பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 03 … செங்கதிரோன்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அண்மைக்காலமாக குறும்பட – திரைப்படத் தயாரிப்புகள் முனைப்புக்கொண்டுள்ளன.
‘தேவா சினி புரடக்ஷன்’ தயாரிப்பில் தேவ அலோசியஸின் கதை / திரைக்கதை / வசனம்/ இயக்கத்தில் உருவான ஒரு மணித்தியால ‘சாவடி’ எனும் திரைப்படத்தை மட்டக்களப்பு, கல்லடியில் அமைந்துள்ள ‘சுகந்தி’ படமாளிகையில் 30.07.2025 அன்று மாலை 6.30 இற்குப் பார்க்கக் கிடைத்தது. இலங்கை முழுவதும் 26.09.2025 அன்று வெளியிடப்பெற்ற இத்திரைப்படம் நான் சென்று பார்த்த தினத்திற்கு முன்பே 27.09.2025 அன்று ‘சுகந்தி’ படமாளிகையில் பி.ப 4.00 மற்றும் மாலை 5.30 க்கு இரண்டு காட்சிகளும் 28.09.2025 அன்று மாலை 5.00 மணிக்கு ஒரு காட்சியும் ஒடியுமிருந்தது.
இத்திரைப்படத்தை மட்டக்களப்பிலும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் வெளியிடும் உரிமையை ‘சங்கவி பிலிம்ஸ்’ நிறுவனம் பொறுப்பெடுத்து ஒரே நாளில் 16 திரையரங்குகளில் வெளிவந்திருந்தது.
பின்னர் திருகோணமலை ‘நெல்சன்’ திரையரங்கில் 10.10.2025 அன்று மாலை 5.30 க்கும், வவுனியா ‘அமுதா’ திரையரங்கில் 15.11.2025 அன்று மாலை 5.00 க்கும் யாழ்ப்பாணம் ‘ராஜா’ திரையரங்கில் 25.11.2025 அன்று மாலை 5.00 க்கும் காண்பிக்கப்பெற்றது.
ஈழத்தின் திரைப்பட முயற்சியில் கிழக்கிலிருந்து உருவான முதலாவது திரைப்படமாகவும் ‘சாவடி’யைப் பார்க்கலாம்.
‘சாவடி’ 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியைக் கதைக்களமாகக் கொண்டது.
உள்@ரில் சேவையில் ஈடுபடும் ‘பஸ்’ ஸொன்றினுள்ளும் அது தரித்துச் செல்லும் இடங்களில் வெளியிலும் நடக்கும் பயண அனுபவங்களை ஒரு கதைப் பின்னலினூடாகக் காட்சிப்படுத்துகிறது.
‘பஸ்’ஸில் பயணிக்கும் பல்கலைக்கழக மாணவனுக்கும் மாணவிக்கும் இடையே முகிழும் பருவவயதுக் காதல்தான் கதையின் கரு.
வார்த்தைப் பரிமாற்றங்கள் எதுவுமேயில்லாமல் உடல்மொழியாலே மாணவன் தனது காதலை வெளிப்படுத்துவதும் மாணவியும் தனது சம்மதத்தை உடல்மொழியாலே தெரிவிப்பதும் கலா நேர்த்தியுடன் காட்சிப்படுத்தப்பெற்றுள்ளது. மாணவன், மாணவியாக நடித்த இருவரதும் நடிப்பு உள்ளத்தைத் தொடுகிறது. அதிலும் மாணவி ஒரு படிமேல்.
கதையின் கதாநாயகன் கதாநாயகிகளான மாணவன் மாணவி மட்டுமல்ல பஸ் சாரதி, மற்றும் பஸ் நடத்துனர் உட்படப் ‘பஸ்’ஸில் பயணிக்கும் பயணிகள் மற்றும் படத்தில் வரும் பாத்திரங்கள் யாவருமே மனதில் பதிகிறார்கள்.
படத்தில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களும் அன்று நிலவிய வாழ்க்கைக் கோலங்களின் பல
விடயங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
‘பஸ்’ பயணத்தின்போது இராணுவச் சாவடியொன்றில் நிகழும் ஒரு துன்பியல் நிகழ்வுடன் கதை நிறைவுறுகிறபோது கண்கள் கலங்குகின்றன. இராணுவச் சாவடியில் மாணவன் சுட்டுக் கொல்லப்படுவதும் அந்த இழப்பின் மாறா வலியுடனும் அக் காதல் நினைவுகளுடனும் காலம் முழுவதும் அம்மாணவி வாழ்வதைக் காதலனின் கடிதத்தின் மூலமாக ஆரம்பத்தில் காட்டிப் பின் ‘பிளாஸ் பாக்’ (Flash Back) கில் கதை ஓடுவது நல்ல உத்தி.
ஒளிப்பதிவு – இசை – படத்தொகுப்பு என எல்லாமே குறைசொல்லாது பாராட்டும்படியாகவே உள்ளன. இத்திரைப்படம் குறித்த மேலதிக விடயங்கள் சிலவற்றையும் பகிரவேண்டியுள்ளது.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் இது ஒரு புதிய முயற்சி.
வழமையான தென்னிந்திய திரைப்படங்களிலிருந்து வேறுபட்டதொன்றாக இது விளங்குகிறது.
ஒரு வயதுமுதல் 82 வயதுவரை சுமார் 35 நடிகர்களை உள்வாங்கி இத்திரைப்படத்தின் பிரதான காட்சிகள் இரண்டு நாட்களிலேயே படமாக்கப்பட்டுள்ளன.
Single shot எனப்படும் ஒளிப்பதிவு(Camera Technique) முறையைப் பல இடங்களில் கையாண்டிருப்பது சிறப்பு.
மண்ணின் நிகழ்வுகளைத் துணிந்து யதார்த்தப் பண்புகளுடன் படமாக்கியிருப்பதும் அதற்கு அரசு அங்கீகாரம் வழங்கியிருப்பதும் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றம்.
திரைக்கதை முழுவதும் ஒரு ‘பஸ்’ பயணத்தில் ஆரம்பித்து ‘பஸ்’ பயணத்திலேயே நிறைவுறுகிறது.
மேலும் இத்திரைப்படத்தின் கதை / திரைக்கதை/ வசனம் / இயக்கம் அத்தனையையும் ஏற்றுள்ள தேவ அலோசியஸ் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்.
தேவ. அலோசியஸ்
முழுப்பெயர் : தேவநாயகம் அலோசியஸ்
பிறந்த இடம் : வாகரை
ஆரம்பக்கல்வி : மட்/வாகரை மகா வித்தியாலயம்
இடைநிலை மற்றும் உயர் தரம் : மட்/புனித மிக்கேல் கல்லூரி
இளமானிப்பட்டம் : கிழக்குப் பல்கலைக் கழகம்
முதுமானிப் பட்டம் : கிழக்குப் பல்கலைக் கழகம்
கல்விமானிப் பட்டம் : இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
மனித உரிமைக்கான டிப்ளோமா : இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம்
சிறு வயதில் மேடை நாடக நடிகர்
பாடசாலை/ பல்கலைக்கழக நாட்களில் : மேடை நாடக எழுத்தாளர் / சிறுகதை எழுத்தாளர்/ புதுக்கவிதையாளர்
பட்டப்படிப்பை முடித்த பின்னர் :
தேசிய மட்டங்களில் 19 நாடகம், சினிமா அரச விருதுகளையும், பணப்பரிசில்களையும் வென்றெடுத்துள்ளார்.
பின்னர் சினிமா மீதான ஆர்வத்தால், சிங்களத் திரைப்படங்கள் உருவாகும் முறையை வள்ளுவன் சுவாமிநாதன் (முன்னாள் திருமறைக் கலாமன்ற பொறுப்பாளர்) அவர்கள் உதவியுடன் பார்வையிட்டு, அனுபவங்களைப் பெற்றுப் பின்னர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்தார்.
