போலி கிரிப்டோ முதலீட்டுத் தளத்தில் 900,000 டொலரை இழந்த 86 வயது மூதாட்டி

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி ஒருவர், போலி கிரிப்டோகரன்சி முதலீட்டுத் தளம் ஒன்றில் சுமார் 9 லட்சம் டொலர்களை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சால்ட் ஸ்டெ. மேரி பகுதியைச் சேர்ந்த ஜூடி ஸ்கீன் என்ற அந்த மூதாட்டிக்கு கடந்த 2025 கோடைக் காலத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது.
அதில் கனடாவின் முக்கிய அரசியல் தலைவரான மார்க் கார்னி பேசுவது போன்ற ஒரு வீடியோ இருந்துள்ளது.
இதில் 350 கனேடிய டாலர்களை முதலீடு செய்தால், அதற்கு பேங்க் ஆஃப் கனடா உத்தரவாதம் அளிக்கும் என்று அந்த வீடியோவில் அவர் கூறுவது போல் சித்திரிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போலியான ‘டீப்ஃபேக்’ வீடியோ என்பதை அறியாத ஜூடி, அந்த லிங்கை க்ளிக் செய்து முதற்கட்டமாக முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த சில நாட்களிலேயே, ஒரு நபர் ஜூடியைத் தொலைபேசியில் அழைத்து, “நீங்கள் முதலீடு செய்த பணம் மும்மடங்காக உயர்ந்துவிட்டது” என்று ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பிய ஜூடி, அடுத்த சில மாதங்களில் தன்னிடம் இருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் அதில் முதலீடு செய்துள்ளார். ஒருகட்டத்தில், தான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் (Condo) மீது 300,000 டொலர் அளவிற்கு அடமானக் கடன் வாங்கியும் அந்தப் போலித் தளத்தில் முதலீடு செய்துள்ளார்.
அந்த இணையதள கணக்கில் அவரது பணம் இரட்டிப்பாவது போல் காட்டியுள்ளது. ஆனால், இறுதித் தவணையை ஜூடி செலுத்தியவுடன், மோசடிக் கும்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதையும், தனது 9 லட்சம் டாலர் பணமும் பறிபோனதையும் உணர்ந்து அவர் நிலைகுலைந்தார்.
பணத்தை இழந்ததால் அன்றாட செலவுகளுக்குக் கூட வழியின்றி, வீட்டின் பராமரிப்புக் கட்டணம், காப்பீட்டுத் தொகைகள் அனைத்தும் செலுத்த முடியாமல் ஜூடி தவித்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலால் அவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கும் தள்ளப்பட்டார்.
இதனை அறிந்த அவரது நண்பர் பாட் ப்ரோபெர்ட் (Pat Probert), உடனடியாக அவருக்கு ஆதரவாக நின்று உதவிகளைச் செய்து வருகிறார்.
முதியவர்கள் யாராவது தனியாக இருந்தால், அவர்களது அவசரத் தொடர்பில் யாராவது ஒருவரை வங்கிக் கணக்குடன் இணைத்து அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்று ப்ரோபெர்ட் மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![]()