கவிதைகள்

வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம்!… கவிதை… ஜெயராமசர்மா

அழவைத்து வந்ததெலாம் அழவைக்க வைத்துவிடும்
நிலமீது நிம்மதியை நித்தமுமே குலைத்துவிடும்
கண்ணீரை வரவழைத்தால் கண்ணீரே முதலாகும்
மண்மீது மற்றவரை வதைத்துவிடல் முறையல்ல

ஏமாற்றிப் பறித்தால் எதுவுமே நிலைக்காது
எக்கணமும் திருட்டு இருட்டையே காட்டிவிடும்
பொய்யோடு களவென்றும் உய்யும்வழி காட்டாது
உய்யும்வழி காண உண்மையாய் இருந்திடுங்கள்

ஆசையில்லா மனம் யாருக்குத் தானிருக்கு
அவனியிலே வாழ்வார்க்கு ஆசைக்கோர் அளவில்லை
ஆசையினால் விளைகின்ற அத்தனையும் விட்டுவிட்டால்
அவனியிலே வாழ்க்கை ஆனந்தமாய் இருக்கும்

திருமூலர் செப்பினார் பட்டினத்தார் பகர்ந்தார்
நால்வரும் மொழிந்தார் நல்வழியும் சொன்னார்
ஒளவையும் சொன்னார் ஆளுமைகள் பலசொன்னார்
உள்ளத்தில் பதிக்காமல் இருந்திடுதல் முறையாமோ

உறங்கினால் விழிப்போமா யாருக்கும் தெரியாது
ஓராயிரம் கனவை உள்ளத்தில் சுமக்கின்றோம்
வஞ்ச மனத்துடனே வாழ்வது முறையாமோ
நஞ்சகற்றி வாழ்ந்தால் நாளுமே பேரின்பம்

மனமகிழ வாழ்த்துவோம் வாஞ்சையுடன் அணைப்போம்
தினமே நல்லதைத் தேர்ந்துமே செய்திடுவோம்
புலனைந்தும் நன்னெறியில் போகவே வைத்திடுவோம்
நலமுடைய நல்வாழ்வு நமைத்தேடி வந்துவிடும்

வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம்
வளமோடும் நலமும் வாய்க்குமே எங்களுக்கு
இனியவை என்றைக்கும் இன்பத்தையே கொடுக்கும்
எல்லோரும் அன்பாலே இணைவதுதான் பேரின்பம் !

image1.jpeg

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண்,  அவுஸ்திரேலியா

Loading

2 Comments

  1. “அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” என்றும், “நெருநல் உளனொருவன் இன்றில்லை” என்றும் வள்ளுவர் உரைத்ததை வாழும் மாந்தர் மனம் கொள்ள உரைத்தது நன்று.

  2. “அழக்கொண்ட எல்லாம் அழப்போம்” என்றும்,
    “நெருநல் உளனொருவன் இன்றில்லை”
    என்றும் வள்ளுவர் உரைத்ததை வாழும் மாந்தர் மனம் கொள்ள உரைத்தது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *