தேர்தல் களத்தை தயார் செய்கிறோம்; நாமல் கூறுகிறார்

தற்போது தாம் தேர்தல் களத்தைத் தயார் செய்யும் ‘பிட்ச்’சின் ஆரம்ப கட்டப் பணிகளை அமைக்கும் பணிகளிலேயே ஈடுபட்டுள்ளதாகவும், போட்டிக்கான அணியை, தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கவுள்ளதாகவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து புத்தாண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் நேற்று முன்தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் :
ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரே அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டவர்கள் என்பதால், அவர்கள் ஒன்றிணைவது அரசியல் ஜனநாயக ரீதியில் வரவேற்கத்தக்கது. அவர்களுக்குள் இணக்கப்பாடு ஏற்படுவது ஆரோக்கியமானது.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்திய அவர், வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு அரசாங்கம் பாரிய எதிர்பார்ப்புகளை வழங்கிய போதிலும், இன்னும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி முதலமைச்சர்களை நியமிக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தமக்கு நெருக்கமான அதிகாரிகளையும் வர்த்தகர்களையும் ஆளுநர்களாக நியமித்து மாகாணங்களை நிர்வகிப்பதன் மூலம் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை ஒருபோதும் தீர்க்க முடியாது எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலைத் தள்ளிப்போடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சில அதிகாரிகள் அரசாங்கத்திற்குச் சாதகமாகச் செயற்படுவதாகவும், மக்கள் சேவையை விடுத்து அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது விமர்சித்தார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் பாடசாலை மாணவர்களிடையே முறையற்ற இணையத் தளங்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமை குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட பாடநூல்கள் தொடர்பில் அந்த அமைச்சின் செயலாளரே பொலிஸில் முறைப்பாடு செய்வது ஒரு நகைப்புக்குரிய விசித்திரமான செயல் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க பொலிஸாரைப் பயன்படுத்துவதாகவும், இதனால் பொலிஸ் சேவையின் கௌரவம் முற்றாகச் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் கலாசாரத்திற்குப் பொருந்தாத விடயங்களைப் புகுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் எனவும், ஹெல கலாசாரத்தைச் சீரழிப்பதன் மூலம் நாட்டுக்கோ மக்களுக்கோ எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
![]()