தொடர்ந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் தேசிய மட்டத்தில் குறும்படப் பிரதி உருவாக்கப்போட்டியில் முதலிடம் பெற்ற பின்னர் தமிழ் நாட்டிற்குச் சென்று பாலுமகேந்திர சினிமாப் பட்டறையில் சினிமாப் பயிற்சி இயக்குனர் சமுத்திரக்கனி, இயக்குனர் ஹரி, நடிகர் நாசர், சசிகுமார், கனல் கண்ணன், ஆகிய பலரோடு பழகி அவர்களுடன் உரையாடி அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு அங்கு ஒரு சில குறும்படம், மற்றும் சினிமாக்களில் சிறுகாட்சிகளில் நடித்துவிட்டு நாடு திரும்பினார்.
பின்னர் தற்போதுள்ள திரைப்படக்கூட்டுத்தாபனத் தலைவரிடம் மூன்று நாட்;கள் கொண்ட வதிவிடச் சினிமாப் பட்டறைகளில் மூன்று வருடங்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஞானதாஸ் காசிநாதனிடமும் சினிமாவைக் கற்றுக் கொண்டுள்ளார். அவ்வப்போது,
நடைபெற்று வரும் சினிமா தொடர்பான பயிற்சிகளில் இன்றும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனாகவே உள்ளார்.
கடந்த வருடம் ஆங்கில சினிமாவான Influencer திரைப்படத்தில் நடிக்கும்போது Found Footage Styles Movie Making இனையும் கற்றுக் கொண்டார். இந்திய திரைப்பட இயக்குனர் மிஸ்கின் அவர்களின் இருபது படங்களில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய அனுபவமிக்க திரு.ஹரிசங்கர் அவர்களிடமிருந்தும் ஒளியமைப்பு சம்பந்தமான தொழில்சார் விடயங்களையும் விபரமாகத் தெரிந்து கொண்டார்.
மேலும் குறும்படம் – எழுத்தியக்கம் – நாடகத் துறைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதான ‘தர்மபிரபாஸ்வரா விருது’ (2019) பெற்றுக்கொண்டவராகவும், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கிய ‘வித்தகர் விருது’ (2024) பெற்றுக் கொண்டவராகவும் விளங்குகிறார். பல குறும்படங்கள், ஆவணப்படங்கள், சினிமாக்களை உருவாக்கியுள்ள இவர் 25வது படமாக ஈழத்துச் சினிவாக “சாவடி” திரைப்படத்தை உருவாக்கினார்.
இதற்கு முன் தேவ அலோகியஸின் எழுத்துருவிலும் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான படங்களின் வரிசை வருமாறு
1. பிளவுகள் ( 2001) 2. கிழக்குவானம் (2005) 3. அம்மா (2006)
4. வீரன் (2007) 5. முற்றுப்புள்ளி (2008) 6. செல்லம் (2009)
7. கத்திக்குத்துக்கந்தன் (2009) 8. கிழக்கிலங்கை – ஆவணப்படம் (2010)
9. மக்கள் சபை – ஆவணப்படம் (2010) 10. சின்னான் (2011)
11. Cricket of East – ஆவணப்படம் (2011) 12. பாதி (2012) 13. பிஞ்சு (2013)
14. 50 ரூபாய் (2015) 15. பார்வை (2016) 16. வெற்றுத்தோட்டா (2017)
17. ஆசை (2018 ) 18. We can do – ஆவணப்படம் (2019)
19. வேலை (2020) 20. இரட்டைக் கிழவி (2020) 21. Money Order (2021)
22. மனசு (2020) 23. பயம் (2022) 24. தன்னைத் தந்தவன் (2023)
சாவடி திரைப்படத்தின் கலைஞர்கள்:
தயாரிப்பு:
தேவா சினி புரடக்ஷன்
தயாரிப்பாளர்கள்
T. அருட்கவிதா
ஏ. திவதர்சினி
தேவ. அலோசியஸ்
D.O.P- ஒளிப்பதிவு
N. நிருசாந்த்
சார்லஸ் பெர்னாண்டோ
கிறேசன் பிரஷாந்த்
எடிட்டிங் – படத்தொகுப்பு
கிரேசன் பிரசாந்த்
Colouring – நிறச்சேர்க்கை
சார்லஸ் பெர்னாண்டோ
BGM, SFX & DUBBING – – பின்னணி இசை – ஒலிச்சேர்க்கை – வசன ஒலிபரப்பு
A.எமில் பிரியானந்த்
பாடல்கள் / இசை
நிக்கி. M
ஒப்பனை / உடை வடிவமைப்பு
ஏ. திவதர்ஷினி
VFX & பப்ளிசிட்டி – ஒளிச்சேர்க்கை , விளம்பரம்
புஸ்பகாந்த். G
கலை
கே. புவி
கதை / திரைக்கதை / வசனம் / இயக்கம்
தேவ.அலோசியஸ்
நடிகர்கள்
சமுத்ரா – கதாநாயகி (மாணவி)
துஜா – கதாநாயகன் (மாணவன்)
முரளீதரன் (வில்லூர் பாரதி) – ‘பஸ்’ சாரதி
யுவநாதன் – ‘பஸ்’ நடத்துனர்
நவரட்ணராஜா – பயணி
செந்தூரன் – பயணி
கஜேந்தினி – பயணி
சிவலிங்கம் – பயணி
சத்யா – பயணி
ஜெஸ்மின் – பயணி
கார்த்தி – பயணி
ஜெனிசா – பயணி
குணப்பிரியன் – பயணி
நவாஸ்கர் – பயணி
பவித்ரா – பயணி
விஜயா – பயணி
கெர்வின் – பயணி
ஜெயராணி – பயணி
மனோதிர் – பயணி
இன்ஸ்டன் – பயணி
வரதன் – பயணி
கனிமொழி – பயணி
புவிராஜ் – பயணி
பசோரணன் – போராளி
டிலக்சன் – போராளி
டிவ்யாம்சன் – போராளி
தனுஜன் – போராளி
ரகுதாஸ் – பெட்டிக்கடை முதலாளி
ஜெசாந்த் – பெட்டிக்கடை உதவிச் சிறுவன்
நிருஜன் – இராணுவச் சாவடிப் பொறுப்பாளர்
தர்சினி – இராணுவ வீரர்
அவ்ரிட் – இராணுவ வீரர்
கௌசீகன் – இராணுவ வீரர்
லோகிதராஜா – இராணுவ வீரர்
கயல் – காலம் கடந்த கதாநாயகி
சாவடி திரைப்படத்துக்கு இதுவரை கிடைத்த விருதுகள்
- தேசிய மட்டம், ‘குவியம்’ விருது
- சிறந்த ஒப்பனையாளர்
- சிறந்த கலை இயக்குனர்
- சிறந்த துணைநடிகர்
- சிறந்த VFX
சர்வதேச விருது CINE BHARATH GLOBAL FILM FESTIVAL
- சிறந்த இயக்குனர்
- சிறந்த திரைப்பட் (Feature Film)
- சிறந்த கதை
- சிறந்த நடிகைசர்வதேச விருது, ONE LEAF INTERNATIONAL FILM FESTIVAL
- சிறந்த இயக்குனர்
- சிறந்த திரைக்கதை
- சிறந்த நடிகை
- சிறந்த குழந்தை நட்சத்திரம்
- சிறந்த படத்தொகுப்பாளர்
- சிறந்த ஒப்பனையாளர்
- சிறந்த VFX
- சிறந்த பாடலாசிரியர்
- சிறந்த பாடகர்
- சிறந்த திரைப்படம்
மட்டக்களப்பில் சிறந்த திரைப்படக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கலை உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய திரைப்படம் ‘சாவடி’ என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல. இலைமறைகாயாக இன்னும் எத்தனையோ ஆற்றல்மிக்க கலைஞர்கள் வாய்ப்பின்றி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் வசதிபடைத்த கிழக்கு மண்ணை நேசிக்கின்ற கலை இலக்கிய ஆர்வலர்கள் இவ்வாறான திரைப்படத் தயாரிப்புகளுக்கு நிதி அனுசரணை வழங்கத் தாமாகவே முன்வர வேண்டும். அதுகூட இம் மண்ணுக்குச் செய்கின்ற மகத்தான சேவைகளிலொன்றாகும்.
![]()