முச்சந்தி

லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 17ஆவது நினைவுதினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமைப்பின் தலைவர் வா. கிருஷ்ணகுமாரின் தலைமையில், மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையின் தலைமை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, இனந்தெரியாத குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளி சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் தனது பத்திரிகையின் மூலம் தைரியமாக உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளராக லசந்த விக்கிரமதுங்க விளங்கினார்.

இவரின் ஊடக சேவையை கௌரவிக்கும் வகையில், ஊடக சுதந்திரத்திற்கான யுனெஸ்கோவின் குயிலமோ கேனோ விருது, நேஷனல் பிரஸ் கிளப் – பிரஸ் ஃப்ரீடம் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், இவர் கொல்லப்பட்ட பின்னரும் International Press Institute – World Press Freedom Heroes விருது வழங்கப்பட்டு சர்வதேச ரீதியாக கௌரவிக்கப்பட்டார்.

இவரது கொலையுடன் தொடர்புடைய பல சந்தேகநபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதுவரை இந்தக் கொலைக்குறித்த நீதி கிடைக்கப்பெறவில்லை. இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *