புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் இதனால் இதனூடாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய பயங்காரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கம் குறிப்பிடப்படவில்லை. இதனால் பயங்கரவாதி என்பவர் யார்? பயங்கரவாத செயற்பாடு என்றால் என்ன? என்பன தொடர்பில் தெளிவற்ற நிலைமையே காணப்படுகின்றது. அதாவது அரசியல் நோக்கமொன்றை நிறைவெற்றிக்கொள்ளவதற்காக அப்பாவி மக்களை கொலை செய்தல், அரச மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துவதை பயங்கரவாதமாக குறிப்பிடலாம். இந்நிலையில் பயங்கரவாதத்தை இவ்வாறாக குறிப்பிடாதிருந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படலாம். அரசாங்கத்திற்கு எதிராக எதாவது போராட்டம் நடத்தப்பட்டால் இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இதேவேளை இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு குற்றங்கள் தண்டனை சட்டக் கோவையில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படாத விடயங்களே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் பல்வேறு வகையிலும் அரசாங்கத்தினால் அச்சுறுத்தப்படலாம். குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை அல்லது அழுத்தங்களை ‘மக்களை அச்சுறுத்தல்’ என வகைப்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைகளை மிக எளிதாகப் பறிக்க முடியும். இதன்படி இந்தச் சட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அழுத்தம் கொடுப்பது குற்றமாக கருதப்படும். இதனால் அதில் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் குறிப்பிடப்பட வேண்டும் என்றார்.
![]()