கவிதைகள்
“கொடுத்திடும் ஆசையே கோடியாம் இன்பம்” ….. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

பயிர்கள் உயிர்கள் புவியில் இருக்க
மழையும் வேண்டும் வெயிலும் வேண்டும்
வெயிலும் கூடி மழையும் கூடினால்
பயிர்கள் உயிர்கள் தவியாய் தவிக்கும்
மழையை வேண்டி வேண்டுதல் செய்வார்
முழைவிடும் பயிரை கண்டதும் மகிழ்வார்
அடைமழை பெய்து பயிரினை அழித்தால்
மழையே வேண்டாம் என்றே வேண்டுவார்
காய்கள் முற்றிக் கனியாய் ஆகிட
வெய்யில் வெப்பம் வேண்டுமே என்பார்
வெப்பம் மிகுந்து பயிரெலாம் கருகினால்
வேண்டா வெப்பம் என்றே வெதும்புவார்

வெய்யிலும் வேண்டும் மழையும் வேண்டும்
அளவோ டிருந்தால் அதிக பயனே
அளவுக்கு மிஞ்சினால் அழிவே விளையும்
பொருந்தும் வகையில் அமைந்தால் பலனே
மனித வாழ்வில் படிப்பினை முக்கியம்
அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தே பெருகும்
எதுவும் அளவாய் இருக்கும் போது
எல்லாம் சிறப்பாய் ஆகியே அமையும்
ஆசைப் படுவது அவசியம் ஆகும்
அடித்துப் பறிப்பது அறநிலை அல்ல
அழித்திடும் ஆசை ஆனந்தம் அளிக்கா
கொடுத்திடும் ஆசையே கோடியாம் இன்பம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ….. அவுஸ்திரேலியா
![]()
“எதுவும் அளவாய் இருக்கும் போது
எல்லாம் சிறப்பாய் ஆகியே அமையும்”
மழையோ , வெயிலோ, ஆசையோ, கோபமோ அளவு கடந்தால் அழிவது திண்ணம். அழகாய் சொன்ன அறிவுரைக்கு நன்றி.