உள்ளுராட்சி சபைகளில் அட்டகாசம்; வடக்கில் சிலருக்கு எதிராக நடவடிக்கை!

வடக்கு மாகாணத்தில் யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சிசபை கூட்டங்களின்போது ஒருசில உறுப்பினர்கள் அரச அதிகாரிகளிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்டமை தொடர்பில் மாகாண ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் அரச தரப்பு எம்.பி மனோஜ் ராஜபக்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்களின் போது சில உறுப்பினர்கள் முறையற்ற வகையில் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளமை ஊடகங்களில் வெளியாகியுள்ளன.ஒருசிலர் அரச அதிகாரிகள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்
தென் மாகாணம் காலி மாநகர சபை, சப்ரகமுவ மாகாணம் கொடகவெல பிரதேச சபை மற்றும் வடக்கு மாகாணம் யாழ் மாநகரசபை, பருத்தித்துறை நகரசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மாகாண ஆணையாளர்களின் பணிப்புக்கு அமைய உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்கமைய கிடைக்கப்பெறும் இறுதி அறிக்கைக்கு அமைய மாகாண ஆளுநரினால் உறுப்பினர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
![]()