இலங்கை

தெற்கில் சிங்களவர்களைத் தூண்டி வன்முறைக்குச் சதி; புரளி கிளப்பும் அர்ச்சுனா -சுமந்திரன் கண்டனம் 

தையிட்டி மக்கள் இவ்வளவு காலமும் தாங்களுடைய உரிமைக்காக தான் போராடுகிறார்கள் தவிர எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பொய்யான அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா விடுத்து இருக்கிறார். இப்படியான புரளியை கிளப்பி தெற்கிலே இருக்கும் சிங்கள பௌத்த மக்களுடைய உணர்வுகளைத் தூண்டிவிட்டு நாட்டிலே ஒரு வன்முறை தூண்டுவதற்கான ஒரு செயற்பாடாக இதனை பார்க்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்து தொடர்பாக பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டியில் சட்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அது சட்டவிரோதமான விகாரை எனச் சொல்லி வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதை சட்டவிரோத கட்டிடம் என அறிவிப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

சட்டவிரோதமான கட்டடத்துக்கு எதிராக மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டம் எந்த வகையிலும் வன்முறை ஆகாது.

இது,தொடர்ச்சியாக தனியார் காணியிலே அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட ஒரு விகாரை தொடர்பான விடயம். பௌத்தர்கள் வாழாத இடத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக இது செய்யப்படுகிறது. இது பௌத்த சமயத்தை இழிவுபடுத்துவதற்கான வேலை. ஆகவே அந்தப் பகுதி மக்கள், காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொள்கின்றார்கள். சாத்வீகப் போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை. அதை அவர்கள் செய்வார்கள்.

இதற்கு மாறக வன்முறையை தூண்டி விகாரைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடப் போகிறார்கள் என்று பொய்யாக வதந்திகளை பரப்புவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஆகையினால் பொய்யான அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா விடுத்திருக்கிறார். அந்த மக்கள் இவ்வளவு காலமும் தாங்களுடைய உரிமைக்காக தான் போராடுகிறார்களே தவிர எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. ஆகவே இப்படியான புரளியை கிளப்பி தெற்கிலே இருக்கும் சிங்கள பௌத்த மக்களுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு நாட்டிலே ஒரு வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு செயற்பாடாக தான் இதனை பார்க்கிறேன் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *