டக்ளஸை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சுகாஷ் தெரிவிப்பு

முன்னாள் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியுடன் மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்துடன் சேர்ந்து ஒட்டுக் குழுவாக இயங்கித் தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும், கடத்தல்களுக்கும், காணாமல் ஆக்கல்களுக்கும், வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய சிறீலங்காவின் ஆகப் பெரும் குற்றவாளிகளில் முதன்மையானவராவார் டக்ளஸ் தேவானந்தா.அவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய ஒருவராவார் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
டக்ளஸ் தேவானந்தா,உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்படக் குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேசக் குற்றவாளி ஆவார். சூளைமேடு கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தின் பகிரங்கப் பிடியாணை இன்னமும் நிலுவையிலேயே உள்ளது. அவரின் கைது வெறும் கண்துடைப்பாக மாத்திரமன்றி ஆயுளுக்கும் வெளியே வராதபடி அமைந்தால் மாத்திரமே சட்டவாட்சியின் பாற்பட்ட கைதாகக் கருதலாம்.
மாறாக ஒரு சில வாரங்களிலோ அல்லது ஒரு சில மாதங்களிலோ வெளியே வருவாரேயானால் பிள்ளையான், வியாழேந்திரன் வரிசையில் தமிழ்ப் புல்லுருவிகளைக் கைது செய்து சிறையிலடைத்து விட்டு அக் காலத்தினுள் அக் கட்சிகளின் அடியாட்களைத் தம்வசப்படுத்தும் தேசியமக்கள் சக்தி ஆட்சியாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பாகமாக மட்டுமே பார்க்க முடியும். பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()