கட்டுநாயக்கா வந்த கட்டார் விமானத்தில் வெடிகுண்டா!; தீவிர தேடுதலின் பின் புரளி எனக் கண்டறிவு

டோஹாவிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்கா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக மின்னஞ்சல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இருப்பினும், வெடிபொருட்களோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை விமான நிலைய அதிகாரிகள் பின்னர் உறுதிப்படுத்தினர்.
போயிங் 787 கட்டார் ஏயர்வேஸ் விமானம் QR-664, நேற்று 28 காலை 8.27 மணிக்கு 245 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது.
விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானம் தரையிறங்குவதற்கு முன்,மேற்படி விமானத்தில் குண்டுகள் இருப்பதாகக் கூறி விமான நிலைய மேலாளருக்கு மின்னஞ்சல் எச்சரிக்கை வந்தது. இதன் விளைவாக, அதிகரித்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
தரையிறங்கியதும், விமானம் நைகண்டா பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட தரிப்பிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடுமையான பாதுகாப்பின் கீழ் அனுப்பப்பட்டது. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர், அதன் பிறகு விமானம், விசேட பயிற்சி பெற்ற மோப்ப நாய்களின் உதவியுடன் விமான நிலையத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவால் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
விரிவான தேடுதலுக்குப் பிறகு, வெடிக்கும் சாதனங்கள் அல்லது ஆபத்தான பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பின்னர் விமானம் கட்டுநாயக்க விமான நிலைய பொது விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
காலை 10.15 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து டோஹாவிற்கு விமானம் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக அது தாமதமாகி இறுதியில் நேற்று பிற்பகல்1.07 மணிக்கு புறப்பட்டது.
பயணிகள், பணியாளர்கள் மற்றும் விமான நிலைய செயல்பாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்
![]()