போயி ஒடம்பு சரியாயிட்டா பொங்கல் வைக்கிறேன்” என்று.

பாஞ்சாலி சபதம் காப்பியத்தில் பாரதியார் இந்தப் பொருளில் ஓரிடத்தில் கையாள்கிறார். சகுனியைப் பார்த்து துரியோதனன் சொல்கிறான், “மாமனே, உனக்கு நான் பொங்கல் இடுவோம் ” என்று.

பொங்கல் பொங்குகையில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று நாம் சொல்வது ‘ நன்றியோ நன்றி ‘ என்று சொல்வதைப் போலாகும்.

அந்த வகையில் புதுக்கோட்டை கல்வியியல் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்!

பொங்கல் விழா என்றால் பால் பொங்குவது, அரிசி பொங்குவது என்பதாக மட்டும் பார்க்க வேண்டியது இல்லை. பொங்கல் என்பதற்கு வளர்தல், உயர்தல், எழுதல், பொலிதல், நிறைதல் என்று பல பொருள் இருக்கின்றன.

அரசு கல்வியியல் கல்லூரியில் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா கல்வியால் நாங்கள் எழுகிறோம், கல்வி ஒன்றே எங்களை உயர்த்துகிறது, கல்வி வாழ்வின் அடி ஆழத்தில் புதைந்து கிடப்பவர்களை மேலே வளர்த்தெடுக்கிறது, கல்வியால் அறிவு பொலிகிறது என்பதை உணர்ந்து இந்தப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதாக நான் கருதுகிறேன்.

பொங்கல் தீபாவளியைப் போன்று இன்னும் பிற விழாக்களைப் போன்று யாரின் வீழ்ச்சியை, யாரின் அழிவை, யாரின் தோல்வியைக் கொண்டாடும் விழா அல்ல. இது ஆக்க விழா. அறுவடை விழா. செழிப்பு விழா. பொலிவு விழா.

Pongal 2025 | பொங்கல் கொண்டாட்டமும் வழிபாட்டு முறைகளும்... | ஆன்மிகம் -  News18 தமிழ்

இந்தக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ,கணினியியல், உயிரியல், கணக்கியல், வணிகவியல், பொருளியல் என்று பல்துறையைச் சார்ந்தவர்கள் ஒரு குடையின் கீழ் இளங்கலை கல்வியியல் பிஎட், முதுகலை கல்வியியல் எம்.எட் படிக்கிறீர்கள். ஆகவே பல்துறை வல்லுநர் சேர்ந்து வைத்த பொங்கலாகவும் இதை நான் பார்க்கிறேன்.

இந்தக் கல்லூரிக்குள் நான் வருகின்ற பொழுது வாயில் தோரணங்களாக இருந்தது. கோலங்கள் வரவேற்றன. நன்கு அலங்கரிக்கப்பட்ட காளை தலையைச் சிலுப்பி என்னை வரவேற்றது. இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எனக்கு
மணிமேகலை காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் இந்திர விழாவுக்காக எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

“தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;
காய்க்குலை கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்”

இந்த மேகலை வரிகள் இந்த கல்லூரியின் பொங்கல் அலங்காரத்தை ஒத்திருக்கின்றன.

பொங்கல் தை மாதம் வருகிறது. தை என்றால் தழுவுதல் என்று பொருள். இதற்கு தைத்தல் என்றொரு பொருளும் இருக்கிறது.

தைத்தல் என்றால் மனதில் எழுதிக்கொள்ளல். இந்தக் கல்லூரி சமஸ்தானக் காலத்தில் கட்டப்பட்டது என்று மனதில் எழுதியிருந்தேன். காரணம் இக்கல்லூரி சமஸ்தானக் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டடத்திற்கும் மன்னர் கல்லூரிக்கும் இடையில் இருப்பதால் அப்படியாக நினைத்துவிட்டேன். இன்றுதான் தெரிந்துகொண்டேன். மாண்புமிகு பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்த கட்டடம் கட்டப்பட்டது என்று. தமிழ்நாட்டில் அரசு கல்வியியல் கல்லூரிகள் ஏழுதான் உள்ளன. இவற்றில் அழகான கட்டடமைப்பு கொண்ட கல்லூரி புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி. இந்தக் கல்லூரியில் பேசுகின்ற எனக்கே இவ்வளவு கர்வமும் பெருமையும் இருக்கிறதென்றால் இக்கல்லூரியில் படிக்கும் உங்களுக்கு எவ்வளவு பெருமை இருக்கும் என்பதை நான் அறிவேன்.

இந்தக் கல்லூரியில் பல்துறை மாணவர்கள் படிக்கிறீர்கள். தமிழ், ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், கணக்கு, தாவரவியல், விலங்கியல், கணினியியல் என்று. படிப்பில் பல துறைகள் இருப்பதைப் போல நாம் கொண்டாடும் விழாக்களிலும் பல துறைகள் இருக்கின்றன.

தீபாவளி என்பது வேதியியல் துறை. தீபாவளி அன்று வெடிக்கப்படுகின்ற பட்டாசுகள் பாஸ்பரஸ், கந்தகம், கார்பன், நைட்ரேட், சல்பேட் எனும் வேதிப்பொருட்களானவை. இன்று உலகத்தை மிரட்டிக்கொண்டிருப்பது வேதியியல் துறைதான். காற்றை நஞ்சாக்கும் துறை இது. அதே காற்றை சுத்திரிக்கும் துறையும் இதுதான்.

கார்த்திகை தீபம் என்பது இயற்பியல் துறை. தீபம் என்பது ஒளியைக் குறிக்கிறது. ஒளி என்பது ஒள்ளி என்கிற வேர்ச்சொல்லிருந்து பிறந்தது. ஒள்ளி என்கிற சொல்லிலிருந்துதான் வெள்ளி என்கிற சொல் பிறந்தது. வெள்ளி என்பதற்கு தூரத்து ஒளி என்று பொருள். குறைந்த ஒளி என்பது இரவு. மிகுந்த ஒளி என்பது பகல் என்கிறது இயற்பியல்.

கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம். அந்த விழா கணிதவியல் துறையோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். உலக வரலாறு கி.மு, கி.பி எனும் அளவுகளால் அளவிடப்பட்டிருக்கிறது. இன்று நாம் கொண்டாடுகின்ற ஆங்கிலப் புத்தாண்டு, இன்று நாம் பயன்படுத்துகின்ற ஆங்கில நாள்காட்டி, டைரி யாவும் கிறிஸ்து பிறப்பை அடிப்படையாகக் கொண்டது. ஜனவரி முதல் தேதியை ஆங்கிலப் புத்தாண்டாக முதலில் கொண்டாடியவர் ஜூலியஸ் சீசர்.

ரம்ஜான் பண்டிகை வானியல் துறையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. வானில் தோன்றும் பிறையும் பிறையின் மேலே தோன்றும் நட்சத்திரமும் இந்தப் பண்டிகையோடு தொடர்பு கொண்டது.

ஆயுத பூஜை என்பது இயந்திரத்துறை. சரஸ்வதி பூஜை என்பது கல்வித்துறை. இப்படியாக விழாக்களை நாம் துறை வகைப்படுத்தலாம்.
அந்த வகையில் பொங்கல் விழா என்பது மூன்று நாட்கள் கொண்டாடப்படும் விழா. மூன்று நாட்களில் முதல் நாள் பொங்கல் என்பது தாவிரவியல். நெல் விளைவித்து தரும் அரிசி, கரும்பு விளைவித்து தரும் சர்க்கரை, மஞ்சள் கொத்து, கண்ணுப்பீழை, ஆவாரம்பூ, இண்டங்காய், கிழங்கு வகைகள் இவற்றை அறுவடை செய்து வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பது போகம்.

இந்தப் போக விளைப்பொருட்களைக் கொண்டு விளைவித்து கொடுத்த சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். இதுவே சூரியப் பொங்கல் . இது உயிரியல் துறை. இந்தப் பொங்கல் மிகச் சிறிய உயிரியான எறும்பு முதல் மிகப் பெரிய உயிர்கள் வரை அனைத்து உயிரிகளுக்கும் உணவு வழங்கி இனிப்பு வழங்கி கொண்டாடுகிறோம்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். இது விலங்கியல். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மிருகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்.. சூரியனை வழிபட்டு பொங்கலோ பொங்கல்! பொங்கல்  வைக்க உகந்த நேரம் இதுதான்! | Tamils Worldwide Celebrate Pongal with  Traditional Fervor and ...மிருகம் என்பதும் விலங்கு என்பதும் ஒன்றல்ல. எல்லா விலங்குகளும் மிருகங்களே. ஆனால் எல்லா மிருகமும் விலங்கு அல்ல. விலங்கு என்பதற்கு பிணைப்பு என்று பொருள். மனிதனோடு பின்னிப் பிணைந்து வாழ்வது விலங்கு. ஆடு, பசு, காளை, பூனை, நாய், எருமை யாவும் விலங்குகள். இந்த விலங்குகள் யாவும் மாடுகள். மாடு என்றால் செல்வம் என்று பொருள். ஆகவேதானே வள்ளுவர் ஒரு குறளில் “மாடல்ல மற்றை யவை” என்கிறார். செல்வப் பண்டிகைதான் மாட்டுப்பொங்கலாகக் கொண்டாடப்படுகிறது.

மற்ற விழாக்கள் யாவும் உயிரற்ற பொருண்மையோடு கொண்டாடப்படுகிறது. உலக விழாக்களில் பொங்கல் பண்டிகை மட்டுமே உயிரியலோடு தொடர்பு கொண்டிருக்கிறது. பொங்கல் ஒரு விழாவாகவும் இருக்கிறது. உணவாகவும் இருக்கிறது.

இந்தக் கல்லூரியில் பல்துறையைச் சார்ந்தவர்களும் தமிழ், தமிழர் எனும் ஒற்றைக் குடையின்கீழ் பொங்கல் விழாவைக் கொண்டாடுகிறீர்கள். .

இந்த விழாவில் நாம் பெரிதும் வியந்து பார்ப்பது , பார்த்தது இந்த விழாவுக்கு என்னை அழைத்த முறையை.

நல்ல விருந்து என்பது பரிமாறுவதில் இருக்கிறது. நல்ல விழா என்பது விழாவிற்கு அழைப்பு விடுவதில் இருக்கிறது. பொதுவாக தூரத்து விருந்தினர்களை அழைப்பதற்கென்றே வாட்ச்அப் எனும் புலனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்வழியே அழைப்பிதழ் அனுப்புவார்கள். விழாவுக்கு வந்தால் வா, வராட்டிப் போ என்கிற பொருளில் புலனத்தில் அனுப்புவது வழக்கம். சிலர் அனுப்பிவிட்டு தொடர்புகொண்டு பேசுவார்கள். சிலர் அனுப்புவதோடு சரி.

ஆனால் இந்த விழாவுக்கு இரண்டு மாண்பமை மாணவத் தம்பிகள் எனது பள்ளிக்கு வருகை தந்து பழங்கள் வைத்து சந்தனம் குங்குமம் வைத்து கற்கண்டு வைத்து அழைப்பு விடுத்தார்கள். அவர் அழைப்பை எனது மாணவர்கள் பார்த்துகொண்டிருந்தார்கள். ஓர் அருமையான கற்றல் கற்பித்தல் அங்கு நிகழ்ந்தது. தம்பிகள் இருவரும் அவ்வளவு பணிவோடு நடந்துகொண்டார்கள்.

இந்தப் பணிவைப் பார்த்ததும் எனக்கு சீவகசிந்தாமணி, பெரியபுராணம் எனும் இவ்விரு காப்பியங்களில் ஒரு காட்சி நினைவுக்கு வந்தது.

பெரியபுராணத்தில் வயல்களில் நெற்கதிர்கள் முற்றித் தலை வணங்கி நிற்கும். இந்தக் காட்சியைப் பார்க்கிறார் சேக்கிழார்.

நெற்கதிர் தலை வணங்கி நிற்பது இரண்டு அடியார்கள் ஒருவரையொருவர் தலை வணங்கி பேசுவதைப் போன்றிருந்தது என்று எழுதுகிறார்.

சீவகசிந்தாமணியிலும் இப்படியான ஒரு காட்சி வருகிறது.

சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல், மெல்லவே கருவிருந்து ஈன்று மேல் அல்லார் செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே”

சீவக சிந்தாமணியின் 53 ஆவது பாடல் இது.

நெற்பயிர் முதலில் யாருக்கும் பணிந்து கொடுக்காது. ஆனால் நெல் முற்றியதன் பிறகு பணிந்துகொடுக்கும். கல்வியின் விளைச்சல் தரும் பாடம் இதுதான், கற்றவர் முன் பணிதல்.

இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு பணிவு இல்லையோ என்று நான் நினைத்து வந்தேன். இரு தம்பிகளைப் பார்த்ததும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

இங்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அன்பை வளர்த்தெடுக்க விளையாட்டுப் போட்டியைத் தவிர வேறொரு வினையாற்றுதல் இல்லை என்றே கருதுகிறேன். விருப்பமான ஆட்டம் என்பதுதானே விளையாட்டு. விளை என்றால் விளைதல், செழித்தல், பெருகுதல்.

விளையாட்டு இன்பத்தை பெருக்குகிறது என்பதாக நீண்ட காலம் நான் நினைத்துவந்தேன். இல்லை, எதிரிகளை, முரண்பட்டவர்களை ஒன்றிணைப்பது விளையாட்டு.

அதற்கொரு சம்பவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். நான் கல்லூரியில் படிக்கையில் இரண்டு தரப்பினர்களுக்கிடையில் முரணும் பூசலும் எழுந்து கோஷ்டிகளாக இயங்கினார்கள். இவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை.

எங்களது உடற்கல்வி பேராசிரியர் பேரா.பிரபாபதி அவர்கள் கல்லூரியில் கபடிப் போட்டி நடத்தினார். எதிரிகளாக விளங்கியவர்களை ஓர் அணிக்குள் வைத்து விளையாட வைத்தார். இவ்வளவு காலம் முரண்பட்டிருந்தவர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு விளையாடியதை கைக்கொட்டி பார்த்து ரசித்தோம்.

அதே விளையாட்டை எதிரிகளாக இருப்பவர்களை எதிரெதிர் அணியாக நிறுத்தி விளையாடவிட்டால் எப்படி இருக்குமென்று நினைத்துப் பாருங்கள். நம் கண் முன்னே இந்தியா – பாகிஸ்தான், இஸ்ரேல் – பாலஸ்தீனம், வடகொரியா – தென்கொரியா, அமெரிக்கா – ரஷ்யா, ரஷ்யா- உக்ரேன் நினைவுக்கு வரும்.

உங்கள் விளையாட்டு போட்டிகளை நேரில் பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கத்தோடு பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாணவ ஆசிரியராகிய நீங்கள் எதிர்காலத்தில் ஆசிரியராக விளங்கி மாணவர்களிடம் அறியாப் பருவத்தில் எழும் முரண்பாட்டை விளையாட்டுகள் மூலமாக அவர்களின் முரண்களை களைய வேண்டுகிறேன். மிக விரைவில் நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்ற உள்ளீர்கள். உங்கள் கவனத்திற்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான்கு வகையான பெற்றோர் வழியே மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்.

முதல் வகை பெற்றோர் ஜெல்லி மீன் பெற்றோர். இவர்கள் குழந்தைகளை பெற்றெடுப்பதோடு சரி. சரியாக வளர்த்தெடுப்பதில்லை. இந்தப் பெற்றோரின் குழந்தைகள் பரிதாபத்துக்குரியவர்கள்.

இரண்டாம் வகை பெற்றோர் புலி பெற்றோர். குழந்தைகளை மிரட்டி பயமுறுத்தி வளர்த்து அனுப்புகிறவர்கள். இவர்களின் குழந்தைகளை நாம் கண்டிக்கக்கூட முடியாது. சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

Thai Pongal 2024: பஞ்சாங்கம் அடிப்படையில் பொங்கல் வைக்க உகந்த நேரம்; இதை  நோட் பண்ணுங்க!

மூன்றாம் வகை பெற்றோர் யானை பெற்றோர். இவர்கள் குழந்தைகளின் மீது அதீத அரவணைப்பு பாசம் காட்டுகிறவர்கள். குழந்தை வளர்ப்பில் அக்கறையோடு இருப்பார்கள்.

நான்காம் வகை பெற்றோர் ஹெலிகாப்டர் பெற்றோர். குழந்தைகளைத் தொலைவிலிருந்தும் வெளிநாட்டில் இருந்தபடியும் வளர்ப்பவர்கள். செல்வந்தர் வீட்டு குழந்தைகள். இவர்கள் படிப்பை விடவும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறையாக இருக்கிறவர்கள்.

இந்த நான்கு வகை குழந்தைகளுக்கும் ஒற்றைத் தாயாக நீங்கள் விளங்க வேண்டும்.

மணிமேகலை கையில் வைத்திருந்த அட்சயப்பாத்திரம் போல குழந்தைகள் மீது நீங்கள் காட்டும் அன்பு குறையாது இருக்க வேண்டும். குழந்தைகள் நம்மை விடவும் வயதில் குறைந்தவர்கள். ஆனால் நம்மை விடவும் அறிவாளிகள்.

அவர்கள் நம் நாட்டின் ஒளி விளக்கு. அவர்களின் ஒளிவெள்ளம் அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றே ஆசிரியர்களாகிய நமது கடமை.

கல்வி என்பது நடத்தையில் மாற்றம் கொண்டு வருவது. அந்த நடத்தை மாற்றம் அன்பை நோக்கியதாகவும் மாட்சிமை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இன்று பொங்கல் பொங்கியதைப் போன்று உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்று வாழ்த்தி . இந்த உயரிய வாய்ப்புக்கு நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!

(10.01.2026 புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் கல்லூரி முதல்வர் தமிழ்த்திரு அன்புச்செழியன் அவர்களின் தலைமையில் ஆற்றிய சிறப்புரை)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *